Published : 10 Dec 2020 04:43 PM
Last Updated : 10 Dec 2020 04:43 PM

எனது இதயத்துக்கு நெருக்கமான படம் 'கர்ணன்': மாரி செல்வராஜ்

சென்னை

எனது இதயத்துக்கு நெருக்கமான படம் 'கர்ணன்' என்று இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, கெளரி கிஷன், லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் பெரும்பகுதி படப்பிடிப்பைத் திருநெல்வேலிக்கு அருகில் பிரம்மாண்டமான கிராமம் போன்ற அரங்குகள் அமைத்துப் படமாக்கியுள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், சென்னையிலேயே அரங்குகள் அமைத்து தனுஷ் சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியது படக்குழு. அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட அரங்குகளில் தொடங்கியது. அதன் படப்பிடிப்பும் நேற்றுடன் (டிசம்பர் 9) முடிந்தது.

'கர்ணன்' படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் நன்றி தெரிவித்திருந்தனர். தற்போது படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிறிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"எனக்கு முக்கியமான, எனது இதயத்துக்கு நெருக்கமான திரைப்படமாக நான் நினைப்பது கர்ணனை. இந்தக் கடினமான, நிச்சயமற்ற காலகட்டத்தில் என்னிடமிருந்தும், என்னுடன் இந்தப் பயணத்தில் பயணித்த அனைவரிடமிருந்தும் அதிக அளவு அக்கறையை நிர்பந்தித்த ஒரு படம்.

இந்தப் படத்தை அரவணைத்த, சாத்தியமாக்கிய தனுஷ், என் தயாரிப்பாளர், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் எனது கிராம மக்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த மிக உயர்ந்த, என்றும் நினைவிலிருக்கும் பயணத்தைச் சாத்தியமாக்கியதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்".

இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x