Published : 30 Sep 2020 08:28 AM
Last Updated : 30 Sep 2020 08:28 AM

சுஷாந்த் மரணத்துக்கு விஷம் காரணமல்ல: எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தகவல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரி்த்து வருகிறது. சுஷாந்தின் காதலி ரியாவிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரியா உள்ளிட்ட பலர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணத்தில் விஷப் பொருளுக்கான ஆதாரம் இல்லை என சிபிஐ-க்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து அதிகார வட்டாரங்கள் கூறும்போது, “சுஷாந்தின் உடலை மும்பை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை செய்தது. அதில் இருந்த சில குறைபாடுகளை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. என்றாலும் சுஷாந்த் மரணத்தில் விஷப் பொருளுக்கான ஆதாரம் இல்லை என கூறியுள்ளது. எய்ம்ஸ் அறிக்கை இறுதியானது. அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் சிபிஐ விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மும்பை காவல் துறை தெரிவித்தபடி சுஷாந்த் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக கருதி சிபிஐ தனது விசாரணையை தொடர வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தன.

இந்த வழக்கில் போதைப் பொருள் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) போலீஸார், பிரபல இந்தி நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், ஷிரத்தா கபூர் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். மேலும் அவர்களது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் மும்பையிலுள்ள போதைப் பொருள் தடுப்புப் போலீஸார் அலுவலகத்துக்கு வந்த தீபிகா படுகோனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தீபிகா அளித்த பதில்களில் போலீஸாருக்கு திருப்தியில்லை என்று தெரியவந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிந்துவிட்டாலும், மீண்டும் அவரிடம் விசாரணையை என்சிபி போலீஸார் தொடர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x