Published : 04 Sep 2020 05:47 PM
Last Updated : 04 Sep 2020 05:47 PM

பொய்களை நம்பாதீர்கள்; பாலிவுட் பாதுகாப்பான துறைதான்: இந்தியத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு விரிவான விளக்கம்

மும்பை

பாலிவுட் என்பது பணியாற்றப் பாதுகாப்பான துறைதான் என்றும், துறையைக் குறிவைத்துச் சொல்லப்பட்டும் குற்றச்சாட்டுகள் பொய் என்றும் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் நிலவி வருவதாகவும், இங்கு பின்புலம் இல்லாதவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக நடிகை கங்கணா ரணவத் பாலிவுட்டின் பணிச் சூழல் குறித்தும், செல்வாக்குடையவர்களின் மனநிலை குறித்தும் கடுமையாகச் சாடிப் பேசி வருகிறார்.

மேலும், பாலிவுட்டுக்கு நிழலுலக மாஃபியாவுடன் தொடர்புள்ளது, போதை மருந்து பழக்கமிருக்கும் நடிகர்கள் அதிகம், அதற்கான பார்ட்டி அடிக்கடி நடக்கும் என்றும் கங்கணா அடுத்தடுத்து அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

இதனால் கடந்த சில மாதங்களாகவே தேசிய மற்றும் இந்தி செய்தித் தொலைக்காட்சிகளில் பலவும் தொடர்ந்து இதே விஷயத்தைப் பற்றியே பரபரப்பாக பேசி வருகின்றன. பாலிவுட் என்பதே பிரதான பேசுபொருளாக, அதிகம் விமர்சிக்கப்பட்ட துறையாக மாறியது. தற்போது இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின் முக்கியக் கருத்துகளின் சுருக்கம் பின்வருமாறு:

''திறமையான இளம் நடிகர் ஒருவரின் மரணத்தை ஆயுதமாக வைத்து சிலர் துறையையும், அதன் உறுப்பினர்களையும் அவதூறு பேசி வருகின்றனர். வெளியிலிருந்து பின்புலம் இன்றி வருபவர்களுக்கு இந்தத் துறை மோசமானது, அவர்களை அவமதித்துக் கேலி பேசும் இடம் இது. போதைப் பொருளும், குற்றச் செயல்களும் திளைக்கும் துறை என்கிற ரீதியில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள், அவர்களின் பார்வையாளர்களை, வாசகர்களை, பார்வைகளை அதிகரிக்க, சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன.

ஆனால் இவை உண்மையல்ல.

எந்தத் துறையையும் போல சினிமாத் துறையிலும் பிரச்சினைகள் உள்ளன. எந்தத் துறையிலும், அதைத் தீர்க்க தொடர் முயற்சிகள் நடக்க வேண்டும். இதை வைத்து ஒட்டுமொத்தத் துறையையும் பொதுவாகக் குற்றம் சாட்டுவது, யதார்த்தத்தின் தவறான சித்தரிப்பு.

இந்தத் துறையின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. பல கோடி மக்களுக்கு இவ்வளவு வருடங்களாக பொழுதுபோக்குத் தந்து வருகிறது. இந்த தேசத்துக்கு உற்சாகத்தையும், பெருமையையும் தேடித் தந்துள்ளது. பலதரப்பட்ட பின்னணிகளில் இருந்து திறமைகளை ஊக்குவித்துள்ளது.

தேசத்துக்குத் தேவை இருக்கும் சமயத்தில், நேரம், நிதி, பெயர் எனப் பல வகைகளில் பங்காற்றியுள்ளது. யாருடைய தனிப்பட்ட அனுபவங்களையும் நாங்கள் மறுக்கவில்லை. கண்டிப்பாக பலர் கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் எந்தத் துறையிலும் புதியவர்கள் எதிர்கொள்ளும் விஷயமே இது.

வெளியிலிருந்து வருபவர்களை இந்தத் துறை தடுக்கிறது என்கிற குற்றச்சாட்டும் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகிறது. இது கண்டிப்பாக உண்மையல்ல. நடிகர்கள், இயக்குநர்கள், கதாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் என திரைத்துறையின் ஒவ்வொரு அங்கத்திலும் ஏராளமான, இதற்கு முன் சுத்தமாக துறைக்குத் தொடர்பில்லாத திறமைகள் வளர்ச்சி பெற்றுள்ளன. பின்புலம் உடையவர்களுக்குக் கண்டிப்பாக முதல் வாய்ப்பு கிடைப்பதில் சலுகை உள்ளது. ஆனால் அதன் பிறகு எல்லாமே தனிப்பட்ட திறமை, கடின உழைப்பு மட்டுமே.

திரைத்துறைக்குள் பணியாற்ற விரும்பும் அத்தனை பேருக்கும் இதை நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். தவறான, பார்வைகளை ஈர்க்க மட்டுமே சொல்லப்பட்டும் பரபரப்பான செய்திகளை வைத்து தவறாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடம் உங்கள் மதம், பாலினம், சாதி, பொருளாதார நிலை ஆகிய எதையும் பார்க்காமல், திறமை, தொழில் தர்மம், ரசிகர்களை ஈர்க்கும் திறன் ஆகியவற்றுக்கு மதிப்பும், வெகுமதியும் தரும்.

வெளியிலிருந்து வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு கிடைப்பது கடினம்தான் என்றாலும், தொடர் முயற்சியும், சிறிய அதிர்ஷ்டமும் இருந்தால் உங்களால் வெற்றி பெற முடியும். அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் துறையில் உள்ளன.

இந்தக் கடினமான காலகட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பைக் காட்டாமல், பிளவுபடாமல், ஒற்றுமையாக இருப்போம். துறையைச் சேர்ந்தவர்களில் பலரும் இந்த வாதத்தில் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றனர். இதில் குறிப்பாகப் பெண்களுக்குப் பாலியல் அச்சுறுத்தல்களும், கொலை மிரட்டல்களும் வருகின்றன. இது ஏற்க முடியாத ஒன்று. கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்.

ஊடகங்கள் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும். நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது. விளம்பர வருவாய், பார்வையாளர் எண்ணிக்கையைத் தாண்டி சில முக்கிய விஷயங்கள் உள்ளன. பொதுவான மனித கண்ணியத்தைப் போல. நமக்கு இன்னும் கொஞ்சம் கண்ணியம் உள்ளது என்பதைக் காட்டுவோம்''.

இவ்வாறு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x