Published : 03 Aug 2020 14:53 pm

Updated : 03 Aug 2020 14:53 pm

 

Published : 03 Aug 2020 02:53 PM
Last Updated : 03 Aug 2020 02:53 PM

மீண்டும் ஒரு திருப்பம்: புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்க உறுதியாக உள்ளதாக பாரதிராஜா கடிதம் 

a-twist-again-bharathiraja-s-letter-that-he-is-determined-to-start-a-new-association

சென்னை

தயாரிப்பாளர் சங்கம் முடங்கியுள்ள நிலையில் இது செயல்பட வேண்டிய காலகட்டம். கரோனா வைரஸால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையுலகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது. கையைப் பிசைந்துகொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் புதிய சங்கம் அமைக்கும் முயற்சி குறித்து இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடக்கவிருந்த சூழ்நிலையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத் தலையீட்டின்பேரில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


தேர்தலில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி ஆகியவை போட்டியிட உள்ளன. இன்னும் 2 அணிகள் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக சங்கமொன்றை உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சங்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பதவி வகிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தச் செய்தி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. இந்நிலையில் பாரதிராஜா ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ''சமீபகாலமாக பல்வேறு ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப் பட்டியல் பற்றியும் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது" என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கம் புதிதாக அமைய வாய்ப்பில்லை எனக்கூறி வந்த பாரதிராஜா, திடீர் திருப்பமாக புதிய தயாரிப்பாளர் சங்கம் உருவாவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா எழுதிய கடிதம்:

“என் இனிய தயாரிப்பாளர்களே...

கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே.

அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்... புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது.

தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும்.

தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாததால், அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம் .

ஆனாலும், நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது.

கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன்.

அடிப்படைப் பேச்சுவார்த்தைகளின் போதே செய்திகள் காற்றில் கசியத் தொடங்கி சில கருத்து வேறுபாடுகளைப் பரப்பத் தொடங்கிவிடுகின்றன.

முழுமையாக முடிவெடுக்கும் முன் காதுகள் முந்திக் கொண்டுவிடுகின்றன.

இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது.

ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும். நாம் செயல்பட்டே ஆண்டுகளாகிவிட்டன.

பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக்குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம்.

தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை.

இது செயல்பட வேண்டிய காலகட்டம். கரோனாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது.

கையைப் பிசைந்துகொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம்.

இதைப் பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம். சில முக்கிய முடிவுகளுக்காய் உழைக்க இருக்கிறோம்.

நிறைவாகச் சொல்வதென்றால், இப்பிறப்பின் செயல்பாடுகள் சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது!

பிள்ளைகளும், தோழர்களும், இணை வயதினரும், என்னை மூத்தோரும் இந்த அவசியத்தை இக்கட்டான சூழல் கருதி புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

நன்றி!

பாசத்துடன்...

உங்கள் பாரதிராஜா”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் புதிய தயாரிப்பாளர் சங்கம் விரைவில் உருவாவது உறுதியாகியுள்ளது.

தவறவிடாதீர்!


A twist againBharathiraja's letterDetermined to start a new associationமீண்டும் ஒரு திருப்பம்புதிய சங்கம்தொடங்க உறுதிபாரதிராஜாகடிதம்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author