Published : 25 Jul 2020 08:00 PM
Last Updated : 25 Jul 2020 08:00 PM

வேலையின்றி தவித்த நடனக் கலைஞர்களுக்கு உதவிய ஹ்ரித்திக் ரோஷன்

மும்பை

கரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் நடனக் கலைஞர்களுக்கு உதவிச் செய்துள்ளார் பாலிவுட் பிரபல நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.

இந்தியா முழுக்கவே கரோனா ஊரடங்கால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பு எதுவுமே நடைபெறவில்லை. திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிலேயே இருக்கிறார்கள். சமூக வலைதளம் மூலமாக கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்

கரோனா ஊரடங்கு தொடங்கி சுமார் 100 நாட்களைத் தாண்டிவிட்டது. இந்த சமயத்தில் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பு எதுவுமே இல்லாததால் தினசரி தொழிலாளர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக சம்பந்தப்பட்டவர்கள் பலரும் வருமானமின்றி தவித்தனர். அனைத்து திரையுலகிலிருந்து முன்னணி நடிகர்கள் பலரும் உதவிகள் செய்யத் தொடங்கினார்கள்.

இந்தித் திரையுலகில் முதல் நபராக களமிறங்கி திரையுலக தொழிலாளர்கள் பண உதவி, பொருட்கள் என அனுப்பி வைத்தார் சல்மான் கான். அதற்குப் பிறகு காவல்துறையினர் உள்ளிட்ட பலருக்கும் உதவிகள் செய்தனர். தற்போது நடனக் கலைஞர்களுக்கு உதவிச் செய்துள்ளார் முன்னணி பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்.

கரோனா ஊரடங்கால் வேலையின்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள 100 நடனக் கலைஞர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளார் ஹ்ரித்திக் ரோஷன். இந்த உதவி தொடர்பாக பாலிவுட்டில் நடன ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வரும் ராஜ் சுரானி கூறியிருப்பதாவது:

"இந்த கடினமான காலகட்டத்தில் 100 நடனக் கலைஞர்களுக்கு ஹ்ரித்திக் ரோஷன் உதவி செய்துள்ளார். சிலர் அவர்களின் கிராமத்துக்கு சென்றுவிட்டனர். இன்னும் சிலரால் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் இருந்தது. ஒரு நடனக் கலைஞரின் குடும்பத்தினர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஹ்ரித்திக் அவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் உதவி செய்துள்ளார்.

பின்னணி நடனக் கலைஞர்களின் வங்கிக் கணக்குக்கு ஹ்ரித்திக் ரோஷன் பணம் செலுத்தியதற்கான குறுந்தகவல் வந்த போது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள். கரோனா ஊரடங்கின் போது அவரது ஆதரவுக்கு நடனக் கலைஞர்கள் மிகுந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்"

இவ்வாறு ராஜ் சுரானி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x