Published : 22 Jul 2020 17:32 pm

Updated : 22 Jul 2020 17:33 pm

 

Published : 22 Jul 2020 05:32 PM
Last Updated : 22 Jul 2020 05:33 PM

யோகி பாபு பிறந்த நாள் ஸ்பெஷல்: தனித்துத் தெரியும் நகைச்சுவை வித்தகன்

yogi-babu-birthday-special

சென்னை

தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் கோலோச்சியிருக்கிறார்கள். காளி என்.ரத்னம், சாரங்கபாணி, டி.ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு, ஏ.கருணாநிதி, நாகேஷ், சந்திரபாபு, சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில். வடிவேலு, விவேக், சந்தானம், சூரி என தமிழ் சினிமாவுக்கு ஒரு நெடிய நகைச்சுவைப் பாரம்பரியம் இருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இவர்களில் ஓரிருவர் முன்னணி வகித்திருப்பார்கள். அதிக படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களாக இருந்திருப்பார்கள்.

இன்றைய காலகட்டம் அப்படி அல்ல, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் எண்ணற்ற நிகழ்ச்சிகளும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் காணொலிகளும் எண்ணற்ற நகைச்சுவைத் திறமையாளர்களை மக்களிடையே பிரபலமாக்கிவிடுகின்றன. ஒரே ஒரு முறை யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் தோன்றியவர் அதன் மூலம் கிடைத்த பிரபல்யத்தால் இன்று பல படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இப்படி ஒரு சூழலில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தைப் பெறுவதும் அனைவரையும் தாண்டி நகைச்சுவை நடிப்புக்கென்றே ஒரு நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதும் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை ஒரு ஆண்டில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் நடிப்பதும் எளிதான காரியம் அல்ல. அந்த வகையில் பார்த்தால் இன்று (ஜூலை 22) பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் யோகி பாபு பெற்றிருக்கும் இடம் மிக அசாத்தியமானது. கடும் உழைப்பும் திறமையும் பொறுமைமிக்க காத்திருப்பும் பெற்றுத் தந்தது.


தொலைக்காட்சியில் தொடக்கம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' என்னும் திரைப்படங்களை பகடி செய்யும் ஸ்பூஃப் வகை நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் பலர் அந்த நிகழ்ச்சி குறித்த நினைவுகளையும் யூடியூபில் கிடைக்கும் காணொலிகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள் 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலமாகத்தான் சந்தானம். ஜீவா, சுவாமிநாதன், மனோகர் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்கள். அவர்களைப் போலத்தான் யோகி பாபுவும் என்று சொன்னால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

'யோகி' சேர்ந்த கதை

ஆம். 'லொள்ளு சபா' இயக்குநர் ராம் பாலாவிடம் பணியாற்றத் தொடங்கினார் பாபு. அந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதோடு காட்சிகளை உருவாக்குவதிலும் பங்களித்தார். அதோடு அந்த நிகழ்ச்சியில் சில எபிசோடுகளில் துணை நடிகராகவும் தோன்றினார். இதற்குப் பிறகு நீண்ட போராட்டங்களைக் கடந்து 2009-ல் அமீர் நாயகனாக நடிக்க சுப்பிரமணிய சிவா இயக்கிய 'யோகி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் பாபு. அந்தப் படத்தின் தலைப்பே அவருடைய பெயரின் முன்னொட்டானது. அன்றுமுதல் இன்று தமிழ்க் குடும்பங்களில் ஒருவராக ஆகும்வரை தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் அவர் யோகி பாபுதான்.

கடந்த பத்தாண்டின் முற்பகுதியில் 'பையா', 'கலகலப்பு', 'அட்டகத்தி','பட்டத்து யானை', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'சூது கவ்வும்', 'வீரம்', 'மான் கராத்தே', 'அரண்மனை', 'யாமிருக்க பயமே', 'ஐ' எனப் பல படங்களில் இரண்டாம் நிலை நகைச்சுவை நடிகராக நடித்தார். இவற்றில் 'யாமிருக்க பயமே', 'மான் கராத்தே' படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து சிரிக்கவைத்துச் சென்றாலும் அவருடைய நடிப்பு பரவலான கவனத்தை ஈர்த்தது.

வசனத்தால் கிடைத்த கவனம்

2015-ல் வெளியாகி பல விருதுகளையும் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் குவித்த 'காக்கா முட்டை' படத்திலும் சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் அதில் 'எனக்கே விபூதி அடிக்கப் பாத்தீல்ல நீ” என்று யோகி பாபு பேசிய வசனம் மிகவும் பிரபலமடைந்தது. அவரைப் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

2016-ம் ஆண்டில் யோகி பாபு 20க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார். 'காக்கா முட்டை' இயக்குநர் மணிகண்டனின் இரண்டாம் படமான 'ஆண்டவன் கட்டளை' யோகி பாபுவுக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. அதில் விஜய் சேதுபதியின் நண்பராக யதார்த்த நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடத்தில் மிகப் பிரமாதமாக நடித்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் முக்கிய நகைச்சுவை/துணை நடிகராக நடிக்கத் தொடங்கினார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருடைய புகழ் பல உயரங்களைக் கடந்து கொடிகட்டிப் பறக்கிறது.

நட்சத்திரங்களின் நகைச்சுவைக் கூட்டாளி

2017-ல் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து 'மெர்சல்' படத்தில் நடித்தார். அதிலிருந்து 'சர்கார்', 'பிகில்' என விஜய் நடித்துள்ள படங்கள் யோகி பாபு இல்லாமல் வெளியானதில்லை. அஜித்துடன் 'வீரம்', 'வேதாளம்', 'விஸ்வாசம்' என மூன்று படங்களில் நடித்துவிட்டார். இன்று நட்சத்திர வானத்தில் உச்ச நிலையில் இருக்கும் விஜய், அஜித் இருவருடைய படங்களிலும் ஒரே நேரத்தில் மாறி மாறி நடிக்கும் நிலையை அடைந்தார்.

இதே காலகட்டத்தில் தனி காமெடியானாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். நயன்தாரா நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'கோலமாவு கோகிலா' படத்தில் அவரை ஒரு தலையாகக் காதலிப்பவராக நடித்திருந்தார் யோகி பாபு. அந்தப் படத்தில் அவருக்கு நயன்தாராவுடன் ஒரு கனவு டூயட் பாடல் இருந்தது என்பது அவர் எந்த அளவு புகழடைந்திருக்கிறார் என்பதற்குச் சான்று. அந்தப் பாடலில் யோகி பாபுவின் நடிப்பு, எக்ஸ்பிரஷன்களுக்காகவும் பெரிதும் ரசிக்கப்பட்டது.

2020 தொடக்கத்தில் வெளியான 'தர்பார்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மெயின் காமெடியனாக நடித்த பெருமையையும் பெற்றுவிட்டார்.

நகைச்சுவை தாண்டிய நடிப்பு

அதே ஆண்டில் வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தில் கதாநாயகன் பரியனின் நண்பன் ஆனந்தாக முக்கியமான குணச்சித்திர வேடத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகும் நண்பனுக்குத் தக்க துணையாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த மனசாட்சியும் மனிதத்தன்மையும் உள்ள பிரதிநிதியான அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உள்வாங்கி மிகச் சிறப்பாக நடித்திருந்தார். நகைச்சுவையைத் தாண்டிய நடிப்பாலும் தன்னால் பாராட்டைப் பெற முடியும் என்று நிரூபித்தார்.

அதேபோல் கடந்த ஆண்டு வெளியான படங்களில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'கோமாளி' படத்திலும் நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு என இரண்டையும் வெகு சிறப்பாகத் தந்திருந்தார். கடந்த ஆண்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த ஆண்டில் யோகி பாபு நடித்த பல படங்கள் வெளியாகின. மேலும் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதைத் தவிர 'பன்னி குட்டி' படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும் பல படங்களில் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து பல நகைச்சுவைத் தருணங்களை வழங்கி நம்மை வயிறுவலிக்க சிரிக்க வைத்து மனதார வாழ்த்த வைப்பார் என்று நம்பலாம்.

யோகி பாபு திரைப்படத் துறையில் மென்மேலும் பல சாதனைகளை நிகழ்த்தவும் இன்னும் பல உயரங்களைக் கடக்கவும் இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.

தவறவிடாதீர்!


யோகி பாபுயோகி பாபு பிறந்த நாள்யோகி பாபு பிறந்த நாள் ஸ்பெஷல்யோகி பாபு கட்டுரையோகி பாபு ஸ்பெஷல்Yogi babuYogi babu birthdayYogi babu birthday specialYogi babu specialயோகிசர்கார்பிகில்மெர்சல்வீரம்விஸ்வாசம்தர்பார்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author