Published : 14 Jul 2020 16:04 pm

Updated : 14 Jul 2020 16:04 pm

 

Published : 14 Jul 2020 04:04 PM
Last Updated : 14 Jul 2020 04:04 PM

சரத்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்: உடலைப் பேணி உழைப்பால் உயர்ந்தவர்

sarathkumar-birthday-special

சென்னை

தமிழ் சினிமாவில் துணைக் கதாபாத்திரங்கள். வில்லன் என படிப்படியாக நடித்து கதாநாயகனாகி நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நடிகராக வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருப்பவரான சரத்குமார் இன்று (ஜூலை 14) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

19540ல் புது டெல்லியில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவரான சரத்குமார் டெல்லியிலும் சென்னையிலும் தனது பள்ளி, கல்லூரிக் கல்வியைப் படித்தார். சிறுவயது முதலே விளையாட்டிலும் கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பேணுவதிலும் தீவிர கவனம் செலுத்தினார். இன்றுவரை உடலமைப்பைப் பேணுகிறார். அவருக்கு 66 வயதாகிவிட்டது என்று சொன்னால்தான் தெரியும் என்னும் அளவுக்கு இளமைத் தோற்றத்துடன் திகழ்கிறார். கல்லூரி காலத்தில் கட்டுடல் ஆணழகன்களுக்கான மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி பட்டத்தை வென்றார். அதன் பிறகு ஒரு தமிழ் நாளிதழில் முதலில் நாளிதழை கடைகளில் கொண்டு சேர்க்கும் பணியாளராக இருந்து பின்னர் அந்த நாளிதழின் நிருபரானார்.

முதல் படத்தை தயாரித்தவர்

1986-ல் சரத்குமாரின் நண்பர் தயாரித்த 'சமாஜமியோ ஸ்த்ரீ' என்கிற தெலுங்கு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். கார்த்திக்-அம்பிகா நடித்த 'கண் சிமிட்டும் நேரம்' படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். 1988-ல் வெளியான அந்தப் படமே சரத்குமாரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து 1990-ல் வெளியான 'புலன் விசாரணை' படத்தில் வில்லனாக நடித்தார் சரத்குமார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சிறந்த வில்லனுக்கான 'சினிமா எக்ஸ்பிரஸ்' விருது சரத்குமாருக்கு கிடைத்தது. அதே ஆண்டில் 'சேலம் விஷ்ணு', 'மெளனம் சம்மதம்', 'புதுப் பாடகன்', 'வேலை கிடைச்சிடுச்சு', 'புரியாத புதிர்', உள்ளிட்ட பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் கெளரவத் தோற்றங்களிலும் நடித்தார் சரத்குமார்.

படிப்படியான முன்னேற்றம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்குநராக அறிமுகமான 'புரியாத புதிர்' படத்தில் ஒரு முக்கிய துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார் சரத்குமார். அடுத்த ஆண்டு ரவிக்குமார் இயக்கிய 'சேரன் பாண்டியன்' படம் மூலம் அதுவரை சிறிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்த சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவரானார். அந்தப் படத்தில் அவர் கதாநாயகன் இல்லை என்றாலும் அந்த படமே அவர் கதாநாயகனாக உயர்வதற்கு அடித்தளம் அமைத்தது. அந்த அளவு 'சேரன் பாண்டியன்' படத்தில் சரத்குமார் ஏற்ற கதாபாத்திரமும் அதில் அவருடைய நடிப்பும் ஒரு நாயகத்தன்மையுடன் மக்களை ஈர்த்தது.

அதே ஆண்டில் பவித்ரன் இயக்கிய 'வசந்தகாலப் பறவைகள் படத்தில் கதாநாயகனாக நடித்தார் சரத்குமார். அடுத்த ஆண்டு பவித்ரன் இயக்கிய 'சூரியன்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்று சரத்குமாரை ஒரு கதாநாயக நடிகராக நிலைநிறுத்தியது.

1990-களில் பவித்ரன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, மணிவாசகம், சுரேஷ் கிருஷ்ணா, ஏ.வெங்கடேஷ், விக்ரமன் உள்ளிட்ட பல இயக்குநர்களுடன் பணியாற்றி பல வகைமைகளைச் சேர்ந்த படங்களில் நாயகனாக நடித்தார்.. 'இந்து', 'நாட்டாமை', 'மகாபிரபு', 'சூர்யவம்சம்', 'நட்புக்காக' என அந்த பத்தாண்டுகளில பல ஹிட், சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் படங்களிலும் நடித்தார்.

புத்தாயிரத்தில் தொடர்ந்த வெற்றிகள்

2000-ல் தொடங்கிய பத்தாண்டுகளிலும் ஒரு நாயக நடிகராக தன்னுடைய வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார். 'மாயி', 'சமுத்திரம்', 'தென்காசிப்பட்டணம்' 'அரசு', 'கம்பீரம்', 'ஏய்', 'சாணக்யா', 'அய்யா' என சரத்குமார் கதாநாயகனாக நடித்த பல படங்கள் வெற்றிபெற்றன.. இதே ஆண்டுகளில் 'பெண்னின் மனதைத் தொட்டு', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'ஜித்தன்' போன்ற படங்களில் கவனிக்கத்தக்க குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழடைந்தார். 2007-ல் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் ஒரு நடிகராக தன் இயல்புக்கு மாறாக பலவீனங்கள் நிறைந்த நடுத்தர வயது மனிதராக வெகு சிறப்பாக நடித்திருந்தார்.

நூறாவது படத்தை இயக்கியவர்

2006-ல் வெளியான 'தலைமகன்' ஒரு நடிகராக சரத்குமாரின் 100-வது படம். அதுவே ஒரு இயக்குநராக அவருடைய முதல் படமாகவும் அமைந்தது. ஆம் தமிழில் தன்னுடைய நூறாவது படத்தை தானே இயக்கிய நடிகர் சரத்குமார் தான். இயக்குநர் சேரன் திரைக்கதை எழுதிய அந்தப் படத்தில் தன் பழைய அவதாரமான பத்திரிகையாளராகவும் வாழ்ந்து பார்த்திருந்தார்.

பிறமொழித் தடங்கள்

2009-ல் 'பழசிராஜா' என்கிற சரித்திரப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து மலையாள சினிமாவில் கால்பதித்தார் அது தொடங்கி கடந்து பத்தாண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவனம் ஈர்க்கும் கெளரவ வேடங்களிலும் நடித்துவருகிறார்.

திருநங்கையாக நடித்த துணிச்சல்

2011-ல் தமிழில் மிகப் பெரிய வெற்றிபெற்ற 'காஞ்சனா' படத்தில் திருநங்கையாக நடித்தார் சரத்குமார். அதுவரை பல நடிகர்கள் பெண்ணாக நடித்திருந்தாலும் ஒரு நட்சத்திர நடிகர் திருநங்கையாக நடித்தது அதுவே முதல் முறை. அந்தக் கதாபாத்திரத்தில் சரத்குமார் போன்ற ஒரு மதிப்புக்குரிய நடிகர் நடித்ததன் மூலம் சமூகத்தில் திருநங்கைகள் குறித்த அவலப் பார்வையின் தாக்கம் குறைய உதவியது. தொடர்ந்து 'கொல கொலயா முந்திரிகா', 'சென்னையில் ஒரு நாள்', 'கோச்சடையான்', 'நிமிர்ந்து நில்','மைனா' (கன்னடம்), 'பரத் அனே நேனு' (தெலுங்கு) உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்தார். இதே பத்தாண்டுகளில் 'ஜக்குபாய்', 'சண்டமாருதம்', 'சென்னையில் ஒரு நாள் 2' படங்களில் நாயகனாகவும் நடித்தார். 'சண்டமாருதம்' படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

இயக்குநர்களுடன் வெற்றிக் கூட்டணி

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற மிக வெற்றிகரமான இயக்குநர்-நடிகர் கூட்டணிகளில் ஒன்று கே.எஸ்.ரவிக்குமார் - சரத்குமார் இணை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரத்குமார். 'சேரன் பாண்டியன்', 'நாட்டாமை', 'நட்புக்காக' என இந்தக் கூட்டணியில் வந்த படங்கள் மிகப் பெரிய வெறியைப் பெற்றன, பல மொழிகளில் மறு ஆக்கமும் செய்யப்பட்டன. 'சூரியன்' சரத்குமாரை நாயகனாக நிலைநிறுத்தியது என்றால் 'நாட்டாமை' அவரை நட்சத்திரமாக்கியது.'நட்புக்காக' அந்த நட்சத்திர அந்தஸ்துக்கு பன்மடங்கு வலுவூட்டியது. 'மகாபிரபு', 'ஏய்', 'சாணக்யா' என இயக்குநர் ஏ.வெங்கடேஷுடனும் அவருடைய கூட்டணி வெற்றிகரமாக அமைந்தது. பவித்ரன், சுரேஷ் கிருஷ்ணா, மணிவாசகம், ஏ.வெங்கடேஷ் ஆகிய இயக்குநர்களுடனும் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்

கட்டுடலழகும் அதைத் தாண்டியும்

ஒரு நடிகராக சரத்குமார் தன்னை காலத்துக்கேற்ப தகவமைத்துக்கொண்டவர். ஆணழகன் பட்டம் வென்று திரைப்பட நாயகர்கள் கட்டுடலுடன் இருப்பதிலும் உறுதியான உடலமைப்பைப் பேணுவதிலும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்பவர். 1990களில் இதுவே அவருடைய தனித்தன்மையாகவும் இருந்தது. தமிழ் சினிமாவில் காவல்துறை அதிகாரியாக நடிக்க மிகப் பொருத்தமான தெரிவாக இன்றும் சரத்குமாரே திகழ்கிறார்.

ஆனால் கட்டுடடலழகு தேவையே படாத பல கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றிபெற்றவர் சரத்குமார். 'நாட்டாமை', 'சூர்யவம்சம்', 'நட்புக்காக', ;'சமுத்திரம்', ;ஐயா', என சரத்குமாரின் பல வெற்றிப் படங்கள் உறவுகள், பாசம், நட்பு, நேசம் போன்ற சென்டிமெண்ட் அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்தவை என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோல் எப்போதும் நடுத்தர வயது, முதியவர் கதாபாத்திரங்களில் நடிக்க அவர் தயங்கியதில்லை. 'நாட்டாமை' படத்தில் நடுத்தர வயதுடையவராகவும் 'ஐயா' படத்தில் முதியவராகவும் சிறப்பாக நடித்திருந்தார். அதிக படங்களில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமையும் அவருக்கு உண்டு. 'நம்ம அண்ணாச்சி' படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

தேர்ந்த நிர்வாகி

ஒரு நடிகர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி நடிகர் சங்கத்தை கடன்களிலிருந்து மீட்டதில் விஜய்காந்துக்கு தக்க துணை புரிந்தார் சரத்குமார். விஜயகாந்த் தலைவராக இருந்த காலத்தில் பொதுச் செயலாளராகவும் பின்னர் தலைவராகவும் பதவி வகித்தார் சரத்குமார்.

நெடுநாள் அரசியல் பயணம்

1996-லிருந்து அரசியலிலும் தீவிரமாக இயங்கிவருபவர் சரத்குமார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தவர் 1998-ல் அக்கட்சியின் சார்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அதன் பிறகு 2001-ல் திமுக சார்பில் மாநிலங்களை உறுப்பினாராகி ஆறு ஆண்டுகள் முழுப் பதவிக்காலத்தை நிறைவுசெய்தார். 2007-ல் சமத்துவ மக்கள் கட்சி என்ற தனிக்கட்சி தொடங்கினார். 2011 தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். 2016 தேர்தலில் அதே கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராகவும் 25 ஆண்டுகளாக அரசியலிலும் தீவிரமாக இயங்கிவரும் சரத்குமார் இரண்டு துறைகளிலும் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி மென்மேலும் புகழடைய அவரை மனதார வாழ்த்துவோம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

சரத்குமார்சரத்குமார் பிறந்த நாள்சரத்குமார் பிறந்த நாள் வாழ்த்துசரத்குமாருக்கு வாழ்த்துபிறந்த நாள் வாழ்த்துகள் சரத்குமார்இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்ஏ.வெங்கடேஷ்பவித்ரன்SarathkumarSarathkumar birthdaySarathkumar birthday wish

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author