Published : 12 Jul 2020 04:11 PM
Last Updated : 12 Jul 2020 04:11 PM

நா.முத்துக்குமார் பிறந்த நாள் நினைவுகள்: காலத்தால் அறுக்க முடியாத கவிதை உறவு

சென்னை

இறந்துவிட்டவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடலாமா என்ற விவாதம் எப்போதும் நடைபெறுவதுண்டு. இதுகுறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்த பெரியோர்கள் இறந்துவிட்ட பிறகு அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டையும் அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பை அவர்களுடைய இன்றியமையாமையை அவர்கள் விட்டுச் சென்றதால் விளைந்த இழப்பை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்துவது தமிழ்ச் சமூகத்தின் மரபு.

அப்படிப்பட்ட பெரியோர்களுக்கு இணையாக தமிழர்களால் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இயங்கும் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறார் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் நா.முத்துக்குமார். 2016 ஆகஸ்ட் 14 அன்று யாரும் எதிர்பாரா இடியாய் வந்து விழுந்தது அவருடைய அகால மரணச் செய்தி. ஒருவேளை இயற்கை கொஞ்சம் கருணை காட்டியிருந்தால் இன்று (ஜூலை 12) தன்னுடைய 45-ம் பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார் முத்துக்குமார். ஆனாலும் அவருடைய சாகாவரம் பெற்ற கவிதைகளும் பாடல் வரிகளும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றைக் கொண்டாடுவதன் மூலம் குறுகிய காலத்தில் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்திய அந்தக் கலைஞனுக்கு, கவிஞனுக்கு தமிழ்ச் சமூகம் நன்றி கூறுகிறது.

வாசிப்பை நேசித்தவர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் என்னும் கிராமத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் முத்துக்குமார். மிகச் சிறிய வயதிலிருந்தே வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். பல இலக்கியங்களையும் உலகப் புகழ்பெற்ற படைப்புகளையும் கவிதைத் தொகுப்புகளையும் வாசித்து தனக்குள் ஒரு தேர்ந்த ரசிகனையும் தரமான படைப்பாளியையும் வளர்த்துக்கொண்டார். இறுதிக் காலம் வரை எழுத்தைப் போல தீவிர வாசிப்பையும் தொடர்ந்தார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் வெளியாகும் அனைத்து முக்கியப் படைப்புகளையும் உடனடியாகப் படித்து முடித்துவிடும் வழக்கம் அவருக்கு இருந்ததாக அவருடன் பழகிய பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.

இயக்குநர் பாலு மகேந்திரா தன்னைப் போலவே வாசிப்பைச் சுவாசிக்கும் முத்துக்குமாரை தன்னுடைய உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.

கதவைத் திறந்த கவிதைத் திறன்

திரைப்படம் இயக்கும் வேட்கையுடன் சினிமாவுக்கு வந்தாலும் கவிதை புனையும் திறனே அவருக்கு கோடம்பாக்கத்தில் தடம் பதிக்க உதவியது. அவருடைய சில கவிதைத் தொகுப்புகள் வெளியாகி வாசகர்கள். கவிஞர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன. அதன் மூலம் கவிஞர் அறிவுமதியின் அன்புத் தம்பிகளில் ஒருவரானார். சீமான் இயக்கத்தில் வெளியான 'வீரநடை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு பாடலாசிரியராக அறிமுகமானார் முத்துக்குமார். விஜய் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான 'மின்சார கண்ணா' படத்தில் இடம்பெற்ற 'உன் பேர் சொல்ல ஆசைதான்' என்ற காதல் பாடல் முத்துக்குமாரை ஒரு பாடலாசிரியராகக் கவனிக்க வைத்தது.

அருவியாய்க் கொட்டிய பாடல்கள்

அன்று தொடங்கிய பயணம் வாழ்வின் இறுதிக் காலம் வரை வெற்றிகரமாகத் தொடர்ந்தது. இருபதுக்கும் குறைவான ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார். பல முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், நட்சத்திர நடிகர்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். பல படங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதினார். தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு அவ்வாண்டின் மிக அதிக எண்ணிக்கையிலான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் என்ற சாதனையைத் தக்கவைத்திருந்தார். அவர் இறந்து மூன்று ஆண்டுகள் கழித்தும் அவர் எழுதிய பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருந்தன என்றால் கவிதை மனமும் சூழலுக்கும் மெட்டுக்கும் ஏற்ப பாடல் வரிகளை எழுதும் திறமையும் அவருக்குள் அலைகடல் போல் பொங்கிக்கொண்டே இருந்ததை உணரலாம்.

அனைவருக்கும் அணுக்கமானவர்

புகழ்பெற்ற இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் பலருக்கு மிகவும் நெருக்கமான பாடலாசிரியராகத் திகழ்ந்தார் முத்துக்குமார். மணிரத்னம் இயக்கிய, தயாரித்த படங்களுக்கு வாலியும் வைரமுத்துவும் மட்டுமே பாடல்களை எழுதுவார்கள். அவர் தயாரித்த 'டும் டும் டும்' படத்துக்கு முதல் முறையாக அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதினார். ஒவ்வொரு பாடலும் மணிரத்னத்தையே வியக்க வைத்தன. 'ரகசியமாய்', 'தேசிங்கு ராஜா', 'உன் பேரை சொன்னாலே' என அந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் இன்று வரை ரசிகர்களால் பெரிதும் விரும்பிக் கேட்கப்படுகின்றன.

செல்வராகவன், ராம், விஜய் உள்ளிட்ட சில இயக்குநர்களின் ஆஸ்தான பாடலாசியராக இருந்தார். இது தவிர பாலு மகேந்திரா, ஷங்கர், பாலா, விக்ரமன். லிங்குசாமி, சீமான், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என பல முக்கியமான இயக்குநர்களின் படங்களுக்குத் தொடர்ந்து நிறைய பாடல்களை எழுதினார். கெளதம் மேனனின் பல படங்களுக்கு தாமரைதான் பாடல்களை எழுதினார் என்றாலும் ஒரு சில படங்களில் நா.முத்துக்குமாரும் பங்களித்திருக்கிறார். இளையராஜா இசையமைத்த 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் அனைத்துப் பாடல்களையும் முத்துக்குமார்தான் எழுதினார். அவர் அனைத்துப் பாடல்களையும் எழுதிய படங்கள் 45க்கு மேல். ஒரு பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களையும் எழுதிய படங்களைச் சேர்ந்தால் 50ஐத் தாண்டும்.

யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் மிக நெருக்கமான பாடலாசிரியராக இருந்திருக்கிறார் முத்துக்குமார். இவர் அனைத்துப் பாடல்களும் எழுதிய நிறைய படங்கள் இந்த இருவரில் ஒருவர் இசையமைத்த படமாக இருக்கும். அதோடு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான். ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், பரத்வாஜ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, டி.இமான், விஜய் ஆண்டனி என அனைத்து இசையமைப்பாளர்களுடன் நல்லுறவைப் பேணினார். இவருடன் பணியாற்றாத இசையமைப்பாளரே இல்லை என்று சொல்லிவிடலாம்.

இசையமைப்பாளரும் பாடலாசிரியரும் இணைந்துதான் ஒரு பாடலை உருவாக்குகிறார்கள். எனவே இவர்கள் இருவருக்கான இணக்கம் மிக முக்கியம். முத்துக்குமாருடன் இணைந்து இசையமைப்பாளர்களும் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை வைத்து அவருடைய தொழில் நேர்த்தியையும் தனிப்பட்ட ஆளுமைப் பண்புகளையும் புரிந்துகொள்ளலாம்.

சிறந்த பாடல்களின் பெரும் பட்டியல்கள்

திரைப்படங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகையான பாடல்களையும் வெகு சிறப்பாக எழுதிவந்தார் முத்துக்குமார். நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும் காதல் பாடல்கள், புத்துணர்வூட்டும் நாயக அறிமுகப் பாடல்கள், ஆட்டம் போடவைக்கும் பாடல்கள், அதிநவீன நகர வாழ்க்கையைச் சித்தரிக்கும் பாடல்கள், கிராமியப் பாடல்கள், மனதை உருக்கும் சோகப் பாடல்கள், துவண்ட மனங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கைப் பாடல்கள், கதைகளின் கருப்பொருளை ஒரே பாடலில் விளக்கத் தேவைப்படும் தீம் பாடல்கள் என அனைத்து வகையான பாடல்களிலும் முத்துக்குமார் எழுதிய சிறப்பான வெற்றிபெற்ற பாடல்களை வைத்து தனித் தனிப் பெரும் பட்டியல்களைத் தயாரிக்கலாம்.

வாகை சூடிய விருதுகள்

ராம் இயக்கிய 'தங்கமீன்கள்' படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை மீட்டுகிறாள்' என்னும் பாடலுக்காகவும், விஜய் இயக்கிய 'சைவம்' படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகே எதுவும் அழகே' என்ற பாடலுக்காகவும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வென்றார்.. இது தவிர நான்கு முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வென்றுள்ளார். ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட மற்ற பல விருதுகளையும் வென்றுள்ளார்

கவிதையும் கட்டுரையும்

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் என்பதைத் தாண்டி 'கிரீடம்' உள்ளிட்ட சில படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் செயல்பட்டுள்ளார் முத்துக்குமார். திரைப்படம் இயக்கும் திட்டமும் இருந்தது. அதற்குள் காலம் முந்திக்கொண்டுவிட்டது.

சினிமாவைத் தாண்டி ஒரு கவிஞராகவும் இயங்கிவந்தார் முத்துக்குமார். சில கதைகளையும் கட்டுரைத் தொடர்களையும் எழுதியுள்ளார். அவை நூல்களாகவும் வெளிவந்த பெரும் பரவலான வாசகர்களை ஈர்த்தன. 'பட்டாம்பூச்சி விற்பவன்' என்ற கவிதைத் தொகுப்பும், 'அணிலாடும் மூன்றில்' கட்டுரைத் தொகுப்பும் அவருடைய நூல்களில் மிகவும் புகழ்பெற்றவை.

குடும்பத்தில் ஒருவர்

இருபது ஆண்டுக்குக் குறைவாகப் பொதுவாழ்வில் ஒரு கவிஞராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக வியக்க வைக்கும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள நா.முத்துக்குமார் ஒரு நல்ல மனிதராகவும் இருந்தார். திரைத் துறைக்குள்ளும் வெளியேயும் அவரை உற்ற நண்பனாக பாசத்துக்குரிய சகோதரனாகக் கருதும் நூற்றுக்கணக்கானோர் இருந்தார்கள். இன்றுவரை அவர் இல்லாததை உணர்கிறார்கள். இது தவிர அவருடைய பாடல் வரிகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரைத் தங்களுடைய நண்பனாக, சகோதரனாக, வழிகாட்டியாக, திறமையாலும் உழைப்பாலும் சாதிப்பதற்கான ஊக்க சக்தியாகப் பாவித்தார்கள்.

இந்தக் குறைவான காலகட்டத்தில் தமிழ் மொழிக்கும் தமிழ் சினிமாவுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் நா.முத்துக்குமார் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு தலைமுறைகளைத் தாண்டி நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x