Published : 27 Jun 2020 03:28 PM
Last Updated : 27 Jun 2020 03:28 PM

நெட்ஃபிளிக்ஸின் வரலாறு காணாத நன்கொடை!

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ரீட் ஹேஸ்டிங்ஸ் உள்ளிட்ட ஐந்து பேரால் 1997-ல் தொடங்கப்பட்ட இணையத் திரை நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ். இணையத் திரையில் முன்னோடியாகவும் ஆண்டு வருமானம் ஈட்டுவதில் முதலிடத்திலும் உள்ள இந்த நிறுவனம், ‘ஒரிஜினல் சீரிஸ்’ வகை இணையத் தொடர்கள், தனது இணையதளத்துக்கு என்றே பிரத்யேகமாக உருவாகும் ‘ஒரிஜினல்’ வரிசைத் திரைப்படங்கள் ஆகியவற்றைத் தயாரித்தும் பிற தயாரிப்பாளர்களின் படைப்புகளை வெளியிட்டும் வருகிறது. உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் சந்தாதாரர்களைக் கொண்ட இணையத் திரை நிறுவனங்களின் நெட்ஃபிளிக்ஸ் முன்னோடி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் அமெரிக்க போலீஸின் அத்துமீறலால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அட்லாண்டா மாநிலத்தில் மேலும் ஒரு இளைஞரை அமெரிக்க போலீஸ் சுட்டுக்கொன்றது அங்கே பற்றியெரியும் நிறவெறிக்கு எதிரான மக்களின் கோபத்தை மேலும் தூண்டியது. இனவெறி மற்றும் நிறவெறிக்கு எவ்வாறு தணியச் செய்வது என்பது குறித்த தேசிய அளவிலான விவாதம் அமெரிக்காவில் நடந்து வந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது நன்கொடை மூலம் இந்தத் துயரச் சம்பவத்துக்கு மருந்திட முயற்சி செய்துள்ளது.

அதாவது, நெட்ஃபிளிக்ஸின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியுமான ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் அவரது மனைவி பாட்டி குயிலின் ஆகியோர் ‘120 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளிப்பதாக அறிவித்தனர். இந்த நன்கொடையானது கறுப்பின மக்கள் அதிகமும் பயிலும் ஸ்பெல்மேன் கல்லூரி, மோர்ஹவுஸ் கல்லூரி மற்றும் யுனைடெட் நீக்ரோ கல்லூரி உள்ளிட்ட மூன்று கல்லூரிகளுக்கு இடையே தலா 40 மில்லியன் டாலர்கள் வீதம் பகிர்ந்து அளிப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் ரீட் ஹேஸ்டிங்ஸ் இதை அறிவிக்கும்போது “பல கறுப்பினர் மாணவர்கள் தங்களது கனவுகளை வென்றெடுக்க இந்த நன்கொடை உதவும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சமூக அக்கறையுடன் பல்வேறு நிகழ்வுகளுக்கு நன்கொடைகள் வழங்கி வந்தாலும் நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிரான மனநிலையை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் ‘நெட்ஃபிளிக்ஸ் கொடுத்திருக்கும் மிகப் பெரிய அறக்கொடை இது’ என அமெரிக்க ஊடகங்களால் வருணிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x