Published : 15 Jun 2020 06:01 PM
Last Updated : 15 Jun 2020 06:01 PM

அடுத்த அதிரடி: டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 10 இந்திப் படங்கள்?

மும்பை

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் அதிரடியாக 10 முன்னணி இந்திப் படங்களை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதுமே பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி தயாரிப்பாளர்களுமே கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இதனால் பலருமே தங்களுடைய படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்தியில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள 'குலாபோ சிதாபோ' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிவிட்டது. மேலும், வித்யாபாலனின் 'ஷகுந்தலா தேவி' படமும் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.

ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்படுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள், மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் என எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், படங்கள் வெளியீட்டைத் தடுக்க முடியவில்லை. தற்போது முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிரடியாக 10 இந்திப் படங்களை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக செய்திகள் வெளியாகும் எனவும் தெரிகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள 10 படங்களின் பட்டியல் இதோ:

லக்‌ஷ்மி பாம் (காஞ்சனா ரீமேக்) - அக்‌ஷய் குமார் நாயகன், கியாரா அத்வானி நாயகி, ராகவா லாரன்ஸ் இயக்கம்.

பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா (1971 இந்தியா - பாக் யுத்தம் பற்றிய படம்) - அஜய் தேவ்கன் நாயகன், உடன் சஞ்சய் தத், சோனாக்‌ஷி, அபிஷேக் துதைய்யா இயக்கம்

சடக் 2 (1991-ல் வந்த படத்தின் இரண்டாம் பாகம்) - பூஜா பட், சஞ்சய் தத், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர், மஹேஷ் பட் இயக்கம்

தில் பெசாரா (fault in our stars நாவலின் / ஹாலிவுட் படத்தின் ரீமேக்) - சுஷாந்த் சிங் ராஜ்புத் நாயகன், சஞ்ஜனா சங்கி நாயகி, முகேஷ் சாப்ரா இயக்கம். ரஹ்மான் இசை.

பிக் புல் - அபிஷேக் பச்சன் நாயகன், இலியானா, நிகிதா தத் - அஜய் தேவ்கன் இணைந்து தயாரிக்கும் படம். கூகி குலாடி இயக்கம்.

லூட்கேஸ் - குணால் கெம்மு நாயகன், உடன் கஜ்ராஜ் ராவ், ரசிகா துக்கால், ரன்வீர் ஷோரே, விஜய் ராஸ். ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கம். ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பு

மிமி - க்ரீதி சனோன் வாடகைத் தாயாக நடிக்கும் படம். 2011-ல் மராத்தி மொழியில் வெளியாகி தேசிய விருது பெற்ற படத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது. லக்ஷ்மண் உடேகர் இயக்கம்

ரூஹி அஃப்ஸானா - ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர். ஹர்திக் மேத்தா இயக்கம். 'குஞ்சன் சக்ஸேனா' படத்தைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் ஜான்வியின் இரண்டாவது படம்.

ஷித்தத் - சன்னி கவுஷல், ராதிகா மதன், மோஹித் ரெய்னா, டயானா பென்ட்டீ. குணால் தேஷ்முக் இயக்கம்.

குதா ஹாஃபிஸ் - வித்யுத் ஜம்வால், ஷிவலேகா ஓபராய். ஃபரூக் கபீர் இயக்கம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x