Published : 08 Jun 2020 09:00 PM
Last Updated : 08 Jun 2020 09:00 PM

மன அழுத்தத்தில் நம்மை இழந்துவிட வேண்டாம்: சாந்தனு வேண்டுகோள்

மன அழுத்தத்தில் நம்மை இழந்துவிட வேண்டாம் என்று நடிகர் சாந்தனு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்னும் குறையவில்லை. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதனிடையே கரோனா ஊரடங்கினால் முழுக்க வீட்டுக்குள்ளேயே இருப்பதால், பலரும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த உள்ள வழிமுறைகளை பல்வேறு மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மன அழுத்தத்தால் ஏற்படும் இழப்புகள் குறித்து சாந்தனு பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"நமக்கு நெருக்கமான பலரை சமீபகாலமாக இழந்து வருகிறோம். நானும் எனது அன்பு நண்பன், சக ஊழியர் ஒருவரை இழந்தேன். அவர் இளமையானவர், ஆரோக்கியமானவர். பின் ஏன் அப்படி நடந்தது? எல்லாம் ஒரு காரணத்தில்தான் வந்து முடிகிறது. மன அழுத்தம்.

வாழ்க்கையில் நிறைய அழுத்தங்களைத் தலையில் ஏற்றுகிறோம். அது ஒரு கட்டத்தில் நம் வாழ்க்கையையே முடித்து வைக்கிறது. பல விஷயங்கள் பற்றிய பல்வேறு பிரச்சினைகள் நம் வாழ்க்கையில் உள்ளான. ஒவ்வொருவருக்கும் அவரது பிரச்சினை பெரிது. அதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. ஆனால், உயிரை இழக்கும் அளவுக்குப் போகக் கூடாது.

நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். நாம் வாழ்வதும், முயற்சிப்பதும் ஏதாவது ஒன்றைச் சாதித்து சந்தோஷமாக இருக்க. ஆனால், அதற்கு விலை நமது உயிரல்ல. அழுத்தம், வெறுப்பு, எதிர்மறை சிந்தனை எவற்றாலும் எந்த உபயோகமும் கிடையாது. அடுத்த நிமிடம் என்பது ஊகிக்க முடியாதது. அழுத்தத்தில் நம்மை இழந்துவிட வேண்டாம்.

எது நடக்குமோ அது நடக்கும். எல்லாவற்றுக்கும் அதற்கான நேரம் என்று ஒன்று உள்ளது. இதை நான் அதிகமான அக்கறையோடும், அன்போடும் பகிர்கிறேன். தயவுசெய்து வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்வோம்".

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x