Published : 09 May 2020 01:19 PM
Last Updated : 09 May 2020 01:19 PM

'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு; முப்பெரும் இயக்குநர்களின் கடிதத்தை வெளியிட்டு சிம்புதேவன் நெகிழ்ச்சி

'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' படம் வெளியானபோது, அதைப் பாராட்டி இயக்குநர்கள் பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா மூவரும் சிம்புதேவனுக்குக் கடிதம் எழுதினர்.

2010-ம் ஆண்டு மே 9-ம் தேதி வெளியான படம் 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்து வெளியிட்டது. சிம்புதேவன் இயக்கத்தில் லாரன்ஸ், பத்மப்ரியா, லட்சுமி ராய், சந்தியா, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், செந்தில், இளவரசு, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ்த் திரையுலகில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு வெளியான கெளபாய் படம் இதுவே. இந்தப் படம் வெளியானபோது இயக்குநர்கள் பாலசந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா மூவரும் பாராட்டி எழுதிய கடிதத்தை இப்போது வெளியிட்டுள்ளார் சிம்புதேவன்.

அந்தக் கடிதங்கள் இதோ:

பாலசந்தர்:

எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். எப்படித்தான் இத்தனை சிங்கங்களையும் (நடிகர், நடிகைகளையும்) ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்து வேலை வாங்கியிருக்கிறீர்களோ, எப்படியென்று எனக்குப் புரியவில்லை. இதுவே ஒரு அசுர சாதனை.

யதார்த்தமான ஒரு களத்தில் செயற்கையாக அடிக்கும் கூத்து, கும்மாளங்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில், ஒரு செயற்கையான கற்பனைக்களத்தில் வினாடிக்கு வினாடி குபீர் சிரிப்புகளை யதார்த்தமாக வரவழைத்து குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைப்பது என்பது ஒரு அதி அற்புதமான கலை. அதில் 100% வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

இசை இயக்குநர், கலை இயக்குநர் மற்றும் லாரன்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் ஏனைய நடிகர் நடிகையர்களின் பங்கும் மகத்தானவை. படம் முழுவதும் 'SEPIA' வண்ணத்தை உபயோகித்திருப்பது, அந்த COW BOY AMBIENCE-ற்கு அழகு சேர்த்திருக்கிறது. தயாரிப்பாளர் அகோரத்தின் அசாத்திய நம்பிக்கைக்கு ஒரு HATS OFF. KEEP IT UP MR. SIMBU

மகேந்திரன்:

உங்களுக்கு எனது மனம் திறந்த பாராட்டுகள். நகைச்சுவை கொண்ட திரைப்படம் எடுப்பதில் உங்களுக்குள்ள வல்லமையை, தனித்தன்மையை இப்படத்தின் மூலமாக மிக மிக அழுத்தமாக நிரூபித்திருக்கிறீர்கள்.

'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' ஒரு புதிய களம் என்றால், 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' புதுமையான இன்னொரு கதைக்களம். அதுவும் ஒரு 'கெளபாய்' கதையை தொடக்கம் முதல் முடிவு வரை படம் பார்ப்பவர்கள் எல்லாம் ரசித்து, ருசித்து, சிரித்து சிரித்து மகிழும்படி படமாக்கியிருக்கிறீர்களே.. அசுர சாதனை.

படம் முடியும்வரை நான் ஒரு சிறுவனாக மாறி நொடிக்கு நொடி வாய்விட்டு மனம்விட்டுச் சிரித்தேன். அதே வேளை என் வயதிற்குரிய கூர்மையோடு, படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் படத்தின் சிறப்பிற்காக உங்களைப் போலவே சிறப்பாய் உழைத்துள்ள உங்களின் டெக்னீஷியன்கள், நடிகர்கள் அனைவருடைய ஒருமித்த செயல்திறனையும் உணர்ந்து வியப்படைந்தேன். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனக்கு முழுமையான மனநிறைவையும், புதுமையான ஒரு உலகத்தில் சஞ்சரித்த அனுபவத்தையும் உங்களின் இந்தத் திரைப்படம் தந்தது. நன்றி, நன்றி. நன்றி

நகைச்சுவைப் படங்களை இயக்குவது, அதன் பொருட்டு இதுவரை மற்றவர்கள் அணுகாத கதைக்களத்தைத் தேர்வு செய்வது எல்லாம் மிக மிகக் கடினமான ஒன்று. உங்களுக்கோ, அந்த வல்லமை உங்களின் நிழலாகவே இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளருக்கு எனது நன்றியும், பாராட்டும்!

பாலுமகேந்திரா:

'அம்புலிமாமா' படிக்கத் தொடங்கிய பருவத்தில் அனுபவித்த ஆச்சர்ய உணர்வு. பதின் வயதுகளின் முற்பகுதியில் 'மாயா பஜார்' பார்த்தபோது ஏற்பட்ட பரிசுத்தமான பிரமிப்பு. குழந்தைப் பருவத்தின் இடையறாத வியப்புகளையும், தொடர் ஆச்சரியங்களையும் இன்றும் தம்முன் சுமந்து நடக்கும் என்போன்ற வயசான குழந்தைகளுக்கு உனது 'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' நெல்லை இருட்டுக் கடை அல்வா.

நன்றி சிம்பு

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x