Published : 09 May 2020 11:13 AM
Last Updated : 09 May 2020 11:13 AM

டிசம்பர் மாதம் வரை எந்தப் படத்துக்கும் சம்பளம் வேண்டாம்: நடிகர் அருள்தாஸ் அறிவிப்பு

‘நான் மகான் அல்ல’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருள்தாஸ். ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘ராஜபாட்டை’, ‘பாபநாசம்’, ‘தர்மதுரை’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘சூது கவ்வும்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டு, திரையரங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலருக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நடிகர் அருள்தாஸ் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம்தான். முதல் படமான 'நான் மகான் அல்ல' தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிஸியாக இருக்கிறேன். அதற்குக் காரணம்- எனது இயக்குனர்கள், உதவி இயக்குர்கள்
தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள்தான்! அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.
வாய்ப்பு கொடுத்தது இயக்குநர்கள் என்றாலும், எனக்குச் சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்.

இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என என் வாழ்வின் அனைத்து வசதிகளையும் தந்தது அந்த முதலாளிகள் கொடுத்த பணத்தினால்தான். இந்த நேரத்தில் எனக்குச் சம்பளம் கொடுத்து, என் வாழ்வை மேம்படுத்த உதவிய அனைத்து முதலாளிகளுக்கும் எனது அன்பு கலந்த மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உலகம் முழுக்க 'கோவிட்-19' என்ற கொடிய வைரஸ் பரவலால் திரைத்துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த கரோனா வைரஸ் கேள்விக்குறியாக்கிவிட்டது. ஆனாலும் நம் திரைத்துறையிலுள்ள ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும், ரஜினிகாந்த் தொடங்கி பல நல்ல உள்ளம் படைத்த திரைத்துறை நண்பர்களும் இயன்றவரை அனைவருக்கும் பல உதவிகளைச் செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. நானும் என்னைச் சுற்றி இருக்கும் நம் திரைத்துறை நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவுகளின் காரணமாக வருகிற சில மாதங்களுக்கு சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும். அதை மனதில் கொண்டு தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாகக் கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது.

அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கு சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் உள்ளன. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும். எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன்''.

இவ்வாறு அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x