Published : 05 May 2020 01:32 PM
Last Updated : 05 May 2020 01:32 PM

சிவாஜி பணத்தைத் தொட்டதே கிடையாது: கமல்

சிவாஜி பணத்தைத் தொட்டதே கிடையாது. அவர் அட்வான்ஸ் கூட கை நீட்டி வாங்கமாட்டார் என்று கமல் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில், தனது பழைய படங்கள் நினைவுகள், அரசியல் வருகை, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் கமல்ஹாசன். இதில் சிவாஜி பணத்தையே தொட்டதில்லை என்பதை ஒரு சம்பவத்துடன் நினைவுகூர்ந்தார் கமல்.

அந்தப் பகுதி:

விஜய் சேதுபதி: சிவாஜி பற்றிப் பேசினால் இன்றும் நீங்கள் உற்சாகமாகிவிடுவீர்கள். அவரிடம் நீங்கள் ரசித்த ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

கமல்: நாடகக் கம்பெனியிலிருந்து வெளியே வந்த சில காலம், சில பணக்காரர்களுடன் அவர் பழகினார். அவ்வளவுதான். மற்றபடி அவர் மாறவில்லை. மிகவும் சாதாரணமானவர். அவருக்கு கார் ஓட்டத் தெரியாது. ரூபாய், அணா என்று இருந்த பணத்தின் அளவெல்லாம் மாறிய பிறகு அவருக்குக் கணக்குப் பார்க்கத் தெரியாது.

'சொர்க்கம்' படத்தில் 'பொன்மகள் வந்தாள்' பாட்டின் படப்பிடிப்பின்போது நிறைய சில்லறை எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள். அதைப் பார்த்து, ஓ இதுதானா புது ரூபாய், சில்லறையைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே என்று சிவாஜி சொன்னார். அதைத் தவறாகப் புரிந்துகொண்டு அவர் திமிராகப் பேசுவதாகச் சொன்னார்கள். ஆனால், சிவாஜி சொன்னதுதான் உண்மை. அவர் ரூபாயைத் தொட்டதே கிடையாது. அட்வான்ஸ் கூட கை நீட்டி வாங்கமாட்டார். நான் கொடுத்தபோது கூட அவர் வாங்கிக் கொள்ளவில்லை.

என்னிடம் கேட்பார் எப்படி நீ ஃபிரான்ஸிலிருந்து லண்டன் செல்கிறாய் என்கிறாயே, எப்படிச் செல்வாய் என்றார். நான் எப்படி என்று சொன்னேன். அதற்கு அவர் ஆச்சரியமாக, "நீயே தனியாகச் சென்று டிக்கெட் எடுத்து, கையில் பெட்டியை எடுத்துக்கொண்டு, நீயே விமானத்தில் ஏறிச் செல்வாயா? அய்யோ, விமான நிலையத்தில் என்னைத் தனியாக விட்டுவிட்டால் அழுது விடுவேன்" என்றார். இதை அவர் சொன்னது 1991, 92-ல்.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x