Published : 04 May 2020 01:47 PM
Last Updated : 04 May 2020 01:47 PM

திரைத்துறைக்கு நிபந்தனையுடன் அனுமதி: அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேரில் சந்தித்து தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்

திரைத்துறைக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேரில் சந்தித்து தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே வெள்ளித்திரை, சின்னத்திரை சம்பந்தப்பட்ட எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. மேலும், இறுதிக்கட்டப் பணிகளும் எதுவுமே நடைபெறவில்லை. இதனால் திரைத்துறையினருக்குப் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தொழில்துறையினருக்குப் பல்வேறு விதிமுறைகளுடன் தொழில் தொடங்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. இதேபோன்று படங்களின் இறுதிக்கட்டப் பணிகளையும், சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனிடையே தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கான மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம். தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ்த் திரைப்படத்துறை படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் இதனால் தடைப்பட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இன்னும் இருப்பதால், 50 முதல் 100 பேர் செயல்படும் படப்பிடிப்பு செய்வதற்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்து இந்தப் பணிகளுக்காக தற்போது 50 நாட்களாகக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவற்றை முடித்து, படங்களைத் தயார் செய்ய முடியும்.

தற்போது 11 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதைப் போன்று, திரைப்படத்துறைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் செய்வதற்கு, ஏற்கெனவே தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் தங்களிடம் கேட்டுக்கொண்டபடி, நிபந்தனைகளோடு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம், அந்தப் பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். கேரளா அரசாங்கமும் இந்தப் பணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளதை தங்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.

தங்களின் அனுமதியைக் கோரும் இறுதிக்கட்டப் பணிகள்:

படத்தொகுப்பு (Editing) - அதிகபட்சம் முதல் 4 பேர் 5 பணியாற்றும் அலுவலகம்.

ஒலிச்சேர்க்கை (Dubbing) - அதிகபட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.

கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ் (VFX/CGI) - 10 முதல் 15 பேர் பணியாற்றும் அலுவலகம்.

டி.ஐ. (DI) எனப்படும் நிற கிரேடிங் - அதிகபட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.

பின்னணி இசை (Re-Recording) - அதிகபட்சம் 5 பேர் பணியாற்றும் இடம்.

ஒலிக் கலவை (Sound Design/Mixing) - அதிகபட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.

மேற்கூறிய இறுதிக்கட்டப் பணிகளை நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைசர் உபயோகித்தும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி சுகாதாரமான முறையில் செய்வோம் என்று தயாரிப்பாளர்களாகிய நாங்கள் உறுதி கூறுகிறோம்

இவ்வாறு தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவில் இயக்குநர் பாரதிராஜா, கலைப்புலி S. தாணு, டி.ஜி.தியாகராஜன், கேயார், கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், பி.எல்.தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர், கே.ராஜன், ஞானவேல்ராஜா, ஹெச்.முரளி, கே.விஜயகுமார், சித்ரா லட்சுமணன், எஸ்.எஸ்.துரைராஜ், சஷிகாந்த், தனஞ்ஜெயன், எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர் பாண்டியன், பி.மதன், ஜே.எஸ்.கே, சி.வி.குமார், விஷ்ணு விஷால், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குநர் மனோபாலா, எம்.திருமலை, டில்லி பாபு, எஸ்.நந்தகோபால், எம்.மகேஷ், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x