Published : 02 May 2020 08:42 PM
Last Updated : 02 May 2020 08:42 PM

தமிழக அரசு தன்னார்வலர்களை மதிக்கவில்லை; சும்மா பணம் கொடு என்பதில் அர்த்தமில்லை: கமல் காட்டம்

தமிழக அரசு தன்னார்வலர்களை மதிக்கவில்லை என்றும் சும்மா பணம் கொடு என்பதில் அர்த்தமில்லை என்றும் கமல் காட்டமாகத் தெரிவித்தார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளம் மூலம் நேரலைப் பேட்டியாகக் கொடுத்து வருகிறார்கள். இதில் கமல் - விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது.

இந்த நேரலைப் பேட்டியில் தமிழக அரசையும் கடுமையாக சாடினார் கமல்ஹாசன். அந்தப் பகுதி:

விஜய் சேதுபதி: அரசாங்கம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சாப்பாடு போடுகின்றன. இந்தக் கரோனா ஊரடங்கில் அது எவ்வளவு நாள் தாங்கும் என்று தெரியவில்லை.

கமல்: அது முடியாது. தமிழக அரசாங்கம் தன்னார்வலர்களை மதிக்கவில்லை. மதித்த இதர மாநிலங்களில் அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னார்வலர்கள் வரும்போது வேண்டாம் நானே பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்கள். அது அசட்டுத்தனம்தான். அகந்தை கூட இல்லை. அவர்கள் நம்மை எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சும்மா பணம் கொடு என்பதில் அர்த்தமில்லை. நாளைக்கு எண்ணிக்கை அதிகமானது என்றால் நீங்களும் நானும் நிச்சயம் தெருவுக்கு வருவோம். அப்புறம் என் வயது, எனக்கு இருக்கும் வியாதி பற்றிலெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஏனென்றால் உங்கள் பையனைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை அல்லவா. அது மாதிரி எத்தனையோ பேர் இருப்பார்கள். அந்த மாதிரியான ஒரு புரட்சிக்கு விதை விதைக்கக் கூடாது இந்த சுயநல அரசியல். அதனால்தான் நான் கோபப்படுகிறேன். எத்தனையோ விஞ்ஞானிகள் இருக்கிறார்கள், இதற்கான மருந்து சொல்கிறார்களோ இல்லையோ உதவி என்றவுடன் ஓடி வந்து செய்யக் காத்திருக்கிறார்கள்

அவர்களை எல்லாம் நிராகரித்துவிட்டு, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனச் சொல்லிவிட்டு ஐந்து வாரம் கடத்திவிட்டோம். இனி தேவைப்பட்டால் நாம் அனைவரும் நம் மக்களுக்காக வீதிக்கு வருவோம். இதில் அரசியல் எல்லாம் இல்லை. அது நம் கடமை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x