Published : 28 Apr 2020 04:14 PM
Last Updated : 28 Apr 2020 04:14 PM

'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டலில் வெளியாவதற்குத் தடை செய்ய வேண்டாம்: தாணு வேண்டுகோள்

'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டலில் வெளியாவதற்குத் தடை செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர் தாணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது.

இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு ஆடியோ பதிவு வெளியிடுவதும், அறிக்கை வெளியிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

தற்போது டிஜிட்டல் வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர் தாணு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"இன்றைய சூழ்நிலையில் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிட முடிவெடுத்துள்ளதால், மிகப்பெரிய பிரச்சினையை தமிழ்த் திரையுலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய கணிப்பு அப்படிக் கொடுத்தது தவறு என்று இருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர்களின் இன்றைய காலகட்ட சூழ்நிலையில், அந்தப் படத்தைக் கொடுத்தது தவறில்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால், இந்தப் படம் மார்ச் மாத இறுதியில் வெளியாகியிருந்தால் ஏப்ரல் மாதம் ஓடி, மே மாதம் OTT ப்ளாட்பார்மில் வெளியிடப்பட்டு இருக்கும்.

ஆனால், ஏப்ரல் மாதம் முழுக்கவே கரோனா பாதிப்பினால் திரையரங்குகள் முழுக்க மூடியாச்சு. ஏற்கெனவே அந்தத் தயாரிப்பாளருக்குத் திரையரங்கில் வெளியிடாததினால் எத்தனை கோடி இழப்போ, அதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த OTT பணத்தையும் இழந்துவிட்டால் என்ன செய்வது?

ராஜசேகர் பாண்டியன் ஒரு சிறு தயாரிப்பாளர். சின்ன படத்தை எடுத்துப் பண்ணிக்கொண்டிருக்கிறார். அந்தப் படமொன்றும் பெரிய படமல்ல. குறைவாகத்தான் கொடுத்திருப்பார்கள். இணையத்தில் கற்பனைக்கு அளவில்லாமல் எழுதுவார்கள். OTT-ல் விற்ற பணத்தின் மூலம் இன்னொரு சின்ன படம்தான் எடுப்பார்கள்.

நண்பர்களே, திரையரங்குகளுக்கு எந்தக் காலத்திலுமே அழிவில்லை. தொலைக்காட்சி வரும்போது நாம் என்ன சொன்னோம். சினிமா அழிந்தது என்றோம். வீட்டுக்கு வீடு சிடி ப்ளேயர் வந்தவுடன் சினிமா அழிந்தது என்றோம். 50 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து வெளியிட்டால், அன்றைக்கு இரவே இணையத்தில் வந்துவிடும். எதை நம்மால் தடை செய்ய முடிந்தது. சினிமா அழிந்துவிட்டதா?

அந்த மாதிரி தான் இந்த OTT ப்ளாட்பார்ம். வருடத்துக்கு 12 - 15 படங்கள்தான் வாங்குவார்கள். அதிலும் பெரிய படங்களாக வாங்கிவிட்டார்கள் என்றால், சின்ன படங்களை வாங்கவே மாட்டார்கள். அத்தி பூத்தாற்போல் ஒரு சின்ன படம் வாங்கியிருக்கும்போது இதை வரவேற்க வேண்டும். இதற்குத் தடைபோட்டு விடாதீர்கள்.

பல தயாரிப்பாளர்களின் படங்கள் முடிவடையும் நிலையில் உள்ளன. அவர்கள் படத்தை இனி முடிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எங்களுக்குக் கொள்கை அளவில் படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. கொடுக்கப் போவதும் கிடையாது. ஈகை குணம் கொண்ட ஒரு பட நிறுவனம், கல்விக்காக நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்தப் பணம் உதவியாக இருக்குமே தவிர, தடையாக இருக்காது. தயவுசெய்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்தப் படம் OTT-ல் திரையிடப்படட்டும். எதிர்காலத்தில் நாம் கூடி உட்கார்ந்து பேசி, எப்படிப் பண்ணலாம் என்று முடிவெடுப்போம்.

அனைவருமே என்னுடைய நண்பர்கள்தானே. சினிமாவை அழிக்கவே முடியாது. ஒரு வழி அடைத்தால் கடவுள் இன்னொரு வழி கொடுப்பார். அதனால் நமக்கு நல்லதொரு தீர்வைக் கடவுள் தருவார். ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஒன்றுசேர்ந்து பேசக்கூடிய சூழலை நாம் உருவாக்குவோம். எதிர்காலத்தில் நல்ல முறையில் வியாபாரம் செய்வோம். 'பொன்மகள் வந்தாள்' OTT-ல் வெளியாவதற்குத் தடை செய்ய வேண்டாம். அவர்களைத் தண்டிக்கவோ, கண்டிக்கவோ வேண்டாம். காலத்தின் கட்டாயம் கொடுக்க வேண்டிய சூழல். அவர்களும் மனுதர்மம் பிரகாரம்தான் நடந்திருக்கிறார்கள். ஆகவே, எனது அன்பு நண்பர்களே உங்களிடம் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, நல்லதொரு வாகை சூடி வலம் வருவதற்கு வழிவிடுங்கள். நல்லமுறையில் திரையுலகை வழிநடத்திச் செல்வோம்.

சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்களை இந்தத் திரையுலகம் கைவிடாது. இன்றைய காலகட்டத்தில் அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். இந்த சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதை நாமெல்லாம் கூடிப்பேசி முடிவெடுப்போம். நமக்குள் ஒற்றுமை வேண்டும். இந்த ஒற்றுமையில்லாததால் வரும் பிரச்சினைதான் இது. இந்த ஒற்றுமைக்கு யார் தடையாக இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்".

இவ்வாறு தாணு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x