Published : 26 Apr 2020 19:27 pm

Updated : 26 Apr 2020 21:31 pm

 

Published : 26 Apr 2020 07:27 PM
Last Updated : 26 Apr 2020 09:31 PM

'பொன்மகள் வந்தாள்' டிஜிட்டல் வெளியீட்டு சர்ச்சை: 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை

30-producers-joint-press-release-about-ponmagal-vandhal

'பொன்மகள் வந்தாள்' படம் டிஜிட்டலில் வெளியாக இருப்பது சர்ச்சையாகியுள்ள நிலையில், 30 தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கை விட்டுள்ளனர்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது.


இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு ஆடியோ பதிவு வெளியிடுவதும், அறிக்கை வெளியிடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

தற்போது 30 தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"திரைப்படத் தயாரிப்புத் துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவை சரியான முறையில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை நாம் அனைவரும் வரவேற்று மேலும் பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கு வாங்க வேண்டும் என்று கோர வேண்டும்.

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும், சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரைப்படத் துறை வளமாக இயங்க அனைத்துத் தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த கரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT ப்ரீமியர் படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாகச் செயல்பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு 30 தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் பாரதிராஜா, கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், கே.ராஜன், கே.ஈ.ஞானவேல் ராஜா, ஹெச்.முரளி, கே. விஜயகுமார், சித்ரா லட்சுமணன், எஸ்.எஸ். துரைராஜ், பெப்சி சிவா, ஒய் நாட் சஷிகாந்த், ஜி. தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர் பாண்டியன், ஜே. சதீஷ்குமார், சி.வி.குமார், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குநர் மனோபாலா, எஸ். நந்தகோபால், ஆரா சினிமாஸ் மகேஷ், ஆர்.கே. சுரேஷ், வினோத் குமார், பி.எஸ். ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், பி.ரங்கநாதன், எம்.எஸ். முருகராஜ், டாக்டர். பிரபு திலக், ‘கின்னஸ்’ பாபு கணேஷ் ஆகியோர் உள்ளனர்.

தவறவிடாதீர்!

பொன்மகள் வந்தாள்ஜோதிகாஇயக்குநர் பிரட்ரிக்2டி நிறுவனம்டிஜிட்டல் வெளியீடுசூர்யாதயாரிப்பாளர் சங்கம்திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்அமேசான் நிறுவனம்30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x