Published : 26 Apr 2020 12:49 PM
Last Updated : 26 Apr 2020 12:49 PM

டிஜிட்டல் வெளியீடு என்பது தயாரிப்பாளரின் 100% உரிமை: டி.சிவா உறுதி

டிஜிட்டல் வெளியீடு என்பது தயாரிப்பாளரின் 100% உரிமை என்று தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வர இருந்தது. ஆனால், அமேசான் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியதால், நேரடியாக டிஜிட்டலில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகாது.

இந்த முடிவால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் டி.சிவா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"'பொன்மகள் வந்தாள்' படம் தொடர்பாக அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். முக்கியமாகத் திரையரங்க உரிமையாளர்கள் சிலரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, இதை ஊடகங்களுக்கு எடுத்துச் சென்று பொது விஷயமாக்க வேண்டாம். ஏதேனும் வரைமுறைகள் வைத்துக் கொண்டு செயல்படலாம். விவாதிப்போம் என்று எவ்வளவோ சொன்னேன். அதற்குச் செவி சாய்க்கவில்லை. இப்போது விவாதத்துக்குரிய விஷயமாகிவிட்டது.

தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்கள் யாரிடமும் கலந்து பேசாமல் இப்படிச் செய்தது வருத்தத்திற்குரிய விஷயம். அடுத்து, 'பொன்மகள் வந்தாள்' படத்தை மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். அந்த கம்பெனி என்ற கண்ணோட்டம் தேவையில்லை. இன்னும் 3 தயாரிப்பாளர்கள் அவர்களுடைய 5 படங்களை இதே மாதிரி இணைய வெளியீட்டுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஒவ்வொன்றாக அறிவிப்பு வரும். அனைத்துமே 3 -4 கோடிகளில் எடுக்கப்பட்ட மீடியம் பட்ஜெட் படங்கள்தான். சிறு பட்ஜெட் படங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இது. இந்த மாதிரி பிரச்சினைக்குரிய நேரத்தில் தப்பித்துக் கொள்ளலாம்.

இந்தச் சூழலில் அனைத்தும் சரியாகி திரையரங்கம் திறந்து சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகக் குறைந்தது 10 மாதங்கள் ஆகலாம். அதற்குள் இந்தப் படத்தின் நிலைமை என்னவாகும், ஆகையால் வாங்கிக் கொள்கிறார்கள் என்றால் நல்ல விஷயம். இதில் அமேசான் நிறுவனம் நல்ல கதையம்சம் உள்ள படமாக இருந்தால் வாங்கிக் கொள்கிறது. முன்னணி நடிகர்கள் நடித்த படமாக இருந்தால், கொஞ்சம் கதையம்சம் சரியில்லை என்றால் கூட ஒப்புக் கொள்வார்கள். இந்த அடிப்படையில்தான் படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இதில் சின்ன கம்பெனி, பெரிய கம்பெனி என்றெல்லாம் ஒன்றுமே கிடையாது. உடனடியாக ஒளிபரப்பு என்றே அமேசான் பார்க்கிறது. அதனால்தான் இந்த லாக் டவுன் சமயத்தில் கூட நல்ல தொகை கொடுக்க முடிகிறது என்பது உண்மை.

சினிமாவே ஒரு கோமா நிலையில் போய் லாக் டவுனில் சிக்கிக் கொண்டிருக்கும்போது, இது நல்ல தீர்வாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் இந்த பட்ஜெட்டிற்கு மேல் டிஜிட்டல் வெளியீடு வேண்டாம் என சில வரைமுறைகளைப் பேசி முடிவெடுத்திருக்கலாம். உடனே ரெட் என்றெல்லாம் பேசுவது, அடிப்படை வியாபார உரிமையைப் பறிக்கும் செயலாக இருக்கிறது. திரையரங்க உரிமையாளர்களும் நீண்ட கால அனுபவம் கொண்டவர்கள். இந்த விஷயத்தைச் சுமுகமாகப் பேசி முடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அதே மாதிரி, சூர்யா சார் படம் என்று பேச வேண்டாம். சாதாரண படங்களையும் வாங்கக் கூட அமேசான் நிறுவனம் தயாராகத் தான் இருக்கிறது. அவர்களுக்குக் கதை நன்றாக இருந்தால் போதுமானது.

'பொன்மகள் வந்தாள்' படம் நல்லபடியாக ஓடி ரேட்டிங் கிடைத்தது என்றால், அடுத்து நிறையப் படங்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் சிறிய படங்கள், மீடியம் பட்ஜெட் படங்கள் விற்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பை என்னவென்று பார்ப்பதை விடுத்து, வரும்போதே அதைத் தடுத்துப் போக முடியாமல் பண்ணினோம் என்றால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். எஃப்.எம்.எஸ், தொலைக்காட்சி உரிமம், இந்தி உரிமை என நிறைய விஷயங்கள் நல்லபடியாக இருந்து குறைந்துவிட்டது. இப்போது டிஜிட்டல் பிளாட்பார்ம் மூலமாக என்ன பண்ணலாம் என்பதை யோசனை செய்து பண்ண வேண்டும். குறிப்பிட்ட தயாரிப்பாளரின் படம் என்ற குற்றச்சாட்டுடன் பேச வேண்டாம். இது அனைவருக்கும் கிடைக்கும். படத்தின் கதை வலுவாக இருந்தால் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

சுப்பிரமணியம் சார் உட்கார்ந்து பேசுவோம் என்று சொல்லியிருக்கிறார். சிறு படங்களுக்கான காட்சிகள் ஒதுக்கீடு உள்ளிட்டவை என அனைத்தையும் பேசுவோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தயாரிப்பாளரின் தலை வெட்டும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. அது வேண்டாம். ஷோக்கள் மாற்றாமல் எப்படி பண்ணலாம் போன்ற விஷயங்களைப் பேச வேண்டும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங், க்யூப், விளம்பரங்கள் மூலம் ஷேர் என அனைத்துமே உட்கார்ந்து பேசுவோம். அனைத்தையுமே உட்கார்ந்து பேசி சரி செய்வோம். இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்க வேண்டும்.

திரைத்துறையில் இருக்கும் பெரியவர்கள் அனைவருமே முன்வந்து இதை முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு செய்ய வேண்டும். டிஜிட்டல் வெளியீடு என்பது தயாரிப்பாளரின் 100% உரிமை. அதிலிருந்து தப்பிக்க முடியுமானால் வந்துவிட வேண்டும். ஆகையால் இந்த விஷயத்தில் தனிப்பட்ட பெயரைப் போட்டு யாரையும் தாக்காதீர்கள். நாம் இல்லாமல் திரையரங்க உரிமையாளர்கள் இல்லை. அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. நிச்சயமாகப் புரிந்து கொள்வார்கள்".

இவ்வாறு டி.சிவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x