Published : 19 Apr 2020 12:38 PM
Last Updated : 19 Apr 2020 12:38 PM

ஊரடங்கு சமயத்தில் 'அச்சம் என்பது மடமையடா', 'என்னை அறிந்தால்' பார்க்காதீர்கள்; 'வாரணம் ஆயிரம்' பாருங்கள்: கெளதம் மேனன் விளக்கம்

ஊரடங்கு சமயத்தில் 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'என்னை அறிந்தால்' படங்களைப் பார்க்க வேண்டாம் என்றும் 'வாரணம் ஆயிரம்' பாருங்கள் என்றும் இயக்குநர் கெளதம் மேனன் பேசியுள்ளார்.

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். கரோனா குறித்த விழிப்புணர்வுப் பதிவுகளை மட்டும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இதனிடையே சில பிரபலங்கள் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று விழிப்புணர்வு வீடியோக்கள் எடுத்துக் கொடுத்துள்ளனர். அதை தமிழக அரசு விழிப்புணர்வு வீடியோவாக ஒளிபரப்பி வருகிறது. அவ்வாறு இயக்குநர் கெளதம் மேனன் ராமநாதபுரம் காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு வீடியோ பதிவைக் கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவை ராமநாதபுரம் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் கௌதம் மேனன் பேசியிருப்பதாவது:

"ராமநாதபுரம் எஸ்.பி. வருண் குமாரின் வேண்டுகோளுக்கு இணங்கப் பேசுகிறேன். இந்தப் பேச்சு அனைவருக்குமே பொருந்தும் எனத் தோன்றியது. 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். வாகனத்தைப் பறிமுதல் செய்து, எஃப்.ஐ.ஆர். போடுவார்கள். அவ்வளவுதானே என்று நிறைய பேர் போரடிக்கிறது என்று வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. 144 தடை உத்தரவைக் கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள்.

144 தடை உத்தரவை மீறி எஃப்.ஐ.ஆர். போடப்பட்டால், நீதிபதி முன்னால் போய் நிற்க வேண்டும். அதற்குத் தண்டனைகள் கொடுக்கப்படும். உங்களுடைய வாகனங்களைத் திரும்பப் பெற நீதிமன்றத்துக்குத்தான் போய் நிற்க வேண்டும். அதற்கு ஒரு வக்கீலைப் பிடிக்க வேண்டும். அதற்குச் செலவு ஆகும். இதெல்லாமே பின்னால் உங்களைப் பாதிக்கும்.

பாஸ்போர்ட், வேலை உள்ளிட்டவற்றுக்குச் செல்லும்போது கண்டிப்பாக இதெல்லாம் காரணமாகச் சொல்லி மறுக்கப்படலாம். எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள். வெளியே செல்லாதீர்கள். எல்லாம் சுபமே என்று அரசாங்கம் செல்லும்வரை வீட்டிலேயே உட்காருங்கள். அது கஷ்டம்தான்.

தினசரி கூலித் தொழிலாளர்கள் சாப்பாடு இல்லாமல் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆன்லைனில் குழு மாதிரி ஒன்று தொடங்கி எப்படி உதவி செய்யலாம் என்று பாருங்கள். படங்கள் பாருங்கள், நிறையப் புத்தகம் படியுங்கள். வழக்கமாக எங்களுடைய படங்கள் பாருங்கள் என்று சொல்லுவோம். ஆனால், மாறாக என்னுடைய 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'என்னை அறிந்தால்' ஆகிய 2 படங்களைப் பார்க்காதீர்கள்.

ஏனென்றால், சிம்பு தனது காதலியைக் கூட்டிக் கொண்டு ஒரு சாலைப் பயணம் செல்வார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அதைச் செய்யாதீர்கள். 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித் தன் மகளை ஊர் ஊராகக் கூட்டிச் செல்வார். அதைப் பார்த்துவிட்டு, அதே மாதிரி இறங்காதீர்கள். வாரணம் ஆயிரம்' படம் பாருங்கள். அதில் கடினமான தருணங்களில் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம் என இறங்குவார். சூர்யாவே அந்தக் காட்சிகளுக்காக 6 மாதம் எடுத்துக் கொண்டார். அந்த மாதிரி சில விஷயங்கள் இன்ஸ்பயர் ஆகி பண்ணுங்கள். நிறையப் பேருக்கு உதவி பண்ணுங்கள். வீட்டில் இருந்துகொண்டு எவ்வளவோ விஷயங்கள் பண்ணலாம். 144-ஐ சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள். கரோனாவை சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள்"

இவ்வாறு கெளதம் மேனன் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x