Published : 17 Apr 2020 10:30 PM
Last Updated : 17 Apr 2020 10:30 PM

அற்புதமான சேவையைத் தொடருங்கள்: தெலுங்கு திரையுலகினருக்கு அமிதாப் பச்சன் பாராட்டு

தொழிலாளர்களுக்காக ஒன்றிணைந்து உதவி செய்து வருவதற்கு தெலுங்கு திரையுலகினரை அமிதாப் பச்சன் பாராட்டியுள்ளார்.

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளிதிரை, சின்னதிரை படப்பிடிப்புகள் எதுவுமே நடக்கவில்லை. படப்பிடிப்புகளை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு அந்தந்த திரையுலக பிரபலங்கள் ஒன்றிணைந்து நிவாரண உதவி அளித்து வருகிறார்கள். இதற்காக தெலுங்கில் 'கரோனா நெருக்கடிக்கான தொண்டு அமைப்பு' தொடங்கப்பட்டது. இதனை சிரஞ்சீவி தொடங்கி, இதற்காக அனைத்து திரையுலக பிரபலங்களும் நிதியுதவி வழங்கினார்கள். அதன் மூலம் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

சிரஞ்சீவி தொடங்கி நடத்தி வருவதை, இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

”தெலுங்கு மாநிலங்கள் இரண்டில் இருக்கும் திரைத்துறையின் தினக்கூலி பணியாளர்களுக்கு உதவவே சிரஞ்சீவியை தலைவராகக் கொண்டு கரோனா அறக்கட்டளை நிறுவப்பட்டது என்று எனக்குத் தெரியவந்தது. பல்வேறு பிரபலங்கள், நடிகர்கள், நல விரும்பிகளிடமிருந்து ரூ. 8 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 12,000 தினக்கூலி பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு, ஒரு மாதத்துக்கோ அல்லது தேவைப்பட்டால் இன்னும் அதிக நாட்களுக்கோ, அவர்கள் வீட்டுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்களைத் தர இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

இந்த மனிதாபிமான செயலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், கரோனா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களுக்கும் என் வாழ்த்துகள். அற்புதமான சேவையைத் தொடருங்கள்"

இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x