Published : 16 Apr 2020 02:00 PM
Last Updated : 16 Apr 2020 02:00 PM

'நாயகன்' படத்தின் உணர்வுபூர்வ காட்சிகள் உருவான விதம்: மணிரத்னம் பகிர்வு

'நாயகன்' படத்தின் உணர்வுபூர்வ காட்சிகள் உருவான விதம் தொடர்பாக மணிரத்னம் பேசியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் 'நாயகன்'. இப்போது வரை இந்தப் படம் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காட்சியமைப்புகள், பாடல்கள், வசனங்கள் என கச்சிதமாக இருக்கும்.

இந்தப் படத்தில் கமல்ஹாசனின் மகன் இறக்கும் காட்சி மிக முக்கியமானதாகும். அதனைத் தொடர்ந்து அவருடைய மகள் வீட்டை விட்டு வெளியேறுவார். அந்தக் காட்சிகள் அனைத்துமே படத்தின் கதையோட்டத்தில் மிக முக்கியமானதாக இருக்கும்.

சமீபத்தில் மணிரத்னம் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது, மனைவி சுஹாசினி சில கேள்விகளை எழுப்பினார். அதில் "'நாயகன்' எடுக்கும்போது நீங்களும் சரி, கமல்ஹாசனும் சரி இளைஞர்கள். அந்தப் படத்தில் கமல்ஹாசனின் மகன் இறக்கும் காட்சியில் அவரது நடிப்பு, அதை எப்படி யோசித்தீர்கள், எழுதினீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு மணிரத்னம் அளித்த பதில்:

"உண்மையில் அது முழுவதும் கமலின் முயற்சி. 'நாயகன்' நடிக்க வரும்போது கமல்ஹாசன் 'சலங்கை ஒலி', '16 வயதினிலே' என நிறைய அற்புதமான படங்களை நடித்த, அனுபவம் பெற்ற நடிகர். எனவே வயது ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை. அவர் படத்துக்கான தோற்றம், ஒப்பனையை ஒத்திகை பார்த்த நேரத்தில் அவரிடம் இந்தக் காட்சியைச் சொன்னேன்.

அடுத்தடுத்த மூன்று உணர்வுபூர்வமான காட்சிகள் இருந்தன. அவர் மகன் இறப்பது, இறுதிச் சடங்கு செய்வது, அவர் பெண் அவரை விட்டுச் செல்வது என அடுத்தடுத்து நடக்கும். எனவே அந்தக் கதாபாத்திரம் அதை எப்படிக் கையாளும், எப்படி அதைக் கொண்டு செல்ல வேண்டும், எங்கு அதிகம் இருக்க வேண்டும், எங்கு குறைவாக இருக்க வேண்டும் என்று பேசி முடிவெடுத்தோம்.

நான் அறையில் சொல்லும்போது அவர் எப்படி அழுது காட்டினாரோ அப்படித்தான் நடித்தார். படப்பிடிப்பில் அதை நம்பமுடியவில்லை. டப்பிங் செய்த போதுதான் எங்களுக்குக் கடினமான வேலை காத்திருந்தது. ஏனென்றால் படப்பிடிப்பில் நடித்தது அவ்வளவு அற்புதமாக இருந்தது. அந்த ஒலியை யார் அப்படியே படத்தில் கொண்டு வருவார் என்று பார்த்தோம்".

இவ்வாறு மணிரத்னம் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x