Published : 07 Mar 2020 05:02 PM
Last Updated : 07 Mar 2020 05:02 PM

'கேஜிஎஃப் 2' - 'ஆர்.ஆர்.ஆர்' ஒரே நாளில் வெளியீடா?

'கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாகமும், எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்’ படமும் ஒரே நாளில் வெளியாகுமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் ’கேஜிஎஃப்’ நாயகன் யாஷ்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ’கேஜிஎஃப்’ திரைப்படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டு மேலும் 4 மொழிகளில் டப் செய்யப்பட்டது. யாஷ் நாயகனாக நடிக்கப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்த இந்தப் படம், வெளியான அனைத்து மொழிகளிலுமே வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இரண்டு வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்னொரு பக்கம் ’பாகுபலி’ படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அல்லூரி சீதாராம ராஜு, கோமரம் பீம் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கைக் கதையை ’ஆர் ஆர் ஆர்’ என்ற பெயரில் பிரம்மாண்ட திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா, அஜய் தேவ்கன், அலியா பட் உள்ளிட்டோ இந்தப் படத்தில் நடிக்கின்றனர். முதலில் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2021 ஜனவரி மாதம் சங்கராந்தி வெளியீடாகப் படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகமும் 2021 சங்கராந்தி வெளியீடாக வரும் என்று செய்திகள் வர, இது குறித்து படத்தின் நாயகன் யாஷ் தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு பேட்டியில் இதுகுறித்துப் பேசியுள்ள யாஷ், " 'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎஃப் 2' இரண்டு படங்களின் இந்திப் பதிப்புகளையும், முன்னணி பாலிவுட் விநியோகஸ்தர் அனில் தந்தானி வெளியிடவுள்ளார். எனவே, இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் பேச்சுக்கே இடமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

'கே.ஜி.எஃப் 2' வெளியீடு தேதி குறித்த தகவல் எதையும் யாஷ் குறிப்பிடவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x