Published : 28 Feb 2020 01:47 PM
Last Updated : 28 Feb 2020 01:47 PM

முதல் பார்வை: திரௌபதி 

மனைவி, அவரது தங்கை இருவரையும் ஆணவக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் செல்கிறார் ரிஷி ரிச்சர்ட். ஜாமீனில் 6 மாதங்கள் கழித்து வருகிறார். நண்பர்களின் உதவியால் சென்னை வந்து, ஒரு வழக்கறிஞர், ஒரு சாதிக் கட்சி பிரதிநிதி என இருவரையும் பின் தொடர்கிறார். திரௌபதியின் சபதத்தை முடிக்க வேண்டும் என்று நண்பரிடம் கூறுகிறார். அவர் சென்னை வந்து இவர்களைத் தொடர்வதன் காரணம் என்ன, திரௌபதியின் சபதம் என்ன, இவற்றுக்கான விடையை நீட்டி முழக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

நடிகர்கள் தேர்விலிருந்து, தொழில்நுட்ப சங்கதிகள் வரை பல இடங்களில் படம் தடுமாறுகிறது. இதில் ஆறு பாலா, அம்பானி சங்கர், கருணாஸ் ஆகிய நடிகர்கள் மட்டுமே நடிப்பளவில் தங்கள் வேலையை ஒழுங்காக் செய்துள்ளனர். ரிஷி ரிச்சர்ட் எப்போதும் போல தனது வழக்கான நடிப்பு அல்லது நடிப்பின்மையைக் காட்டுகிறார். நாயகி ஷீலா அளவுக்கதிகமான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்தை ஒன்றவிடாமல் பார்த்துக் கொள்கிறார். போலீஸ், மற்ற நண்பர்கள், வில்லன்கள் என அனைவருமே நடித்து விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தனர்.

பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்துக்கு வலு சேர்க்காமல் நம் செவித்திறனைச் சோதிக்கின்றன. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட மற்ற தொழில்நுட்ப ஏரியாக்களிலும் படம் ஏமாற்றத்தையே தருகிறது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற காரணம் சொல்லப்படலாம். ஆனால் குறும்படம் எடுக்கும் மாணவர்களே கையிலிருக்கும் குறைந்த பணத்தில் ஒளி, ஒலி தரமான படைப்புகளைத் தரும்போது திரைப்படம் என்று வரும்போது இன்னமும் கூட மெனக்கெடல் அவசியம் தேவை.

திரௌபதி படத்தின் முன்னோட்டம், அதில் சொல்லப்பட்ட சாதியரீதியிலான விஷயங்கள், இதுதான் இன்று படம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட முக்கியக் காரணம். ஆனால் இந்த சர்ச்சை எதுவும் முழு படத்தில் இல்லை. தனி நபர் தாக்குதல் இல்லாமல் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் மோகன். படத்தில் சொல்லப்பட்டும் ஒரு செய்தியும் கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்குப் புதிது. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயமும் கூட. எனவே, அந்த விதத்தில் நிஜமாகவே ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிற படம் திரௌபதி. கதையில் இருக்கும் சின்ன மர்மம், எதிர்பார்ப்பு, ஒரு சில காட்சிகள், சொல்லப்படும் தகவல்கள் இவையெல்லாம் முதல் பாதி வரை படத்தைக் காப்பாற்றுகிறது.

இரண்டாவது பாதியில் நடந்தது என்ன என்று ஃபிளாஷ்பேக் விரியும்போது படம் மொத்தமாக வலுவிழந்து போகிறது. இதில் சொல்லப்படுவதும் ஒரு முக்கியமான விஷயம்தான். ஆனால் அது ஏற்கெனவே முதல் பாதியில் நமக்கு அறிமுகமாகிவிட்ட காரணத்தால் அதையே ஏன் மீண்டும் இவ்வளவு விரிவாக சொல்ல வேண்டும் என்ற கேள்வியே எழுகிறது. சொல்லப்படும் செய்திகளும் அந்தக் கால சினிமா போலவே இருக்கிறது. உண்மையில் யார் என்ன குற்றம் செய்தார்கள் என்று தெரியாத ரிச்சர்ட் கதாபாத்திரம் எப்படி இருவரைத் தேர்வு செய்து பின் தொடர்கிறார், ரிச்சர்டுக்கே தெரியாத விஷயத்தை அவரது நண்பர் ஆறுபாலா எப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார், ரிச்சர்ட் செய்த கொலைகளுக்குத் தண்டனை என்ன என்று வரிசையாக பல கேள்விகளும் எழுகின்றன.

முதல் பாதியில் கொடுத்த பரபரப்பு, சுவாரசியமான தகவல்கள் ஆகியவற்றைக் கொண்டு இரண்டாவது பாதியின் நீளத்தைக் குறைத்து திரைக்கதையை இன்னும் பட்டை தீட்டியிருந்தால் இந்த திரௌபதி, உருவாக்கிய பரபரப்புக்கு உச்சம் தொட்டிருக்கும். ஆனால், படமாக்கும் விதத்திலிருந்தே தெரியும் தடுமாற்றத்தால் சுமாரான படமாகவே முடிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x