Published : 22 Jan 2020 06:41 PM
Last Updated : 22 Jan 2020 06:41 PM

திரையுலகினரின் மெனக்கிடல்: நிவேதா தாமஸின் அனுபவப் பகிர்வு

படப்பிடிப்புத் தளத்தில் திரையுலகினரின் மெனக்கிடல் குறித்து நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், இந்தப் படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்தப் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸின் நடிப்பைப் பலரும் பாராட்டியுள்ளனர். தற்போது ஒரு படத்துக்கு எந்த அளவுக்கு உழைக்கிறோம் என்பதைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

தங்களுடைய உழைப்பு குறித்து நிவேதா தாமஸ், "படத்தில் ஒரு ஷாட் இரண்டு விநாடிகள் மட்டுமே வரும். இதற்கு இரண்டு விமானங்கள் பிடித்துப் பயணம் செய்து, பல மணிநேரங்கள் முன் தயாரிப்பு செய்து, படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். திரைப்பட உருவாக்கம் மிகக் கடினமான, ஒழுக்கமான வேலை.

அதற்கு ஒரு முறை உண்டு, பலர் ஈடுபட வேண்டும். கருவிகள், மேலாண்மை, திட்டமிடல் மற்றும் மகத்தான முயற்சி தேவை. இது என்ன என்பது புரிய ஒரு நாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளுங்கள். தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், "எங்கள் குழு கடினமான உழைப்பைப் போட்டிருக்கிறது" என்று சொல்லும்போது அடிக்கடி கேட்கும் வழக்கமான விஷயமாகத் தோன்றலாம். அவர்கள் ஏன் அதைச் சொல்கிறார்கள் என்பதை ஒரு நொடி யோசித்துப் பாருங்கள்.

ஒரு படத்தை அது தரும் அனுபவத்துக்காக ரசியுங்கள். கசப்பு, இனிப்பு, மகிழ்ச்சி, மாயம், வலி, பழி (இன்னமும் கமர்ஷியல் சினிமா என்றால் என்ன என்று நான் புரிந்துகொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்) என நீங்கள் பார்க்கும் படத்துடன் ஒன்றிப் போய்விடுங்கள். அன்பாக இருங்கள்.

உங்கள் உதடுகளிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் பரவும். எனவே அந்த வார்த்தைகள் மிக முக்கியம்" என்று தெரிவித்துள்ளார் நிவேதா தாமஸ்.

'தர்பார்' படத்தைத் தொடர்ந்து சித்தார்த் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை நிவேதா தாமஸ் இன்னும் உறுதி செய்யவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x