Last Updated : 11 Jan, 2020 04:10 PM

 

Published : 11 Jan 2020 04:10 PM
Last Updated : 11 Jan 2020 04:10 PM

'தர்பார்’... ரஜினி படமா? ஏ.ஆர்.முருகதாஸ் படமா? 

வழக்கமாக ஜனவரி 14-ம் தேதி தான் பொங்கல். ஆனால் இந்த முறை, 15-ம் தேதி தான் பொங்கல் என்று காலண்டர்கள் தெரிவித்துவிட்டன. அதேசமயம், தமிழ் ரசிகர்களுக்கு ஜனவரி 9-ம் தேதியே பொங்கல் திருநாள் வந்துவிட்டது. காரணம்... ரஜினியின் ‘தர்பார்’ ரிலீஸ்!

எப்போதும் போலவே, இந்த முறையும், ரஜினியின் எல்லாப் படத்தையும் போலவே இந்தப் படத்துக்கும் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது. அதுதான் ரஜினி மேஜிக்!

கடந்த பத்து வருடங்களில், ஷங்கர், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் என படங்கள் பண்ணிய ரஜினி... இப்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்தார். விஜயகாந்தை வைத்து முருகதாஸ் ‘ரமணா’ பண்ணியதில் இருந்தே, ‘அடுத்து ரஜினி படம்’ என்று பேசப்பட்டு வந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, முருகதாஸின் கனவும் ரசிகர்களின் ஆசையும் நிறைவேறியது.

தமிழ் சினிமாவில், ஒரு ஹீரோ போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்றாலே, அது அதிர்வை உண்டாக்கும்படி இருக்கும் என்பது நியதி. சிவாஜிக்கு ‘தங்கப்பதக்கம்’, சத்யராஜுக்கு ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘வால்டர் வெற்றிவேல்’, விஜயகாந்துக்கு ’ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’ உள்ளிட்ட ஏராளாமான படங்கள் அப்படி அமைந்தன. அந்த வகையில் ரஜினியின் ‘மூன்று முகம்’ ரஜினி ரசிகர்களாலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாத படம். அதன் பின்னர், ரஜினி ஒருசில படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியனுக்குத் தனியிடம் ஒதுக்கித் தந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இப்போது, ‘பேட்ட’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் என்றதுமே குஷியாகிப் போன ரசிகர்கள், அதில் ஆதித்யா அருணாச்சலம் எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அறிந்ததும் எகிடுதகிடாக லப்டப் எகிற, நகம் கடித்துக் காத்திருந்தார்கள்.

ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என படத்தில் பங்கேற்றிருப்பவர்களின் பெயர்கள் வெளியாக வெளியாக, படம் மீதான எதிர்பார்ப்பும் உயர்ந்துகொண்டே போனது. டீஸரும் ட்ரெய்லரும் ‘சும்மா கிழி’ பாடலும் பிபி எகிறவைத்தன.

இந்த சமயத்திலேயே, ரசிகர்கள் மத்தியில் ‘இது ரஜினி படமாக இருக்குமா, ஏ.ஆர்.முருகதாஸ் படமாக இருக்குமா?’ என்ற கேள்வியும் எழுந்தது. ‘இது முருகதாஸ் இயக்கும் ரஜினி படமாக இருக்கும்’ என்று மூன்றாவது பதிலும் சொல்லப்பட்டது. படம் வெளியாகி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில், ‘ஆமாம், இது ரஜினி படமா, ஏ.ஆர்.முருகதாஸ் படமா’ என்று பார்த்தவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், பார்க்கத் துடிக்கும் ரசிகர்கள்.

மும்பையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் ‘தர்பார்’ படத்தில், அட்டகாசமாக மாஸ் என்ட்ரி கொடுத்து, ரஜினியைக் காட்டியிருப்பார் முருகதாஸ். முதல் படத்தில் இருந்தே, அஜித், சூர்யா, விஜயகாந்த், விஜய் என்று மாஸ் ஹீரோக்களைப் படமாக்கியவருக்கு, சூப்பர் ஸ்டாரைக் காட்டுவது ‘அல்வா’ சாப்பிடுவது மாதிரி.

நல்லதுக்காக கெட்டபயலாக மாறும் போலீஸ் கமிஷ்னராக ரஜினி. அதை வைத்துக் கொண்டு, மும்பை நகரம், போதைப் பொருள், பெண்கள், சிறுமிகள் கடத்தல் என்றெல்லாம் தொட்டிருக்கிறார். அந்தக் களங்களில், ரஜினியும் ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு விதமாக ஆராய்ந்து போவதெல்லாம் ரஜினி ரசிகர்களை உசுப்பேற்றிவிடுகிற காட்சிகள்.

அவரின் மகள் நிவேதா தாமஸ். அப்பா - மகள் போர்ஷன் குறைவுதான். ஆனால் அதைக் கொஞ்சம் நீட்டியிருந்தால், அதிகப்படுத்தியிருந்தால், யார் கண்டது... ரஜினியின் உன்னத நடிப்பை வெளிப்படுத்திய ‘முள்ளும் மலரும்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘கை கொடுக்கும் கை’ மாதிரியோ கூட அமைந்திருக்கலாம். ஆனால், அப்பாவும் மகளும் திடீரென்று நயன்தாராவைக் கண்டதும், ‘அவரைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. அதுக்குப் பிறகு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என மகள் சொல்வதும்... ஒட்டவுமில்லை; ரசிப்புக்கு உரியதாகவும் இல்லை. ‘ஸாரி... எனக்கு ஏற்கெனவே கல்யாணமாயிருச்சு’ என்று நயன் சொல்லியிருந்தால், என்னாகும்?

’பாட்ஷா’வில் தங்கையைத் தொட்டதும் தம்பியை அடித்ததும் ஆனந்த்ராஜையும் அவர் கூட்டத்தையும் தெருவில் வெளுத்தெடுத்து, லைட் கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பாரே... அதற்கு சற்றும் குறையாமல், அந்த ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தின் சண்டைக்காட்சியில் அதகளம் பண்ணினார் ரஜினி.

இங்கேதான் ஏ.ஆர்.முருகதாஸின் முந்தைய படங்கள் நினைவுக்கு வருகின்றன. ‘தீனா’ படத்தில், அஜித் - லைலா, ‘கஜினி’யில் சூர்யா - அசின் என ஆக்‌ஷன் படங்களில் கூட, காதல் போர்ஷனை, கவிதையாக்கித் தந்திருப்பார். கூடவே, காமெடியாகவும்! ஆனால், இதில் உள்ள ரஜினி - நயன் விஷயத்தை, முருகதாஸ் கண்டுகொள்ளவே இல்லை. சொல்லப்போனால், நயன்தாராவையே கண்டுகொள்ளவில்லை. சூப்பர் ஸ்டார் வேல்யூ உள்ள ரஜினியின் படத்துக்கு நயன் இருந்தால்தான் மார்க்கெட் வேல்யூ கூடும் என்று ஏன் நினைத்தார் முருகதாஸ்?

‘பாட்ஷா’வும் மும்பையில் நடக்கிற கதைதான் என்றாலும் நக்மா, ஜனகராஜ், மகாநதி சங்கர், தளபதி தினேஷ், சத்யபிரியா, யுவராணி, செண்பகா, தேவன், ரகுவரன், சரண்ராஜ், விஜயகுமார் என பலரும் தமிழ் முகங்கள். இது கதைக்கும் நமக்குமான இணைப்பை ஏற்படுத்தியது. இங்கே அது மிஸ்ஸிங். என்றாலும் அதையும் கடந்து, நம்மை ஜில்லிடவைப்பதும் நமக்குள் ஜிவ்வேற்றுவதும் ரஜினி என்கிற சூப்பர் மேஜிக் ஹீரோதான்! மனிதர், இத்தனை வயதிலும் என்னமாய் துள்ளுகிறார்; ஆக்‌ஷன் அலப்பறையைக் கொடுக்கிறார். யோகி பாபுவுக்காக இறங்கி வந்து காமெடியாட்டமும் போடுகிறார்.

பொதுவாகவே, முருகதாஸின் வில்லன்கள், ஹீரோவை விட அசுரபலத்துடன் இருப்பார்கள். ‘கஜினி’ டபுள் ஆக்‌ஷன் வில்லன்களையும், ‘ஏழாம் அறிவு’ வில்லனையும் பார்த்து மிரண்டுதான் போனோம். இங்கே, வில்லனிடம் இவையெல்லாம் மிஸ்ஸிங். காட்சி அமைப்புகளில், நம்மை கிடுகிடுக்க வைக்கிற முருகதாஸ் ஸ்பெஷல் ஆக்‌ஷன் பிளாக்கும் ‘காணவில்லை’ போஸ்டர் ஒட்டி அறிவிக்கலாம் போல!

ஒரு ரஜினி படம் எப்படி இருக்கவேண்டும்? எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒன்றே ஒன்றுதான். அது ரசிகர்களைத் திருப்திபடுத்துகிற வகையில் கையாளப்பட்டிருக்கவேண்டும். ரஜினி படம் என்று கொண்டாடவேண்டும். ரஜினிக்கு ஒவ்வொரு சீனும் ஓப்பனிங்தான் எனும் அளவுக்கும் கேரக்டரைஸேஷன் பில்டப்புகளை சரிவிகிதத்தில் ஏற்றிக்கொண்டே வரவேண்டும். ‘தர்பார்’ படத்தில், இவையெல்லாம் இருப்பதால், இது ரஜினி படம் என்று சொல்கிறார்கள் ரசிகர்கள்.

ஆனால், சமூக அவலம் சொல்லும் ‘நாட்’, அதைப் பொளேரென்றோ திடுக்கென்றோ சொல்கிற நேர்த்தியான திரைக்கதை, படைப்பாளியின் கோபத்துடன் சுளீர் பளீர் வசனங்கள், கதைக்குள்ளேயே வரும் காமெடி, மொட்டைத்தலை, அதில் வகிடுத் தழும்பு, உடம்பெல்லாம் பச்சை குத்தப்பட்ட பெயர், விலாசம், போன் நம்பர்கள், தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த புதிய மறதி நோய், போதி தர்மர், ஜப்பான், அவர் சொல்லித் தந்த ஹிப்னாடிஸம், அசுரபலம், சர்க்கஸ் கம்பெனி, ஆய்வு மாணவி, புதிய நோய் பரப்பும் வில்லக் கொடூரம் என ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாக மிரட்டியெடுத்திருப்பார். அதுதான் ஏ.ஆர்.முருகதாஸ் ஸ்டைல்.

ஸ்டைல் அத்தாரிட்டியான ரஜினியே இருக்கும்போது, நம்ம ஸ்டைல் எதற்கு என மொத்தத்தையும் வீட்டிலேயே வைத்துவிட்டுதான், ஷூட்டிங் வந்தாரோ முருகதாஸ் எனும் வகையில் இருக்கிறது 'தர்பார்'. 'தங்கப்பதக்கம்’ சிவாஜி, மனைவி இறந்துவிட்ட சேதி அறிந்து, துவண்டு, சுதாரித்து, கம்பீரமாக நடப்பாரே. தியேட்டரே கை தட்டி ஆர்ப்பரித்த காட்சி இன்றுவரை எல்லோருக்கும் நினைவிருக்கும். இங்கே, ‘உங்களை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க சார்’ என்று சொன்னதும், ரஜினியும் அப்படித் துவண்டு, சுதாரிப்பார் என ஒரு காட்சி மட்டுமே உதாரணம். கதையை விடுவோம். ஆனால் காட்சிகள் ஒவ்வொன்றையும் ஃப்ரெஷ்ஷாகப் பிடிப்பதில் சூரர் முருகதாஸ்... இங்கே காணோம்.

எப்பேர்பட்ட படமாக இருந்தாலும் அதை தன் படமாக ஆக்கி, தன் பிராண்ட் ஸ்டிக்கர் ஒட்டிவிட முடியும் ரஜினியால்! அதனால்தான் ரஜினி, ‘பைரவி’, ‘பில்லா’ தொடங்கி இத்தனை வருடங்களாக சூப்பர் ஸ்டாராகவே இருந்து ஜொலிக்க முடிகிறது.

‘சிவாஜி’, ரஜினி ப்ளஸ் ஷங்கர் படமாக இருந்தது. ‘எந்திரன்’ மற்றும் ‘2.0’வும் அப்படித்தான். ‘காலா’வும் ‘கபாலி’யும் கூட ரஜினி படமாகவும் இருந்தது. ரஞ்சித் படமாகவும் அமைந்தது. பல ஆண்டுகளாகக் காத்திருந்த ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வந்த ‘தர்பார்’ முழுக்க முழுக்க, அக்மார்க் ரஜினி படம்.

இது ரஜினியின் ‘தர்பார்!’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x