Published : 08 Jan 2020 01:12 PM
Last Updated : 08 Jan 2020 01:12 PM

நாம் பயப்படவில்லை: ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவளித்த தீபிகா படுகோன் பேச்சு

உணர்வுகளை வெளிப்படுத்த நாம் பயப்படவில்லை என்பதைக் கண்டு பெருமை கொள்கிறேன் என்று ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவளித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு வந்த நபர்கள் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது.

இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை ஏபிவிபி மாணவர்கள் அமைப்புதான் நடத்தியுள்ளது என்று நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பாலிவுட் பிரபலங்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பங்கேற்றார்.

தாக்குதலுக்கு உள்ளான நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ் கோஷுக்கு ஆறுதல் கூறினார் தீபிகா.

மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “ உணர்வுகளை வெளிப்படுத்த நாம் பயப்படவில்லை என்பதைக் கண்டு பெருமை கொள்கிறேன். நாம் நமது நாட்டின் நலனையும் அதன் எதிர்காலத்தையும் சிந்திக்கிறோம். மக்கள் தங்கள் கருத்துகளைக் கூற விதிகளிலும், பிற இடங்களிலும் கூடுவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. சமூகத்திலும் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட விரும்புகிறோம்” என்றார்.

ஜேஎன்யுவில் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பங்கேற்ற தீபிகா படுகோன், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். மேலும் அவரது நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள 'சபாக்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனவும் பலரும் விமர்சித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x