Published : 28 Dec 2019 04:01 PM
Last Updated : 28 Dec 2019 04:01 PM

கெளதம் மேனனுக்குப் பதில் நட்டி

‘வால்டர்’ படத்தில் கெளதம் மேனன் நடிப்பதாகச் சொல்லப்பட்ட கதாபாத்திரத்தில் நட்டி நடித்துள்ளார்.

புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வால்டர்’. இதன் படப்பிடிப்பு, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை 11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தொடர்பாக சிங்காரவேலன் விடுத்த எச்சரிக்கையை, சமரசம் பேசி முடிவுக்குக் கொண்டு வந்து படப்பிடிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இதில், சிபிராஜ், சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முழுக்க காவல்துறை அதிகாரியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில், வில்லனாக இயக்குநர் கெளதம் மேனன் நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. அதற்கேற்ப, சிபிராஜ் உள்ளிட்ட படக் குழுவினருடன் கெளதம் மேனன் இருக்கும் புகைப்படமும் வெளியானது. ஆனால், கெளதம் மேனன் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கெளதம் மேனனுக்குப் பதில் அந்தக் கதாபாத்திரத்தில் நட்டி என்று அழைக்கப்படும் நட்ராஜ் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ், புதிய படத்தின் ஷூட்டிங் ஆகிய காரணங்களால் கெளதம் மேனனால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, எஸ்.ஜே.சூர்யா கடந்த 10-ம் தேதி வெளியிட்டார். ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x