Published : 23 Dec 2019 11:54 AM
Last Updated : 23 Dec 2019 11:54 AM

மாணவர்கள் போராட்டம் குறித்து சர்ச்சைக் கருத்து: ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்

மாணவர்கள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியது தொடர்பாக ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுக்க மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாகப் பலரையும் கைது செய்து வருகிறது காவல்துறை. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இந்தியத் திரையுலகில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்தவரும், நாடக நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன், சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

"விடுமுறை கிடைக்கும் என்பதாலேயே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், கலாட்டா பண்ணலாம் என்றும் நினைக்கிறார்கள். போராட்டத்தின் போது வேனில் ஏற்றிக் கொண்டு சென்றால், நாலு பெண்களைப் பார்த்து சைட் அடிக்கலாம். இவ்வளவு தான் விஷயம். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

யார் தப்பாக எடுத்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. படிக்கும்போது மாணவர்களுக்கு இந்த வேலை தேவையில்லை. படிப்புக்குப் பிறகு எதில் வேண்டுமானாலும் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்" என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார் ஒய்.ஜி.மகேந்திரன்.

இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஒய்.ஜி.மகேந்திரன். அப்போது அவருடைய சர்ச்சைப் பேச்சு தொடர்பாகக் கேள்விகளை எழுப்பினார்கள்.

அதற்கு ஒய்.ஜி.மகேந்திரன், "மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இங்கு போராடும் மாணவர்களுக்கு எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியுமா? 25% மாணவர்களுக்கு வேண்டுமானால் தெரியும். அனைத்தையும் அறிந்து போராடும் மாணவர்களைப் பாராட்டுகிறேன். அவர்கள் நியாயமான கேள்விகளை எழுப்பிப் போராடுவார்கள்.

உள்ளே புகுந்து கலாட்டா பண்ணுகிறவர்கள் நியாயமானவர்களா?. என்ன கேள்வியாக இருந்தாலும் கல் எறிவது, பஸ்ஸை எரிப்பதை ஆதரிக்கிறீர்களா? கூட்டம் கூடினால் அனைத்தும் தானாக வந்துவிடும். நியாயமான முறையில் கேட்க வேண்டிய இடத்தில் கேள்விகளைக் கேளுங்கள். போராடுவதற்கு முன்பு அதைப் பற்றித் தெரிந்துகொண்டு போராடுங்கள். நடிகர்கள் உட்பட அனைவருமே முழுமையாகத் தெரிந்துகொண்டு கருத்து சொல்வதைப் பாராட்டுகிறேன்" என்று பதிலளித்தார் ஒய்.ஜி.மகேந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x