Published : 18 Dec 2019 12:54 PM
Last Updated : 18 Dec 2019 12:54 PM

CIFF-ல் டிசம்பர் 19 அன்று என்ன படம் பார்க்கலாம்? - சல்மான் பரிந்துரைகள்

GUNDERMANN | GERMANY |2019 | தேவி, மாலை 7:00 மணி

குண்டர்மேன் திரைப்படம் கிழக்கு ஜெர்மன் பாடகரும் எழுத்தாளருமான ஹெகார்ட் குண்டர்மேனின் நிஜ வாழ்க்கைக் கதையையும், இசையுடனான அவரது போராட்டங்களையும், நிலக்கரி சுரங்கத் தொழிலாளராக இருந்த வாழ்க்கையையும், ஜி.டி.ஆரின் ரகசிய பொலிஸுடன் (ஸ்டாசி) அவர் நடத்திய நடவடிக்கைகளையும் பேசுகிறது.

BALANGIGA: HOWLING WILDERNESS | PHILIPPINES | 2018 | தேவிபாலா, காலை 10:45 மணி

1901-ம் ஆண்டு அமெரிக்காவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நடந்த போரில் பலாங்கிகா என்னும் இடம் கடும் பாதிப்புள்ளாக்குகிறது. அமெரிக்கப் படைகளிடமிருந்து ஓடும் குலாஸ் என்னும் சிறுவனும் அவனது தாத்தாவும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். பிணக்குவியல்களில் மத்தியில் ஒரு சிறுவனை கண்டெடுக்கிறான் குலாஸ். அவர்கள் அமெரிக்கப் படையினரிடமிருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் கதை.

PSYCHOBITCH | NORWAY | 2019 | அண்ணா, மதியம் 2:30 மணி

பள்ளியில் பயிலும் இரு மாணவர்களுக்கு இடையே நடக்கும் நட்பும், காதல் குறித்த கதை. நார்வே நாட்டில் ஜோவிக் என்ற சிறிய நகரில் கதை தொடங்குகிறது. 15 வயது மாணவி ஃபிரிடா தன்னை வகுப்பில் சிறந்த மாணவி, நன்றாகப் படிப்பவர் என்று எண்ணி வாழ்கிறார். வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஃபிரிடா திறமையைக் கண்டு வியக்கிறார்கள். அந்த வகுப்புக்கு மரியஸ் என்ற மாணவர் புதிதாக வருகிறார். மரியஸும், ஃபிரிடாவுக்கு இணையாக நன்றாக படிக்கிறார், புத்திசாலித்தனமாக நடக்கிறார். இதனால், தனக்கு போட்டியாக மரியஸ் வந்துவிட்டானோ என்று ஃபிரிடா நினைக்கிறார். ஆனால், ஃபிரிடாவை மரியஸுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவள் செய்யும் பல்வேறு தொந்தரவுகளையும், இடர்ளையும் தாங்கிக்கொள்கிறான். இருவரும் ஒன்றாக படிக்கத் தொடங்குகின்றனர். ஃபிரிடாவுடன் பழங்கும் காலத்தில் மரியஸுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கிறது. இருவரும் மனதளவில் ஒன்றிணைந்தார்களா, நட்பு தொடர்ந்ததா என்பதை வேடிக்கையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

THE UNKNOWN SAINT | FRANCE | 2019 | கேஸினோ, மதியம் 2:45 மணி

அமின் பணத்தை கொள்ளையடித்துவந்து, சிறிய குன்றின் மீது புதைத்து வைக்கிறார். அதன்பின் போலீஸார் அமினை கைதுசெய்து அழைத்துச் செல்கிறது. சில ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் மீண்டும் அந்த குன்றுக்கு வந்து தன்னுடைய பணத்தை எடுக்க அமின் வருகிறார். ஆனால், அந்த குன்றில் அமின் புதைத்து வைத்திருந்த பணப்பைக்கு மேலே சிறிய கோயிலை யாரோ கட்டிவிட்டார்கள். குன்றைச் சுற்றி சிறிய கிராமமே உருவாகிவிட்டது. அந்த கிராமத்தில் தங்கும் அமின் எவ்வாறு பணப்பையை எடுத்தார், எடுத்தாரா என்பது கதையில் காணலாம்.

STRAY | NEW ZEALAND | 2018 | ரஷிய கலாச்சார மையம், மாலை 3.00 மணி

பனிபடர்ந்த மலைப்பிரதேசத்தை கடக்கும் அந்நியர்களான ஒரு ஆணும், பெண்ணும் முதன்முதலாக சந்திக்க நேரிடுகிறது. இருவரும் தங்களின் கடந்த காலத்தை பற்றி பகிர்கிறார்கள். அந்த ஆண் தனது காதலியை கொலை செய்தவனை, கொலை செய்யும் முயற்சியில் தோல்வி அடைந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர். அந்த பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டு உளவியல் சிகிச்சை பெற்று திரும்பியவர். அந்த குளிர்ந்த மற்றும் தொலைதூர நிலப்பரப்பு, அறிமுகமில்லாத அந்த இரண்டுபேரின் வாழ்க்கையை மாற்ற என்ன செய்தது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x