Published : 08 Dec 2019 11:21 am

Updated : 08 Dec 2019 11:21 am

 

Published : 08 Dec 2019 11:21 AM
Last Updated : 08 Dec 2019 11:21 AM

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி அமைந்தது எப்படி? - ரகசியம் உடைத்த ரஜினி

how-darbar-team-formed-explains-rajini

ஏ.ஆர்.முருகதாஸ் உடனான கூட்டணி அமைந்தது எப்படி என்று 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 7) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் ஷங்கர், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:

சுபாஷ்கரனை இங்கு அனைவருக்கும் ஒரு தயாரிப்பாளராகத் தான் தெரியும். ஆனால் லண்டனில் அவர் மிகப்பெரிய தொழிலதிபர். நிறைய நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். அது தமிழர்களுக்கு எல்லாம் ஒரு பெரிய பெருமை. சில நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு அருகே ஒரு பார்க் உள்ளது. அதற்கு உங்கள் பெயர் வைக்கவுள்ளோம். நீங்கள் வந்து திறந்து வைக்க வேண்டும் என்றார். வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.

'2.0' படத்தின் போதே எங்கள் நிறுவனத்துக்கு இன்னொரு படம் பண்ணனும் எனக் கேட்டிருந்தார். சன் பிக்சர்ஸுக்கு ஒரு படம் பண்ணவுள்ளேன். அதை முடிச்சுட்டு பண்ணலாம் என்று கூறினேன். 'பேட்ட' முடித்தவுடன், யாருடன் படம் பண்ணலாம் என்றவுடன் ஏ.ஆர்.முருகதாஸ் சார் பெயர் தான் வந்தது.

அவரது 'ரமணா' படம் பார்த்தவுடனேயே, அதில் சொன்ன கருத்துகள், கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு 'கஜினி' படம் பார்த்தவுடன், இவரோடு படம் பண்ணனும் என்று அவரை மீட் பண்ணினேன். என்னுடைய ரசிகர்களுக்கு நீங்கள் என்னை எப்படிக் காட்டுகிறீர்கள் எனப் பார்க்க வேண்டும் எனக் கேட்டேன். அப்போதே இருவரும் படம் பண்ணத் தீர்மானித்தோம்.

'சிவாஜி' படம் முடித்தவுடன், பண்ணலாம் எனப் பேசினோம். அவர் இந்தி 'கஜினி' பண்ணிட்டு இருந்தார். "சார்.. இந்தப் படம் முடிய இன்னும் 4 மாதம் ஆகலாம். ஒரு லைன் சொல்றேன். உங்களுக்கு ஒ.கே என்றால் அதில் வொர்க் பண்றேன்" என்றார். நானும் காத்திருக்கிறேன் என்றேன். ஆனால், அந்தச் சமயத்தில் தான் ஷங்கர் சார் 'எந்திரன்' கதையோடு வந்தார். உடனே ஏ.ஆர்.முருகதாஸ் சார்கிட்ட கேட்டேன். கண்டிப்பாகப் பண்ணுங்கள் சார் என்றார்.

'எந்திரன்' படத்துக்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. பின்பு 'லிங்கா' பண்ணினேன். அந்தப் படத்துக்குப் பிறகு இளமையான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு பண்ணினேன். 'கபாலி', 'காலா' பன்ணினேன். அந்தச் சமயத்தில் தான் கார்த்திக் சுப்புராஜ் 'பேட்ட' கதையோடு வந்தார். அதில் நடிக்கத் தயங்கினேன். உடனே "சார்.. இது 90-களில் உள்ள இளமை தான்" என்று என்னை ஒப்புக் கொள்ள வைத்தார்.

அந்தப் படம் வெளியான 3-வது நாளில் ஏ.ஆர்.முருகதாஸ் சார் போன் பண்ணினார். "சார்.. நீங்க இளமையோடு பண்ணுவீர்கள் என்றால் நான் ஒரே நாளில் கதை சொல்லியிருப்பேனே. இன்னும் ஒரு வாரத்தில் கதையை முடிச்சுட்டு வர்றேன்" என்று சொன்னார். 'தர்பார்' கதை சொன்னார். ஜனரஞ்சகமான கதையாக இருந்தது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். எப்படியென்றால், இதுவரை 160 படங்களுக்கு மேல் பண்ணியிருக்கேன். இதுவரை இப்படியொரு த்ரில்லர் படத்தை ஜனரஞ்சகமான முறையில் நான் பண்ணவில்லை.

'தர்பார்' படப்பிடிப்பில் அவரைப் பார்த்தால் குள்ளமாக இருப்பார். இயக்குநர் மாதிரியே தெரியாது. ஒவ்வொரு ஷாட்டையும் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார். அதே வேளையில் கோபம் வந்தால் அந்தளவுக்குச் சத்தமாகக் கத்துவார். மக்கள் மீது அவ்வளவு அக்கறை வைத்துள்ளார். ஷங்கர் சார் மாதிரியே ஜனரஞ்சகமான கதையில் ஒரு நல்ல மெசேஜ் சொல்லியிருக்கார். நன்றி ஏ.ஆர்.முருகதாஸ் சார்.

இந்தப் படத்தில் 29 ஆண்டுகளுக்குப் பின் சந்தோஷ் சிவன் சார் எனக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ஒவ்வொரு படத்திலுமே சந்தோஷ் சிவன் இருக்கிறாரா என்று கேட்பேன். அவர் அந்தளவுக்குப் பிஸி. அவருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. 'சந்திரமுகி' படத்துக்குப் பிறகு இதில் நயன்தாராவுடன் நடித்துள்ளேன். அந்தப் படத்தை விட அழகாக, கிளாமராக இருக்கிறார். சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட அனைவருமே பிரமாதமாக நடித்துள்ளார்கள். ராம் - லட்சுமண் சண்டை இயக்குநர்கள் ரொம்ப அருமையாக சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் எங்கள் வீட்டுக் குழந்தை. கதையை முழுமையாக புரிந்து, காட்சிகள் எல்லாம் சொல்வார் இளையராஜா சார். அந்த மாதிரியான விஷயம் அனிருத்திடமும் இந்த வயதிலேயே இருக்கிறது. படம் பார்க்கும் போதே எங்கு எப்படியிருக்கிறது என்பதை ரொம்பத் துல்லியாகச் சொல்கிறார். அற்புதம்.

மும்பையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியவுடன், பயங்கரமான மழை. வேறொரு இயக்குநராக இருந்தால் கண்டிப்பாக 130 நாட்கள் வரை ஆகியிருக்கும். ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் சார் 90 நாட்களில் பக்காவாக ப்ளான் பண்ணி முடித்துவிட்டார்.

இவ்வாறு ரஜினி பேசினார்.


தர்பார்தர்பார் இசை வெளியீட்டு விழாரஜினிஏ.ஆர்.முருகதாஸ்ரஜினி பேச்சுலைகா நிறுவனம்அனிருத்இயக்குநர் ஷங்கர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author