Published : 28 Nov 2019 10:43 AM
Last Updated : 28 Nov 2019 10:43 AM

சினிமா அறிவுரை யாரிடம் பெற விருப்பம்? - விஜய் சேதுபதி பதில்

சினிமா தொடர்பாக இந்தியத் திரையுலகில் யாரிடமிருந்து அறிவுரை பெற விருப்பம் என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி சினிமா இணையதளம் 'கடந்த 10 ஆண்டுகளில் 100 சிறந்த நடிகர்கள்' என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தனுஷ், மிஷ்கின், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், அஸ்வந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல தமிழ்த் திரையுலகப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றன.

இதில் இடம் பெற்ற முக்கியமான நடிகர்களை ஒன்றிணைத்து வீடியோ பேட்டியும் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதில் அயுஷ்மான் குரானா, பார்வதி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அலியா பட், மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இடம்பெற்றனர்.

இதில் விஜய் சேதுபதியிடம் "சினிமா பற்றி யாரிடமாவது பேசி அறிவுரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், அது இந்திய சினிமாவில் யாராக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி ”சிவாஜி கணேசன். இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். அவரால் எந்தக் கதாபாத்திரமும் நடிக்க முடியும்.

அடுத்து கமல்ஹாசன். பயங்கர புத்திசாலி அவர். நடிகரையும் தாண்டி பயங்கர அறிவாளி. அடுத்து மோகன்லால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் எப்படி நடிக்கிறார் என்றே எனக்குத் தெரியவில்லை. மிக மிக எளிமையாக நடித்துவிடுகிறார்” என்று பேசிக் கொண்டிருந்தார். அவரை இடைமறித்த மனோஜ் பாஜ்பாய் "நான் விஜய் சேதுபதியிடமும் கொஞ்சம் நேரம் பேச விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். உடனே விஜய் சேதுபதி "ரெம்ப நன்றி சார். எனக்கு இப்போது வெட்கமாக இருக்கிறது” என்று கூறிவிட்டு தன் பதிலைத் தொடர்ந்தார்.

"உங்களுக்கு எம்ஜிஆர் தெரியும் என்று நினைக்கிறேன். மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். அதே நேரம் அவரது கதைத் தேர்வு என்பது மிகச்சிறப்பாக இருக்கும். அவரது படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாகும். அவர் ஒரு குறிப்பிட்ட அளவுகோலில் படங்கள் செய்துள்ளார். எனவே அவரின் அறிவுரையும் எனக்கு அவசியம்" என்று பதிலளித்துள்ளார் விஜய் சேதுபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x