Published : 18 Nov 2019 11:40 AM
Last Updated : 18 Nov 2019 11:40 AM

’’நேத்து நைட்டே விடிஞ்சிருச்சு கமல் சார்’’ - கமல் 60 விழாவில் வடிவேலு கலகல பேச்சு

‘’நேற்று இரவே விடிந்துவிட்டது கமல் சார்’’ என்று கமல் 60 ‘உங்கள் நான்’ விழாவில் நடிகர் வடிவேலு பேசினார்.

கமல் திரைக்கு வந்து 60-ம் ஆண்டை முன்னிட்டு, ‘உங்கள் நான்’ எனும் விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷங்கர், மணிரத்னம், கார்த்தி, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு நடிகர் வடிவேலு பேசியதாவது:

பரமக்குடி தந்த பத்தரைமாற்றுத் தங்கம் கமல். நான் தரையில் உட்கார்ந்து திரையில் கமலைப் பார்த்து ரசித்தவன். பிறகு, அவரை நேரில் சந்திக்கவும் அவருடன் படத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. அவருடன் இணைந்து நடித்த முதல் படம் ‘சிங்கார வேலன்’. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமாருக்கு நன்றி.

அஞ்சு வயதில் திரைத்துறைக்கு வந்தார். அது பிஞ்சு வயசு. எதுவுமே தெரியாமல் திரைத்துறைக்கு வந்தார். அம்மா அப்பாவை எப்படி அழைக்கவேண்டும், வணங்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். இவ்வளவு நீண்ட பயணங்களை மேற்கொண்டு சாதனை புரிந்திருக்கிறார்.

கால் வைக்கிற இடத்திலெல்லாம் கண்ணிவெடி வைக்கிற இந்தத் திரையுலகத்தில், எப்படி இத்தனை ஆண்டுகாலம் கடந்து வந்திருக்கிறார் என்றே தெரியவில்லை. இவருக்கு எத்தனை ஏவுகணை வைத்திருப்பார்கள், ‘பாம்’ வைத்திருப்பார்கள். இவற்றையெல்லாம் கடந்து ஜெயித்திருக்கிறார் கமல் சார். உதாரணத்திற்கு வேறு யாரையுமே சொல்லமுடியாது.

நான் ராஜ்கிரண் மூலமாக திரையுலகுக்கு வந்தேன். அடுத்ததாக ஆர்.வி. உதயகுமார், ‘சிங்காரவேலன்’ படத்தில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்போது கமல் அவர்கள் என் தோளில் கைபோட்டுக்கொண்டு, ‘வடிவேலு, உனக்கு என்னப்பா தெரியும். எந்த ஊரு நீ?’ என்றெல்லாம் கேட்டார். ‘நான் ஓரளவு பாடுவேன், நடிப்பேன்’ என்று சொன்னேன். உடனே அவர், ‘நாளைக்கி காலைல என்னோட ராஜ்கமல் பிலிம்ஸ் ஆபீசுக்குப் போ. அங்கே டி.என்.எஸ்.னு இருப்பாரு. அவர் அட்வான்ஸ் தருவாரு. வாங்கிக்கோ. என் சொந்தப்படத்துல, ‘தேவர்மகன்’ங்கற படத்துல நீ நடிக்கிறே’ என்று சொன்னார். ரொம்ப நன்றி சார் என்று சொன்னேன்.

என்னை மறுநாள்தான் போகச் சொன்னார். ஆனால் அந்த ‘கேப்’ல வேற எவனாவது புகுந்துட்டானான்னா என்ன பண்றது? அதனால ஷூட்டிங் முடிஞ்ச கையோட, மாலை ஆறு மணிக்கெல்லாம் நேராக ராஜ்கமல் அலுவலகம் போய்விட்டேன். அங்கே டி.என்.எஸ். அவர்களைச் சந்தித்து விவரம்சொன்னேன். ‘உங்களை நாளைக்குத்தானே வரச்சொல்லிருந்தாரு’ என்றார் அவர். உடனே கமலுக்கு போன் செய்து கேட்டுவிட்டு, எனக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்தார்.

மறுநாள் கமலுடன் ‘சிங்கார வேலன்’ ஷூட்டிங். ‘என்ன வடிவேலு, விடிஞ்சதும் போங்கன்னுதானே சொன்னேன். நேத்து நைட்டே போயிட்டீங்க போல இருக்கு’ என்றார் கமல். ‘எனக்கு நேத்து நைட்டே விடிஞ்சிருச்சு சார்’ என்றேன். அதேபோல், இப்போது இந்த மேடையில் ஏறியிருக்கிறேன். இனி எனக்கு விடிவுகாலம்தான். விடிந்துவிட்டது.

சரி... கமலுடன் ‘சிங்காரவேலன்’ நடித்துவிட்டேன். அடுத்து ‘தேவர்மகன்’. நேஷனல் பர்மிட் என்று லாரி ஓடும். பார்த்திருப்பீர்கள். அந்த வண்டியில், இருபது இருபத்தி இரண்டு டயர்சக்கரம் இருக்கும். கமல் அவர்களே அப்படியான வண்டி. அதைவிட டபுள் மடங்கு வண்டி... செவாலியே சிவாஜிகணேசன் ஐயா. ஏற்கெனவே கமலைப் பார்த்து வெடவெடன்னு ஆடிப் போச்சு உடம்பு. சிவாஜி ஐயாவைப் பாத்ததும் திரும்பவும் ஆடுது. இங்கே ஒரு டேங்கர் லாரி. இந்தப்பக்கம் ஒரு டேங்கர் லாரி. நடுவுல டூவீலர்ல நான்.

‘தேவர்மகன்’ படத்தில் ஒரு சம்பவம் நடந்தது. படத்தில் சிவாஜி ஐயா இறந்து போகும் காட்சி. கமல் அழைத்தார். காட்சிகளை விளக்கினார். ‘நல்லா அழுதுருங்க’ என்றார். சிவாஜி இறந்துவிட்டார். அவரின் கால்மாட்டில் நானும் சங்கிலிமுருகனும் உட்கார்ந்துகொண்டு கதறி அழுகிறோம். எனக்கும் சங்கிலிமுருகனுக்கும் நடிப்பதில் போட்டி. அடுத்து கமல் வருவார். அவரின் நடிப்புதான் நமக்குத் தெரியுமே. அதற்கு முன்பு எங்களுடைய கதறலைக் கேட்டு சிவாஜி ஐயா எழுந்துவிட்டார். ‘ச்சீ என்னடா இது. கமலஹாசன் தானேடா எனக்கு மகன். நீங்க என்னவோ ரெட்டைப் புள்ளைங்க கணக்கா இப்படி அழுதுட்டிருக்கீங்க.கொஞ்சம் அடக்கிவாசிங்கடா. டேய் கமலா (கமலை சிவாஜி ஐயா அப்படித்தான் அழைப்பார்) என்னடா இவனுங்க’ என்றார் சிவாஜி ஐயா.

அப்புறம் ‘டேய். துண்டை எடுத்து வாயில திணிச்சுக்கோ’ என்றார் சிவாஜி ஐயா. எனக்காவது துண்டு. சங்கிலிமுருகனுக்கு வேட்டி. ‘சத்தம் வரப்படாது’ என்றார். ‘அடடா... நடிக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுச்சு. இப்படி ஆகிப்போச்சே’ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தேவையில்லாமல் அந்த இடத்தில் நடித்து, அந்தக் காட்சியைக் கெடுக்க இருந்தோம் நானும் சங்கிலிமுருகனும்.

பிறகு ஒருநாள் கமலை அழைத்த சிவாஜி ஐயா, ‘டேய் கமலா. இந்தப் பய வடிவேலு மதுரை பாஷையை நல்லாப் பேசுறாண்டா. நான் கூட அந்த அளவுக்குப் பேசலடா’ என்றார். பிறகு என்னை அழைத்து முத்தமிட்டார் சிவாஜி ஐயா. ஒரு காட்சியில், சிவாஜி ஐயாவையும் கமலையும் வைத்துக்கொண்டு, நடுவில் இருந்தபடி நான் பேசிய வசனமும் காட்சியும் இன்று வரை நிற்கிறது.

கமல் அரசியலுக்கு வந்திருப்பது காலத்தின் கட்டாயம். அதை ஒன்றும் செய்யமுடியாது. கமல் நீண்டகாலம் வாழவேண்டும். பரமக்குடிதான் எனக்கும் சொந்த ஊர். அங்கே இருக்கும் அய்யனாரை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இவ்வாறு வடிவேலு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x