Published : 01 Nov 2019 06:10 PM
Last Updated : 01 Nov 2019 06:10 PM

ஒரு தீபாவளிக்கு ரெண்டு சிவாஜி படம்... ரெண்டுமே சூப்பர்டூப்பர் ஹிட்டு! 

வி.ராம்ஜி


தீபாவளியன்று சிவாஜியின் இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தன.
1967ம் ஆண்டு, தமிழ்த் திரையுலகிலும் தமிழகத்திலும் மறக்கமுடியாத ஆண்டு. எம்ஜிஆர் சுடப்பட்ட பிறகு வந்த முதல் படமான ‘காவல்காரன்’ இந்த வருடம்தான் வெளியானது எனும் தகவலுடன் 67ம் ஆண்டைத் திரும்பிப் பார்ப்போம்.
67ம் ஆண்டில், எம்ஜிஆருக்கு ‘அரசகட்டளை’, ‘காவல்காரன்’, ‘தாய்க்கு தலைமகன்’, ‘விவசாயி’ என நான்கு படங்கள் வெளியாகின. இதில், ‘அரசகட்டளை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தேவர் பிலிம்ஸின் ‘தாய்க்கு தலைமகன்’ எல்லா ஏரியாக்களிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது.
சத்யா மூவீஸின் ‘காவல்காரன்’தான் இதில் அதிரிபுதிரி ஹிட். எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி என்பது ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, ‘எம்ஜிஆர் குரல்’. இதுதான் அப்போதைய டாபிக். ஆகவே இந்தப் படம் பலத்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ரிலீஸானதும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.
இதே வருடத்தில், மீண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த ‘விவசாயி’ திரைப்படம் வெளியானது. தேவர் பிலிம்ஸ் - எம்ஜிஆர் கூட்டணி எப்போதும் சந்திக்கிற வெற்றியை இந்தப் படம் சந்திக்கவில்லை என்றாலும் கலெக்‌ஷனில் குறைவைக்கவில்லை.
எம்ஜிஆரின் ‘விவசாயி’ தீபாவளியன்று ரிலீசானது. 1967ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி தீபாவளி நாளில் வெளியானது.
மக்கள்திலகத்தின் பட்டியலைப் பார்த்தாகிவிட்டது. இப்போது நடிகர்திலகத்தின் பட்டியல்.
67ம் ஆண்டு, சிவாஜிக்கான ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும். ‘கந்தன் கருணை’, ‘தங்கை’, ‘திருவருட்செல்வர்’ , ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘பாலாடை’, ‘இருமலர்கள்’, ‘ஊட்டி வரை உறவு’ என 7 படங்கள் வெளியாகின. இந்த ஏழில் ‘பாலாடை’ தவிர எல்லாப் படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன.
ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ‘கந்தன் கருணை’யும் ‘திருவருட்செல்வர்’ திரைப்படமும் ஒரே ஆண்டில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தன. இரண்டுமே மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட கலர் படம். இதில் ‘கந்தன் கருணை’யில் கே.ஆர்.விஜயாவும் நடித்தார். ’திருவருட்செல்வர்’ படத்தில் பத்மினி நடித்திருந்தார். இரண்டிலுமே சிவாஜி, தன் நடிப்பால் பட்டையைக் கிளப்பினார்.
கே.பாலாஜியின் தயாரிப்பு நிறுவனமான சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து ‘தங்கை’ படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். இதில் சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் நடித்திருந்தனர். கதையும் வலுவாக இருந்தது. சிவாஜியும் அசத்தியிருந்தார். பாடல்களும் அமர்க்களம்.
67ம் வருடத்தில் இன்னொரு சுவாரஸ்யம்... ஸ்ரீதரின் இயக்கத்தில், ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்திலும் ‘ஊட்டி வரை உறவு’ படத்திலும் நடித்திருந்தார் சிவாஜி. இரண்டு படங்களிலும் கே.ஆர்.விஜயாதான் நாயகி.
அதேபோல், ‘தங்கை’ படத்தை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர், சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா நடித்த ‘இருமலர்கள்’ படத்தையும் இயக்கினார்.
ஆக, ஏ.பி.நாகராஜனுக்கு இரண்டு. ‘கந்தன் கருணை’, ‘திருவருட்செல்வர்’. இந்த இரண்டுமே கலர் படம்.
ஏ.சி.திருலோகசந்தருக்கு இரண்டு. ‘தங்கை’, ‘இருமலர்கள்’. இந்த இரண்டுமே கருப்பு வெள்ளைப் படம்.
ஸ்ரீதருக்கு இரண்டு. ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘ஊட்டி வரை உறவு’. இதில் கருப்பு வெள்ளை ஒன்று. கலர் படம் ஒன்று.
சிவாஜி நடித்த ‘பாலாடை’ படத்தின் இயக்குநர் யாரென்று சொல்லத்தேவையே இல்லை. ‘பா’ வரிசை... வேறு யார்... இயக்குநர் ஏ.பீம்சிங் தான்! இந்தப் படம் கருப்பு வெள்ளை.
இனிமேல்தான் ஹைலைட்... 1967ம் ஆண்டு, சிவாஜி நடித்த ‘இருமலர்கள்’ திரைப்படமும் ‘ஊட்டி வரை உறவு’ திரைப்படமும் நவம்பர் 1ம் தேதி தீபாவளியன்று ரிலீசானது. இந்த இரண்டு படங்களுமே நூறு நாட்களைக் கடந்து, தொடர் ஹவுஸ்புல்லாக ஓடியது.
‘இருமலர்கள்’ படத்தில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்’, ‘மகராஜா ஒரு மகராணி...’ என்பது உள்ளிட்ட பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். அதேபோல், ‘தேடினேன் வந்தது’, ‘பூமாலையில் ஓர் மல்லிகை’, ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’, ‘ராஜராஜஸ்ரீ வந்தாள்... ராஜயோகம் தரவந்தாள்’, புது நாடகத்தில் ஒரு நாயகி’... என எல்லாப் பாடல்களுமே தேன்!
67ம் ஆண்டு, சிவாஜி வருடம். அந்த வருட தீபாவளியும் சிவாஜிக்கான, சிவாஜி ரசிகர்களுக்கான தீபாவளியாயிற்று!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x