Published : 25 Oct 2019 10:00 AM
Last Updated : 25 Oct 2019 10:00 AM

சர்ச்சைகளைக் கடந்து வெளியானது 'பிகில்': விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

வாழை தோரணங்களுடன் கோவையில் அலங்கரிக்கப்பட்டுள்ள திரையரங்கம் | படம்: மனோகரன்

பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படம் வெளியானது. விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (அக்டோபர் 25) வெளியாகியுள்ளது. நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஜி.கே விஷ்ணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தொடக்கப்பட்டதிலிருந்தே கதை தொடர்பான சர்ச்சை நிலவி வந்தது. இது தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதனால் திட்டமிடப்பட்ட படம் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், படத்துக்குத் தடை எதுவும் நீதிமன்றம் விதிக்கவில்லை.

மேலும், தமிழக அரசோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியளிக்கவில்லை. இதனால் அதிகாலை காட்சிகள் இருக்குமா, இருக்காதா என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது. இறுதியில், நேற்றிரவு (அக்டோபர் 24) ஒரு நாளுக்கு மட்டும் அனுமதி வழங்கியது தமிழக அரசு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ இருவரும் சந்தித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி என்று தமிழகம் முழுக்க திட்டமிட்டது. காலையிலேயே ரசிகர்கள் குவியத் தொடங்கினார். ஆனால், படத்தின் KDM எனப்படும் பாஸ்வோர்டு வரத் தாமதமானது. இதனால், படம் வெளியீட்டுத் தாமதமாகும் எனச் செய்தி பரவியதால் மீண்டும் பரபரப்பு உண்டானது. இறுதியில் 4:45 மணியளவில் அனைத்து திரையரங்குகளுக்கு KDM அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, 5 மணியளவில் காட்சிகள் தொடங்கப்பட்டன.

இந்தப் படத்தைப் பேனர்கள் எதுவும் இல்லாமல், வெடிகள் வெடித்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x