Published : 24 Oct 2019 11:11 AM
Last Updated : 24 Oct 2019 11:11 AM

எம்.ஜி.ஆரைப் போன்ற ஒரு யதார்த்தவாதி விஜய் சேதுபதி: மயில்சாமி புகழாரம்

எம்.ஜி.ஆரைப் போன்று ஒரு யதார்த்தவாதி விஜய் சேதுபதி என்று 'அல்டி' இசை வெளியீட்டு விழாவில் மயில்சாமி புகழாரம் சூட்டினார்.

எம்.ஜே. ஹுசைன் இயக்கத்தில் அன்பு மயில்சாமி, மனிஷா, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அல்டி'. ஷேக் முகமது தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாக்யராஜ், விஜய் சேதுபதி, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் மயில்சாமி பேசியதாவது:

“என் மகன் கேட்டுக் கொண்டதற்காக இங்கு வந்து வாழ்த்திவிட்டுச் சென்ற விஜய் சேதுபதிக்கு நன்றி. திருவண்ணாமலை கோயிலில் வேண்டிக்கொள்ளும்போது, மழை பெய்யணும்.. மண்ணு செழிப்பா இருக்கணும், மக்கள் சந்தோஷமாக இருக்கணும் என்று வேண்டிக் கொள்வேன். ஏனென்றால் அந்த மக்களில் நானும் ஒருவன்.

திருவண்ணாமலை ஆண்டவர் மற்றும் எம்ஜிஆர் இருவரையும் ரொம்பவே வேண்டிக்குவேன். ஏனென்றால் எனக்கு திருட்டுப் புத்தி கொடுக்கவில்லை. பெரிதாகப் பணமும் சேர்த்து வைக்கவில்லை. என் பையனின் பொறுமைக்கு ரொம்பவே சந்தோஷப்படுகிறேன். அவன் நடிக்கும் 10-வது படம் இது. ஆனால், இது தான் அவனது முதல் இசை வெளியீட்டு விழா. பொறுமையிருந்தால் போதும் என்பது உதாரணம் அது. என்ன அப்பா ஒன்றுமே பண்ணவில்லை என்று என்னிடம் அவன் கேட்டதே இல்லை. நான் எதிலுமே தலையிட்டதில்லை.

நான் பிறந்ததிலிருந்து எம்.ஜி.ஆரை மனதில் வைத்தே வாழ்ந்து கொண்டிருப்பவன். இப்பவும் அவர் உயிரோடுதான் இருக்கிறார். யாரெல்லாம் தர்மம் செய்கிறார்களோ, அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆரைப் பார்க்க யார் சென்றாலும் சரி, முதலில் சாப்பிடச் சொல்வார். பின்பு தான் சந்திப்பார்.

நடிகர் குள்ளமணி சிவாஜிக்கு ரொம்ப நெருங்கிய நண்பர். அவர் இயக்குநர் பி.வாசுவின் அப்பா பீதாம்பரம் வழியாக எம்.ஜி.ஆரைச் சந்திக்க விரும்பினார். ஒரு நாள் குள்ளமணியைச் சந்திக்கும்போது எம்.ஜி.ஆர் சிரித்துவிட்டார். இந்தமாதிரியான கதாபாத்திரத்தை நான் சினிமாவில்தான் பார்த்துள்ளேன். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன் என உள்ளே சென்றுவிட்டார். சில மணித்துளிகளில் வெளியே வருவதற்குள், எம்.ஜி.ஆரைப் பார்த்த சந்தோஷத்தில் குள்ளமணி கிளம்பிவிட்டார்.

எம்.ஜி.ஆரோ அவரைத் தேடி அழைத்து வரச் சொன்னார். ''சொந்தமாக வீடு இருக்கா உனக்கு?'' என்று எம்.ஜி.ஆர் கேட்க, அவரோ ''இல்ல ஐயா'' என்று சொல்லியிருக்கார். ''உனக்கு நான் வீடு தர்றேன்'' என்று உடனடியாக 2 சாவிகளைக் கொடுத்தார். ''என்ன ஐயா 2 சாவி'' என்று குள்ளமணி கேட்க, ''உனக்கு 2 வீடுய்யா'' என்று சொல்லியிருக்கார். அந்த அளவுக்கு யதார்த்தவாதி எம்.ஜி.ஆர். அதேபோன்ற யதார்த்தவாதி விஜய் சேதுபதி.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு அல்ல, கொண்டாடுவதற்கு. தினம் தினம் கொண்டாடிக்கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் இருக்கும் நானே, சில நடிகர்களைப் பார்க்க முடியவில்லை. சில நடிகர்கள் வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று சொல்கிறார்கள். வீட்டில் இருக்கிறேன். ஆனால் பார்க்க முடியாது எனத் தைரியமாகச் சொல்லலாமே” என்று பேசினார் மயில்சாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x