Published : 21 Oct 2019 11:40 AM
Last Updated : 21 Oct 2019 11:40 AM

தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள்: தமிழ்க் கவிதைக்குக் கிடைத்த வாழ்த்துக்குப் பிரதமர் மோடி பதில்

தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள் என்று தனது தமிழ்க் கவிதைக்குக் கிடைத்த வாழ்த்துக்குப் பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

கடந்த 11, 12-ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் இந்திய, சீன உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது கடந்த 12-ம் தேதி அதிகாலை கோவளம் கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது கடலின் அழகில் மயங்கிய அவர் இந்தியில் கவிதை எழுதினார். அந்தக் கவிதையின் தமிழாக்கத்தை அவர் நேற்று (அக்டோபர் 20) ட்விட்டரில் வெளியிட்டார். (அந்தக் கவிதையை வாசிக்க...)

இந்தக் கவிதைக்கு தமிழ் இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த தமிழ்க் கவிதைக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடியின் தமிழ்க் கவிதை வெளியிட்ட ட்வீட்டை மேற்கொளிட்டு நடிகர் விவேக், "இயற்கையை வணங்குவது கடவுளை வணங்குவதற்குச் சமம். ஏனென்றால் இயற்கைதான் சர்வ வல்லமை கொண்டது. நரேந்திர மோடி அவர்களே, மாமல்லபுரம் கடல் பற்றிய உங்கள் அருமையான கவிதைக்கு நம் தேசம் சார்பாக நன்றி" என்று தெரிவித்தார்.

விவேக்கிற்கு நன்றி கூறும் விதமாகப் பிரதமர் மோடி "நன்றி விவேக். இயற்கையை மதிப்பது நமது பண்பாட்டில் முக்கியமான அம்சம். தெய்வீகத்தன்மையையும், மகத்துவத்தையும் இயற்கை வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் கண்ணுக்கு இனிமையான கடற்கரையும், காலை வேளையின் அமைதியும், எனது சிந்தனைகளை வெளிப்படுத்த சரியான தருணங்களைக் கொடுத்தன" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடியின் தமிழ்க் கவிதை வெளியிட்ட ட்வீட்டை மேற்கோளிட்டு தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் “நமது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழின் மீது இருக்கும் அற்புதமான அன்பு. நம் மொழிக்கு அவரது ஆதரவையும், அன்பையும் நாம் கொண்டாட வேண்டும். நன்றி சார்” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

தனஞ்ஜெயனுக்கு நன்றி கூறும் விதமாகப் பிரதமர் மோடி, "துடிப்பான கலாச்சாரத்தை வளர்த்துள்ள உலகின் மிகப் பழமையான மொழியில் என் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி. தமிழ் மொழி அழகானது. தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள்" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x