Published : 19 Oct 2019 02:07 PM
Last Updated : 19 Oct 2019 02:07 PM

கவின் - லாஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது; என் பிரச்சினைக்கு வரவேண்டாம்: சேரன் காட்டம்

கவின் - லாஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது என்றும் என் பிரச்சினைக்கு வரவேண்டாம் என்றும் சேரன் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பிக் பாஸ் சீசன் 3' வெற்றியாளராக முகின் ராவ் அறிவிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்புதான் 'பிக் பாஸ் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சிக்கும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் கவின் - லாஸ்லியா இருவருக்கும் ஏற்பட்ட காதல் பெருமளவில் விவாதமாக மாறியது. சமூக வலைதளத்தில் பலரும் இது தொடர்பாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது, கவின் - லாஸ்லியா காதலுக்கு அறிவுரை கூறினார் சேரன். அந்தச் சமயத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் அப்பாவும், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டாலும் கவின் - லாஸ்லியா காதல் விவகாரம் இன்னும் முடிவு பெறவில்லை. இருவருமே எங்கும் சந்தித்துக் கொள்வதில்லை எனத் தெரிகிறது. இதற்குக் காரணம் சேரன்தான் எனப் பலரும் அவரைத் திட்டி வந்தார்கள். இதனால் சர்ச்சை உண்டானது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் கொந்தளித்துள்ளார் சேரன். இது தொடர்பாக, ''கவின்- லாஸ்லியா ரசிகப் பெருமக்களுக்கு, உங்களுக்குப் பிடித்தவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரி, வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் எனக் கூறினேன். அது உங்களுக்குத் தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.

தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சினை தீராது. இதை வளர்த்து நான் பெரிய ஆளாக விரும்பவில்லை. நான் எவ்வளவோ பேசிப் பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை. அவர் புறக்கணித்தார் என்பதே உண்மை. நீங்களும் பார்த்திருப்பீர்கள். இருந்தும் பிரச்சினை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன். கவின் - லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ, வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது.

இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரிகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சினைக்கு வரவேண்டாம். நான் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துகள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன். இதற்கு மேலும் என்னைப் பிடிக்காதவர்கள் என்னைப் பின்தொடர (follow) வேண்டாம்.. மிக்க நன்றி'' என்று தெரிவித்துள்ளார் சேரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x