Published : 19 Oct 2019 07:29 AM
Last Updated : 19 Oct 2019 07:29 AM

இமயமலைப் பயணத்தின் நிறைவாக பாபாஜி குகையில் தவம்; கட்சி தொடங்க ரஜினி பிரார்த்தனை: விரைவில் அறிவிப்பு இருக்கும் என நண்பர்கள் தகவல்

மகராசன் மோகன்

சென்னை

இமயமலைப் பயணத்தில் மஹா அவதார் பாபாஜியின் குகைக்கு சென்று தவம் செய்த ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கும் பணிகள் நல்லபடியாக முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்

மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்காக லண்டன் செல்ல திட்டமிட்டார். விமான டிக்கெட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில், திடீரென லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ஆன்மிகப் பயணமாக இமயமலை செல்ல முடிவு செய்தார்.

பயண ஏற்பாடுகளை அவரது நீண்டகால நண்பர் ஹரி செய்ய, மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி கடந்த 13-ம் தேதி சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் சென்றார்.

அங்கு ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை, துவாராஹாட்டில் ரஜினி கட்டியுள்ள ‘குருசரண்’ ஆசிரமம் ஆகிய இடங்களுக்கு சென்ற ரஜினி 6 நாள் இமயமலைப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.

பயணம் முழு திருப்தி

சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு ஆசிரம நிர்வாகிகள், மடாதிபதிகள், ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தமுறை மலைப் பயணம், சுவாமி தரிசனம், தியானம் ஆகியவை மிகவும் திருப்தியாக இருந்ததாக ரஜினி தெரிவித்துள்ளார்.
பயணத்தை நிறைவு செய்யும் முன்பாக மஹா அவதார் பாபாஜி குகைக்கு சென்ற ரஜினி அங்கு நீண்ட நேரம் தியானம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் கூறியதாவது:

தனது மானசீக குருவான மஹா அவதார் பாபாஜியை வணங்கி அருள் பெற்ற பிறகே, எந்த ஒரு முக்கிய செயலையும் தொடங்குவது ரஜினியின் வழக்கம். அதேபோல, ‘இன்ன இடத்துக்கு போக வேண்டும்’ என்று கூறுவாரே தவிர, எதற்காக என்று சொல்ல மாட்டார். இந்த முறை கேதார்நாத், பத்ரிநாத் தரிசனம் முடிந்த பிறகு, நிறைவாக பாபாஜி குகைக்கு வந்தவர் அங்கு நீண்ட நேரம் தவம் செய்தார். அரசியல் கட்சி தொடங்கும் பணிகள் நல்லபடியாக முடிய வேண்டும் என்று பாபாஜியிடம் பிரார்த்தனையும் செய்தார்.

அவர் தற்போது மிகவும் உற்சாகத்துடன் காணப்படுகிறார். ரஜினி கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

‘சித்த புருஷனின் ஆட்சி’.. சித்தர்கள் அருள்வாக்கு

பாபாஜி குகையில் பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டபோது, 2 சித்தர்கள் ரஜினியை தங்கள் அருகே அழைத்து, ‘‘உனக்கு ஆயுள் 95 வயது வரை உண்டு. ஆன்மிக அருள் பெற்ற ஒரு சித்த புருஷனின் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கப் போகிறது. எப்போதும் உனக்கு நல்லதே நடக்கும்’’ என்று ஆசி வழங்கினர். சித்தர்களின் ரூபத்தில் மஹா அவதார் பாபாஜியே நேரில் வந்து தன்னை ஆசிர்வதித்ததாக ரஜினி கருதுகிறார் என்று அவரது நண்பர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x