Published : 18 Oct 2019 05:46 PM
Last Updated : 18 Oct 2019 05:46 PM

'ஹீரோ' தலைப்பில் உறுதி: சிவகார்த்திகேயனின் 2-வது லுக் வெளியீடு - தொடர்கிறது சர்ச்சை

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'ஹீரோ' படத்தின் தலைப்பில் உறுதியாக இருப்பது தெளிவாகியுள்ளது. அந்தப் படத்தின் 2-வது லுக்கையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. அதில் சிவகார்த்திகேயன் கையில் ஒரு மாஸ்க் வைத்திருப்பதைப் போல வடிவமைத்திருந்தனர். இந்நிலையில், படத்தின் 2-வது லுக்கை இன்று (அக்டோபர் 18) வெளியிட்டுள்ளனர். அதில் மாஸ்க்கை சிவகார்த்திகேயன் அணிந்திருப்பது போல வெளியிட்டுள்ளனர்.

இந்த 2-வது லுக் வெளியீட்டின் மூலம், சமீபமாக நடைபெற்று வரும் பிரச்சினையில் கே.ஜே.ஆர் நிறுவனம் பின்வாங்காதது தெளிவாகியுள்ளது. என்னவென்றால், இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட அன்றே, தலைப்புக்கான சர்ச்சை வெடித்தது. ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தத் தலைப்புக்கு, தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கே உரிமை கொடுத்திருப்பதாக அறிவித்தது. ஆனால், கே.ஜே.ஆர் நிறுவனமோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் வெளியிட்டது. இதனால் தலைப்பு யாருக்கு என்பதில் சர்ச்சை நீடித்தது.

ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா, மாளவிகா மோகனன் நடிக்க ஆனந்த் அண்ணாமலை இயக்கவிருந்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டது படக்குழு. முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்கள்.

ஆனால், சிவகார்த்திகேயன் படத்தின் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இதனால் தலைப்பு பிரச்சினை பேசி முடிக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தயாரிப்பு நிறுவனம் எழுத்தர் செய்த தவறினால் நடந்தது என்று அளித்த கடிதத்தையும் வெளியிட்டது.

இவ்வாறு ட்ரைப்ல் ஆர்ட்ஸ் நிறுவனம் பல வழிகளில் 'ஹீரோ' தலைப்புக்கு முயன்று வரும் சமயத்தில், கே.ஜே.ஆர் நிறுவனம் இந்தத் தலைப்பை விடுவதாக இல்லை என்பது 2-வது லுக் வெளியீட்டின் மூலம் தெளிவாகியுள்ளது.

— KJR Studios (@kjr_studios) October 18, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x