Published : 18 Oct 2019 03:26 PM
Last Updated : 18 Oct 2019 03:26 PM

அரவிந்த் கேஜ்ரிவாலா? அருண்காந்தா? தவறான செயலியைப் பதிவிறக்கம் செய்த டெல்லி மக்கள்

கோயம்புத்தூரில் வசிக்கும் சினிமா ஆர்வலர் மற்றும் இயக்குநர் அருண்காந்த், மூன்று மாதங்களுக்கு முன், தனக்கென ஒரு மொபைல் செயலியை AK என்ற பெயரில் ஆரம்பித்தார். அதில் சினிமா எடுப்பது பற்றிய தொழில்நுட்பத் தகவல்களும், வழிகாட்டு முறைகளும் இருக்கின்றன.

திடீரென நேற்று அருண்காந்தின் செயலி பலரால் பதிவிறக்கம் செய்யப்பட ஆரம்பித்தது. இத்தனைக்கும் இதற்கான எந்த விளம்பரத்தையும் அருண் செய்யவில்லை. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பதிவிறக்கம், அதிலும் பெரும்பாலானவை வட இந்தியாவிலிருந்து என்பதைக் கவனித்த அருண் ஆச்சரியப்பட்டு யோசித்தார்.

"நான் நாள் முழுவதும் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்தேன். அதில் பதிவிறக்கம் செய்த ஒருவரிடம் எப்படி எனது செயலியைப் பற்றிக் கேள்விப்பட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு நாளிதழில் வந்த செய்தியைப் புகைப்படம் எடுத்து அனுப்பினார். அது டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தனக்கென, AK செயலி என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயலியை ஆரம்பித்துள்ளார் என்ற செய்தி. அப்போதுதான் எனக்குப் புரிந்தது.

அவர் செயலி என்று நினைத்து எனது செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனது செயலியில் தண்ணீர் சேமிப்பு குறித்த குறும்படப் போட்டியை அறிவித்திருந்தேன். இதற்கும் சிலர் விண்ணப்பித்துள்ளனர். சிலர் நல்ல முயற்சி முதல்வரே என்று கருத்துப் பதிவு செய்துள்ளனர்.

கேஜ்ரிவாலுக்குச் செல்ல வேண்டிய புகார்களும் எனக்கு வருகின்றன. ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கான அபராதம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் இவர்கள் தவறான செயலியைப் பயன்படுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே நான்கு பேர் பதிவிறக்கம் செய்துவிட்டனர்" என்று கூறுகிறார் அருண்காந்த்.

கேஜ்ரிவாலின், 'தி அரவிந்த் கேஜ்ரிவால்' செயலி அக்டோபர் 16-ம் தேதி அன்று, ஆங்கிலம் மற்றும் இந்தியில் தொடங்கப்பட்டது. கேஜ்ரிவால் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகள், நேரலை உள்ளிட்ட அம்சங்களோடு, ஆம் ஆத்மி கட்சி குறித்த பொய்யான செய்திகளுக்குத் தீர்வு காணவும் இந்த செயலி முயல்கிறது.

'கோகோ மாகோ' என்ற படத்தை எடுத்துள்ள அருண்காந்த், அடுத்ததாக 'ரிவெட்' என்ற படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x