Published : 18 Oct 2019 01:27 PM
Last Updated : 18 Oct 2019 01:27 PM

’’என் அடையாளமாகிவிட்ட மூக்குக்கண்ணாடி!’’ - ’திரைக்கதை மன்னன்’ கே.பாக்யராஜ் 2; 40 கேள்விகள்... 40 பதில்கள்

வி.ராம்ஜி


நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜின் பேட்டி தொடர்கிறது. கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் அவர் பேட்டி அளித்தார். ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படம் தான் பாக்யராஜ் இயக்கிய முதல் படம். இந்தப் படம் வெளியாகி 40வது ஆண்டு இது. இதையொட்டி, அவரிடம் நான்கரை மணி நேர வீடியோ பேட்டி, எடுக்கப்பட்டது.


இதோ... கே.பாக்யராஜுடன்...

‘’அநேகமாக, தமிழ் சினிமாவில் கண்ணாடி அணிந்த முதல் ஹீரோ நீங்களாகத்தான் இருப்பீர்கள்? மைனஸ் பாயிண்ட்டையே ப்ளஸ் பாயிண்டாகவும் ஆக்கிக் கொண்டீர்கள்? ஆரம்பத்தில் எப்படி உணர்ந்தீர்கள்?


‘’கண்ணுல எனக்கு பிராப்ளம் இருந்தது உண்மைதான். சின்ன வயசிலேருந்தே பார்வைல கொஞ்சம் பிரச்சினைதான். ஸ்கூல்ல, போர்டுல எழுதிருக்கறது தெரியாது. பக்கத்துல இருக்கற பையன் எழுதறதைப் பாத்துட்டுத்தான் எழுதுவேன். ஆனா கண்ணாடிலாம் போடலை.
சினிமாவுக்கு வந்தப்ப, எங்க டைரக்டர் சார் (பாரதிராஜா), ‘புதிய வார்ப்புகள்’ படத்துல, வாத்தியார் கேரக்டர், கொஞ்சம் மெச்சூர்டா இருக்கணும்னு கண்ணாடியைப் போட்டுவிட்டார். அடுத்த படம், ‘கன்னிப் பருவத்திலே’, ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘ஒரு கை ஓசை’ன்னு கண்ணாடி போடலை.


அப்புறம், ‘மெளனகீதங்கள்’ படத்துல மேனேஜர் கேரக்டர். கண்ணாடி போட்டா நல்லாருக்குமேன்னு போட்டுக்கிட்டேன். ‘இன்று போய் நாளை வா’ படத்துல கூலிங்கிளாஸ் போட்டுருந்தேன். ‘விடியும் வரை காத்திரு’ படத்துல கண்ணாடி உண்டு. ‘அந்த ஏழு நாட்கள்’ படத்துல, கண்ணாடி போடலை. ஆனா, ‘கண்ணாடி’ங்கறது என்னோட பிராண்டாவே ஆயிருச்சு.


கண்ணுல பிரச்சினைங்கறதை யார்கிட்டயும் சொல்லாமலே இருந்துட்டேன். அதுவொரு காம்ப்ளக்ஸ் எனக்கு. கண்ணாடி போட்ட வாத்தியார்களை, ‘சோடாபுட்டி’ன்னெல்லாம் பட்டப்பேரு வைச்சு கூப்புடுவோம். நமக்கும் அப்படி பேரு வந்துருமோனு எனக்குள்ளே தாழ்வு மனப்பான்மை.


பிரவீணாதான் கண் பிரச்சினையைக் கண்டுபிடிச்சாங்க. ‘பாமாருக்மணி’ படம் பண்ணிட்டிருந்த சமயம். என்னைப் பாக்கறதுக்கு பாலகுரு சார் வந்திருந்தார். அவர் வர்றார்னு சொன்ன உடனே, எங்கே எங்கேன்னு கேட்டுக்கிட்டே இருக்கேன். அவர் தூரத்துல நிக்கிறது எனக்குத் தெரியவே இல்ல. எல்லாரும் பாலகுரு சார் பாலகுரு சார்னு சொல்றாங்க. எனக்குத் தெரியல. அதைக் கவனிச்ச பிரவீணா, ‘சாயந்திரம் டாக்டர்கிட்டப் போறோம்’னு சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. ‘சின்ன வயசுலயே இதைக் கவனிச்சு, கண்ணாடி போட்ருந்தா, இப்ப கண் பிரச்சினை வளர்ந்திருக்காது. பரவாயில்ல, இனிமேலாவது கண்ணாடி போடுங்க’ன்னு டாக்டர் சொன்னாரு.


கண்ணாடி போட்டுக்கறதுல எனக்கு இன்னொரு காம்ப்ளக்ஸும் இருந்துச்சு. கண்ணாடி போட்டுக்கறவங்களை திடீர்னு கண்ணாடி இல்லாம பாக்கும்போது, அவங்க மூஞ்சி ஒருமாதிரியா இருக்கும். பாக்கவே வேற மாதிரி இருக்கும். இதனாலயும் கண்ணாடியைத் தவிர்த்தேன்.
ஆனா, பிரவீணா சொல்லி, கண்ணாடி போட்டுக்க ஆரம்பிச்சேன். அதுலயும், ஃபைட்டிங் சீன் வந்துச்சுன்னா, கண்ணாடியோட சண்டை போட்டா, கண்ணாடி உடைஞ்சிரும். வாட்ச் கண்டினியூட்டிக்கு தேவைப்படும். அதனால, ஸ்டைலா கண்ணாடியையும் வாட்ச்சையும் கழட்டிக் கொடுத்துட்டு, சண்டை போடுற மாதிரி நடிச்சேன். உண்மையிலேயே இதை ஒரு ஸ்டைல்னு நினைச்சு, ரசிகர்கள் கைத்தட்ட ஆரம்பிச்சாங்க.
இதையும் ரெகுலராப் பண்ண முடியாது. ‘எப்பப் பாத்தாலும் கண்ணாடியையும் வாட்ச்சையும் கழட்டிக்கொடுக்கறான்யா’ன்னு பேசுவாங்களோனு பயந்தேன். ஆனா என்ன பண்றது? கண்ணாடி உடைஞ்சு, கண்ணுல பட்டு, சிக்கலாயிடக் கூடாது இல்லீங்களா? அதான் யார் என்ன சொன்னாலும், கண்ணாடி, வாட்ச்சையெல்லாம் கழட்டிக் கொடுக்கற மாதிரி நடிச்சேன்.


பார்வைக் குறை பிரச்சினையைத்தான், ‘சின்ன வீடு’ படத்துல ஒரு காட்சியாவே வைசிசிருப்பேன். அதுக்கும் தியேட்டர்ல பெரிய க்ளாப்ஸ் கிடைச்சுது’’ என்றார் பாக்யராஜ்.

’’ஏன் சார்.. கண்ணாடி, வாட்ச்சையெல்லாம் கழட்டிருக்கீங்க. கையில இருக்கிற இந்த ‘ஆர்’ மோதிரம் சார்? - என்று கேட்டபோது, சட்டென்று முகத்தில் பரவசம்.

‘’பிரவீணா என்னை ‘ராஜன்’னுதான் கூப்புடுவாங்க. ’சுவரில்லாத சித்திரங்கள்’ முடிஞ்சதும், படத்தை முழுசாப் பாத்தாங்க. அவங்க பாத்துட்டு, ‘நல்லாருக்கு’ன்னு சொன்னதோட மட்டுமில்லாம, ‘இந்த ‘ஆர்’ மோதிரத்தை விரல்ல போட்டுவிட்டாங்க. அதை அப்படியே போட்டுக்கிட்டிருக்கேன்.

’’பாரதிராஜா கூட உங்களை ராஜன் என்றுதானே கூப்பிடுவார்?”

‘’ஆமாம். அவர் பேர் என்னய்யான்னு கேட்டார். நான் ராஜன்னுதான் சொன்னேன். அப்புறம் டைட்டில்ல ‘பாக்கியராஜ்’னு பேர் பாத்துட்டு, ‘பாலகுரு, யாரு இது பாக்கியராஜ்?’னு கேட்டார். ‘நம்ம ராஜன் தான். அவரோட முழுப்பேரு பாக்கியராஜ்’னு சொன்னார்.
மெச்சூர்டா இல்லாம இருந்த சமயம் அது. யாராவது பேர் கேட்டா, ‘கோவை ராஜா’ன்னு ஸ்டைலாச் சொல்லுவேன். அப்புறம் எதுக்கு இப்படிலாம் பண்ணனும்னு, முழுப்பேரே வைச்சிக்கிட்டேன். ‘எங்க அம்மா பாக்கியம் கிடைக்கட்டும்னு பாக்யராஜ்னு பேரு வைச்சிருக்காங்க. அதனால அப்படியே இருக்கட்டும் சார்’னு சொன்னேன். டைரக்டர் சாரும் சரின்னுட்டார்.

‘’உங்க வீட்ல அண்ணன் பேரும் இப்படி ராஜான்னுதான் முடியும். கரெக்ட்டா சார்?’


‘’பொண்ணு பொறந்தா செல்வி, இல்லேன்னா செல்வராஜ்னு பேர் வைக்கணும்னு நினைச்சாங்க. பையன் தான். அதனால செல்வராஜ்னு பேரு. அடுத்து, தனலட்சுமி இல்லேன்னா தன்ராஜ்னு நினைச்சிருந்தாங்க. ரெண்டாவதும் பையன். தன்ராஜ்னு பேர் வைச்சாங்க. மூணாவதா, பாக்யராஜ், பாக்யலட்சுமி, பாக்யராஜ்னு நினைச்சிருந்தாங்க. நான் பொறந்தேன். பாக்யராஜ்னு பேர் வைச்சிட்டாங்க’’.

‘’உங்களுடைய படங்களில், கதாநாயகிகளுக்கு வைத்த பெயர்கள் எல்லாமே நன்றாகவே அமைந்தன. ‘சுவரில்லாத சித்திரங்கள்’ சுமதிக்கு சரோஜா, ‘மெளனகீதங்கள்’ படத்தில் சரிதாவுக்கு சுகுணா, ‘அந்த ஏழு நாட்கள்’ அம்பிகாவுக்கு வசந்தி, ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் சுலக்‌ஷணாவுக்கு மங்களம், ‘சின்னவீடு’ல கல்பனாவுக்கு பாக்யலட்சுமி... இப்படி கேரக்டருக்கு பெயர் வைத்ததில் காரணம் ஏதாவது உண்டா?’’

‘’அப்படிலாம் இல்லீங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச பேரு, கிராமங்கள்ல நிறைய இருக்கிற பெயர்னு பாத்து வைக்கிறதுதான். சுகுணான்னு சொல்லும்போதே ஒரு ஈர்ப்பு இருக்கறா மாதிரி தோணுச்சு. அதனாலதான் வைச்சேன். மத்தபடி இதுல எந்தப் ப்ளானும் இல்ல.’’

‘’உங்களிடம் உள்ள குரு மரியாதை, நன்றியுணர்வு... இவை எல்லாமே சொல்லிக்கொடுத்து வந்த விஷயங்களா சார்?’’


‘’சின்னவயசுலயே வீட்ல சொல்லிக்கொடுப்பாங்க. ஸ்கூல்ல வாத்தியார்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. இதையெல்லாம் உள்வாங்கிக்கறதுதான், அப்புறமா உணர்வா, நம்ம கேரக்டரா வந்துரும்.


நான் வெள்ளாங்கோவில்ல ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ, மதியம் சாப்பிடுறதுக்கு வீட்டுக்கு வருவேன். சாப்பிட்டு முடிச்சிட்டு போகும்போது, எங்க அம்மா, காலணா காசு தருவாங்க. அப்பலாம் ஓட்டைக்காசு. அதாவது, நடுவுல ஓட்டை இருக்கும். அந்தக் காசை வாங்கிக்கிட்டு, பக்கத்துல இருக்கிற கோனார் கடைக்குப் போவேன். கோனார் ஒருத்தர் பொட்டிக்கடை வைச்சிருந்தார். அதனால அந்தப் பேரு. அங்கே போய், காசு கொடுத்து, தேன் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டே ஸ்கூலுக்கு ஓடுவேன்.


ஒருநாள்... சாப்பிட வீட்டுக்கு வந்தேன். அம்மா வெளியே போயிருந்தாங்க. சாப்பிட்டு முடிச்சதும், வழக்கமா அந்தப் பெட்டிலேருந்து அம்மா காசு எடுத்துத் தருவாங்கன்னு தெரியும். அந்தப் பெட்டிலேருந்து ஓட்டைக்காசு எடுத்துட்டு, கோனார் கடைக்குப் போனேன். தேன் மிட்டாய் கேட்டேன்.
‘அம்மா வீட்ல இல்லியா?’ன்னு கடைக்காரர் கேட்டார். ஆமாம்னேன். தேன் மிட்டாய் குடுத்தாரு. வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டே ஸ்கூலுக்குப் போயிட்டேன். சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். அஞ்சாறு குடித்தனம் இருக்கிற வீடு எங்களுது. ‘ப’ வடிவத்துல வீடுங்களா இருக்கும். எங்க வீட்டு வாசல்ல, அம்மா, அக்கம்பக்கத்து ஆளுங்க, அந்த கடைக்கார கோனார்னு இருந்தாங்க. எல்லாரும் பாத்து சிரிச்சாங்க.
‘மிட்டாய் வாங்கினியா?’ன்னு அம்மா கேட்டாங்க. ஆமாம்னேன். ‘ஏது காசு?’ன்னு அம்மா கேட்டாங்க. ‘நீ பொட்டிலேருந்து எடுத்துக் கொடுப்பியே. அதுலேருந்து எடுத்துக்கிட்டேன்’னு சொன்னேன். ‘அதுலேருந்து நீ காசு எடுத்துக் கொடுக்கலப்பா. மோதிரத்தை எடுத்துக் கொடுத்திருக்கே. பாரு... கடைக்கார கோனார், எவ்ளோ தங்கமானவர் பாரு. சின்னப்பையன் தானே. ஏமாத்துனா தெரியாதுன்னெல்லாம் நினைக்காம, தங்கத்துக்கு ஆசைப்படாம, நேர்மையா நடந்துக்கிட்டிருக்காரு பாரு’ன்னு அம்மா சொன்னாங்க.


அப்ப எனக்கு தங்கத்தோட மதிப்புலாம் தெரியாது. ஆனால், அந்த மதிப்பையெல்லாம் தாண்டி, கடைக்காரப் பெரியவர் கோனார் மேல ஒரு மரியாதை வந்துச்சு.


இப்படி சொல்லிக்கொடுக்கறது, நாம பாக்கறது, உள்வாங்கிக்கறது... இது எல்லாம்தான் மரியாதையாவும் நன்றியாவும் அன்பாவும் பிரியமாவும் நம்ம கேரக்டராவும் ஆகுது’’ என்று சொல்லி நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்தார்...


‘’அம்மாவைப் பத்தி சொல்லும்போது இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. அப்போ, சீனா - இந்தியா யுத்தம் நடந்துட்டிருந்த சமயம். ஊர்ல முக்கிய இடங்கள்ல, சீன – இந்திய யுத்தம் பத்தியும், நம் இந்திய ஜவான்கள், எப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்கன்னும், விளக்கமா சொல்லி, நம்மளால முடிஞ்ச உதவி செய்யணும்னு சொல்லி, நிதி கேட்டுக்கிட்டிருந்தாங்க. இதைக் கேட்டுட்டிருந்த எங்க அம்மா, கையில போட்டிருந்த வளையலையெல்லாம் கழட்டிக் கொடுத்துட்டாங்க. இதைப் பாத்த எல்லாரும் அம்மாவை பாராட்டினாங்க.


ஆனா, இந்த விஷயம் தெரிஞ்சதும் எங்க தாத்தா, பாட்டி, சிரிக்கிறாங்க. திட்டுறாங்க. ஆனா எங்க அம்மா எவ்ளோ பெரிய விஷயம் பண்ணிருக்காங்கன்னு பின்னாடி புரிஞ்சப்போ, அம்மா மேல இன்னும் பிரியமும் பாசமும் மரியாதையும் கூடுச்சு’’ என்று சொல்லி நெகிழ்கிறார் பாக்யராஜ்.

* தியேட்டருக்கு போகணும்னா 18 கி.மீ.

* டூரிங் கொட்டகையில் ‘மன்னாதி மன்னன்’

* ஜெமினி கணேசனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்
* சின்ன வயதில் பார்த்த இன்ஸ்பிரேஷன் படம்...
- இன்னும் தொடரும்
இதன் அடுத்த பகுதி வரும் 21.10.19 திங்கட்கிழமை அன்று வெளிவரும்.

இயக்குநர் கே.பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண :

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x