Published : 16 Oct 2019 07:48 PM
Last Updated : 16 Oct 2019 07:48 PM

'மிக மிக அவசரம்' புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'மிக மிக அவசரம்' படத்தின் வெளியீடு பிரச்சினையானதால், தற்போது படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள படம் 'மிக மிக அவசரம்'. ஸ்ரீப்ரியங்கா, முத்துராமன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் கவுரவத் தோற்றத்தில் சீமான் நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் என விளம்பரப்படுத்தியது படக்குழு.

ஆனால், தமிழகம் முழுக்க சேர்த்து வெறும் 17 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்து, படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ரவீந்திரன் சந்திரசேகரன், 'மிக மிக அவசரம்' வெளியீடு தொடர்பான தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், திரையரங்கு உரிமையாளர்களைக் கடுமையாகச் சாடிப் பேட்டியளித்தார் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. தயாரிப்பாளர் சங்கமும் இந்த விவகாரத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாரதிராஜாவும் தன் கண்டனத்தைப் பதிவு செய்தார்.

தற்போது, 'மிக மிக அவசரம்' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. நவம்பர் 8-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x