Published : 15 Oct 2019 12:06 PM
Last Updated : 15 Oct 2019 12:06 PM

என் ஆசானாக இருந்தவர் சிவாஜி: சிவகுமார் புகழாரம்

என் ஆசானாக இருந்தவர் சிவாஜி என்று 'சிவாஜி ஆளுமை பாகம் நான்கு' நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டினார்.

இன்பா எழுதிய 'சிவாஜி ஆளுமை பாகம் நான்கு' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், தமிழக அரசு செயலர் ராஜேந்திரன், முனைவர் ராஜாராம், நடிகர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிவகுமார் பேசியதாவது:

"நான் சிவாஜியுடன் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், சிவாஜி பற்றி அனைத்து விஷயங்களையும் புள்ளிவிவரங்களுடன் தன் புத்தகத்தில் இன்பா சொல்லியிருந்தார். சிவாஜி பற்றி முழுமையான ஒரு உரையை நிகழ்த்த நினைத்தபோது இன்பாவின் புத்தகம்தான் உறுதுணையாக இருந்தது. கடந்த ஆண்டு நடந்த உரையில் பதினைந்தாயிரம் பேர் முன்னிலையில் சிவாஜியின் 35 ஆண்டு கால சினிமாக்களை ஒரே மூச்சில் 75 நிமிடங்கள் பேசினேன்.

நான் பிறந்த காலங்களில் சினிமா பார்ப்பது என்பது பீடி, சிகரெட், தண்ணி அடிப்பது மாதிரி பாவச்செயல். தீபாவளி, பொங்கல் மாதிரி பண்டிகைகளில் அதுவும் பகல் காட்சி மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும். அந்த மாதிரி ஒரு பண்டிகை நாளில் 1956-ல் 'வணங்காமுடி' படம் பார்த்தேன். வசனம் எழுதியவர் ஏ.கே.வேலன். நடித்தவர் வாத்தியார் சிவாஜி.

உயிர், உடல் என எங்கும் நீக்கமற நடிப்பு ஊறிப்போனவர். சிற்பி இளவரசியைக் காதலிக்கக்கூடாது எனச் சொல்ல இவர் காதலிப்பார். சிவாஜியை நாடு கடத்த, மன்னன் உத்தரவிட அதனை எதிர்த்து சிவாஜி வசனம் பேசுவார். அரங்கமே அதிரும். அப்போதே சாவதற்குள் அந்த மனிதனைப் பார்த்துவிட்டுச் சாக வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2 வருடங்களில் 1958-ல் சிவாஜிக்கு நெருக்கமானவர் குடும்பத்தில் கோயம்புத்தூரில் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். காலம் ஓடியது.

ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் கற்றேன். 1965-ல் நடிப்புத் துறைக்குள் வந்தேன். 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் சிவாஜியின் மூத்த மருமகனாக நடித்தேன். அதே நேரத்தில் 'கந்தன் கருணை' படத்தில் முருகனுக்கு 36 பேரைப் பார்த்து கடைசியாக நான் தேர்வாகி நடித்தேன். அதில் தூதுவனாக வீரபாகுவாக என் வாத்தியார் சிவாஜி நடித்தார். அவரும் அசோகனும் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது போய் பார்த்தேன். அவர்கள் இருவரும் பேசிய வசனத்தைப் பார்த்து மிரண்டுவிட்டேன்.

சினிமாவில் எதுவும் தெரியாமல் ஒப்பேற்ற முடியாது என முடிவு செய்து சொந்தமாக நாடக கம்பெனி ஆரம்பித்தேன். அது முடியாமல் மேஜர் சுந்தர்ராஜன் நாடக கம்பெனியில் இணைந்து இந்தியா முழுக்க ஆயிரம் நாடகங்கள் நடித்தேன். அப்போதுதான் மனப்பாடம் செய்யும் கலையைக் கற்றேன். 67 வயதில் கம்பராமாயணத்தில் உள்ள 15 ஆயிரம் பாடல்களைக் கற்று அதனைச் சுருக்கி உரை நிகழ்த்தினேன். மகாபாரதத்தை 4 வருடங்கள் ஆராய்ச்சி செய்து கற்று, 6500 மாணவர்கள் முன்னே உரை நிகழ்த்தினேன். இதற்கெல்லாம் ஆசானாக இருந்தவர் சிவாஜி.

என்னால் இது முடிகிறதென்றால் உங்களால் இதையும் தாண்ட முடியும். என்னை மாதிரி நூறு மடங்கு சாதனைகளை நீங்கள் புரிய முடியும். எவராவது, நான் மனனம் செய்த சாதனையை முறியடித்து, கற்றுத் தேர்ந்து சாதனை புரிந்தால் இன்னும் சந்தோஷப்படுவேன்.

இப்போது உரையின் முடிவுக்கு வந்துவிட்டோம்.

வாத்தியார் சிவாஜிக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. கலை உலகம் திரண்டு விழா எடுத்தது. அம்மையார் ஜெயலலிதா தலைமை தாங்கினார்.

அப்போது வாசித்த வாழ்த்து மடலை இப்போது படிக்கிறேன்.

பள்ளிப் படிப்பு இல்லை,
பரம்பரை பெருமை இல்லை,
இளமையில் வறுமையை இறுகத் தழுவியவன்,
ஆயினும் கலை உலக நாயகி கலைவாணியின் ஆசி பெற்று
திரை உலகில் அழியாது இடம்பிடித்து விட்டான்,
ஒருசாண் முகத்தில் ஓராயிரம் பாவனை காட்டி,
சிம்மக்குரலில் தீந்தமிழ் பேசி,
அவன் படைத்த பாத்திரங்கள் திரையில் அசைகின்ற ஓவியங்கள்,
கர்ணனாக, கட்டபொம்மனாக, சிவாஜியாக, செங்குட்டுவனாக, அரிச்சந்திரனாக , அசோகனாக, அப்பராய், ஐந்தாம் ஜார்ஜாக, வஉசியாக, வாஞ்சியாக அவன் ஏற்ற வேடங்கள் எங்களுக்குப் பாடங்கள்.
நடக்கும் நடையில் நானூறு வகை காட்டினான்.
மொத்தத்தில் நவரசங்களில் நமக்கு நவராத்திரி காட்டிவிட்டான்.
கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என மானிட வரலாறு சொல்ல,
சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் எனத் தமிழக திரை வரலாறு சொல்லும்.
வாழ்க சிவாஜி நாமம்!
ஓங்குக சிவாஜி புகழ்!’’.

இவ்வாறு சிவகுமார் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x