Published : 14 Oct 2019 07:56 AM
Last Updated : 14 Oct 2019 07:56 AM

திரை விமர்சனம் - பெட்ரோமாக்ஸ்

மலேசியாவில் வசிக்கும் பிரேம், சென்னை அருகே உள்ள பூர்வீக வீட்டை விற்க முயற்சி செய்கிறார். அங்கு பேய்கள் வசிப்பதாகக் கூறி யாரும் வாங்க மறுக்கின்றனர். இதைக் காரணம் காட்டி, அடிமாட்டு விலைக்குக் கேட்கி றார் மைம் கோபி. குறைந்த விலைக்கு விற்க விரும்பாத பிரேமின் மனநிலை யைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கி றார் பணமுடை உள்ள ராம்தாஸ்.

அந்த வீட்டில் 4 நாட்கள் தங்கி, அங்கு பேய்கள் இல்லை என்று நிரூபித்தால், வீட்டின் விலையில் 20 சதவீத கமிஷன் தருவதாக ராம்தாஸிடம் கூறுகிறார் பிரேம். சவாலை ஏற்கும் ராம்தாஸ் தன் நண்பர்கள் காளி வெங்கட், சத்யன், திருச்சி சரவணகுமார் ஆகிய 3 பேரு டன் அந்த வீட்டில் தங்குகிறார். உண்மை யில் அங்கு பேய்கள் இருந்ததா? ராம் தாஸால் தனது நண்பர்களுடன் அந்த வீட்டில் தங்கமுடிந்ததா? அங்கு இதற்கு முன்பு வசித்தது யார்? பிரேம் வீட்டை விற்க முடிந்ததா என்பது மீதிக் கதை.

2017-ல் வெளியான ‘அதே கண்கள்’ என்ற திரில்லர் படம் மூலம் கவனத்துக் குரிய இயக்குநராக அறிமுகமான ரோஹின் வெங்கடேசனின் 2-வது படம். அறிமுகப் படத்துக்கு தலைப்பை மட்டும் கடன் வாங்கி வெற்றி கொடுத்தவர், 2-வது படத்துக்கு கதையை கடன் வாங்கி இருக்கிறார். 2017-ல் வந்த ‘அனந்தோ பிரம்மா’ என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் மறு ஆக்கம்தான் இப்படம்.

தமிழ் சினிமா அடித்துத் துவைத்துக் காயப்போட்டுவிட்ட திகில் - காமெடி வகைக் கதை. தமிழ் மறு ஆக்கத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளார்.

பேய்களை அறிமுகப்படுத்தும் காட்சி, சற்றும் எதிர்பாராத திருப்பமாக புதுமையாக இருக்கிறது. இது மாறுபட்ட பட மாக இருக்கும் என்ற மனநிலையை அந்தக் காட்சியே உருவாக்கிவிடுகிறது. எடுத்த எடுப்பில் டாப் கியரில் தொடங் கும் படம், பின்னர் இடைவேளைக்கு முன்புவரை பல சலிப்பூட்டும் காட்சிக ளால் ஊர்ந்து செல்கிறது.

பேய் வீட்டில் தங்கப் போகிறவர்கள் அந்தச் சூழலை எப்படி அடைந்தார்கள் என்பதற்கான பிளாஷ்பேக் காட்சிகள், முதல் பாதியின் கணிசமான பகுதியை எடுத்துக்கொண்டாலும், ரசிக்கும்படி இருக்கின்றன. இரண்டாம் பாதியில் பேய் வீட்டுக்குள் நகர்ந்த பின், திரைக்கதை சட்டென வேகமெடுத்து எகிறுகிறது.

வீட்டுக்குள் 4 நாட்களை கழிக்க ஒப்புக் கொண்ட நால்வருக்குமான பிரத்யேகப் பிரச்சினைகள், அவற்றின் காரணமாக செய்யும் செய்கைகள் அவர்களை மட்டு மல்லாது, நம்மையும் பேய்களின் அச் சுறுத்தலில் இருந்து காப்பாற்றும் அதகள நகைச்சுவை ரகம்.

படத்தின் உயர்தரமான அம்சம் பேய் களின் முன்கதையில் ஒளிந்திருக்கும் உருக்கமும், அதை வைத்து இயக்குநர் சொல்லும் செய்தியும். பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு இங்கு தனிமையில் வாடும் முதிய தம்பதிகளின் வலியைக் கடத்துவதில் இக்காட்சிகள் முழு வெற்றியைப் பெற்றுவிடுகின்றன.

ஏற்கெனவே வெள்ளையாக இருக் கும் தமன்னாவை, பேய்த் தோற்றத்துக் காக மேலும் வெள்ளையாக்கி நம்மை பயமுறுத்த தவறிவிடுகிறார் ஒப்பனைக் கலைஞர். மற்ற நடிகர்கள்போல ஒரு சின்ன கதாபாத்திரத்தில் குறைசொல்ல முடியாதபடி நடித்திருக்கும் தமன்னா, பிளாஷ்பேக் காட்சிகளில் புடவையில் கொள்ளை அழகுடன் வலம் வருகிறார்.

தமன்னாவைவிட அதிகக் காட்சிக ளில் வரும் ராம்தாஸ் நகைச்சுவை, சென்டிமென்ட் என இரு அம்சங்களிலும் நிறைவான நடிப்பு. பேய்களைப் பார்த்து அவர் சிரிக்கும் இடங்களில் திரையரங்கு மொத்தமும் சிரிக்கிறது.

நடிகனாக ஆசைப்படும் காளி கதா பாத்திரத்தில் வரும் திருச்சி சரவண குமார், விதவிதமான தோற்றங்களில் வந்து வெளுத்துக்கட்டும்போது பார்வை யாளர்கள் வாய்கொள்ளாமல் சிரித்துத் தீர்க்கிறார்கள்.

இவர்களுடன் காளி வெங்கட், சத்யன், மைனா நந்தினி, பிரேம், வெங்கடேஷ், மைம் கோபி, பேபி மோனிகா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக தந்துள்ளனர்.

கதைக்கும், களத்துக்குமான பங்க ளிப்பை கிப்ரானின் பின்னணி இசையும், டேனி ரேமண்டின் ஒளிப்பதிவும் அளித் திருக்கின்றன. ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் சில இடங்களில் கவனிக்க வைக்கின்றன.

வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல; அங்கு வாழும், வாழ்ந்த மனிதர்களின் உணர்வுகளும் வசிக்கும் இடம் என்பதை உறுத்தல் இல்லாத நகைச்சுவை மூலம் சொன்ன விதத்தில் பிரகாசமாக ஒளிர்கிறது இந்த ‘பெட்ரோமாக்ஸ்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x