Last Updated : 29 Jul, 2015 08:17 PM

 

Published : 29 Jul 2015 08:17 PM
Last Updated : 29 Jul 2015 08:17 PM

கணினியைத் தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்: இளவல்களுக்கு இளையராஜா அறிவுரை

இன்றைய இசை மிகவும் கேவலமான பாதையில் போய் கொண்டிருக்கிறது என்று இசையமைப்பாளர் இளையராஜா காட்டமாக தெரிவித்தார்.

மறைந்த பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு புகழஞ்சலி செய்யும் வகையில் இளையராஜா ஒரு இசைநிகழ்ச்சி நடத்தினார். 'என்னுள்ளில் எம்.எஸ்.வி' என்று பெயரில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் மூலம் வசூலான தொகையினை எம்.எஸ்.வியின் குடும்பத்தினருக்கு அளித்தார் இளையராஜா.

இந்நிகழ்ச்சியில் இளையராஜா பேசியது, "எம்.எஸ்.வி அண்ணா உலகமகா இசையமைப்பாளர்தான் ,உலகப்புகழ் பெற்ற எந்த இசையமைப்பாளருக்கும் அவர் குறைந்தவரல்ல. தமிழ்நாட்டிலே பிறந்ததால் எம்.எஸ்.வி அண்ணா உலக மகா மேதையில் சேரமாட்டாரா? பாரதி சொன்ன மாதிரி நெருப்பில் சிறியது என்ன பெரியது என்ன? தழலில் சிறிது என்ன பெரிது என்ன? தமிழ்நாட்டு நெருப்பு உலகை எரிக்காதா? அக்கினிக் குஞ்சு அளவில் சிறிதானாலும் எரிக்கும்.

நானும் அண்ணன் பாவலரும் சினிமாவுக்கு வரும்முன் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடியபோது பாடியவை எல்லாமே அண்ணனின் மெட்டுகள்தான். 'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலை 'சுப்ரமணியம் சோறு வேணும்' என்று சி. சுப்ரமணியத்தைப் பார்த்து கேட்டோம் இப்படிப் பல பாடல்கள். கஜல் பாடலாக முதலில் அண்ணன் எம்.எஸ்.வி தந்தது 'நிலவே என்னிடம் நெருங்காதே' பாடல் தான். சங்கீதத்துக்கு நான் பொறுப்பு சாகித்யத்துக்கு நீங்கள் பொறுப்பு என்று கவிஞர்களிடம் கூறுபவர்.

200 ஆண்டுகளுக்கு முன்பு மொசார்ட் அமைத்த இசை இவரிடம் இருந்தது . மொசார்ட்இசையை கேட்க வாய்ப்பே இல்லை இவருக்கு. இருந்தாலும் மொசார்ட் அமைத்த உலகத்தர இசை இவரிடம் இருந்திருக்கிறது

அப்படிப்பட்ட எம்.எஸ்.வியை உடுமலை நாராயணகவி ஒரு முறை அறைந்து விட்டார். 'உலகேமாயம்' பாடலை கண்டசாலா 'உல்கே மாயம்' என பாடியதற்காக அறைந்து விட்டார். அவர் பிடித்து விட்டது என்றால் மனதை திறந்து பாராட்டுவார். குழந்தை மனசு அவருக்கு .எம்.எஸ்.விஅண்ணா என்னை முதலில் பாராட்டியது 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடலுக்குத்தான்

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' என்ன ஓர் அற்புதமான பாடல் அப்படி எல்லாம் இன்று போடமுடியுமா? இப்போது போட்டால் எழுந்து போய் விடுவார்கள். சூப்பர் ஸ்டார் நடித்தாலும் இப்போது எழுந்து போய் விடுவார்கள். ஏனென்றால் அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வேறாக இருக்கிறது,. 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாட்டு போல இப்போது இல்லை என்பது திட்டவட்ட முடிவு இனியும் இருக்கப் போவதில்லை .இப்போதெல்லாம் சிப்ஸ், பாப்கார்ன்கள் வந்துவிட்டன.

இப்போதுள்ளவர்களுக்குச் சொல்கிறேன் இன்று இசை கேவலமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. கையில் சாம்பிள் வைத்துக் கொண்டு இசையமைத்து வருகிறார்கள். சாம்பிளை எல்லாம் தூக்கி போடுங்கள் கையிலுள்ள கம்ப்யூட்டரை தூக்கிப் போட்டுவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள். கம்யூட்டரைப் பயன்படுத்தாதீர்கள்.மூளையைப் பயன்படுத்துங்கள். கம்ப்யூட்டர் சிப்பை விட்டுவிட்டு மூளையிலுள்ள சிப்பை பயன்படுத்துங்கள்.

எம்.எஸ்.வி அண்ணாவை விட்டுவிட்டு எனக்கு ஸ்ரீதர் பட வாய்ப்பு வந்த போது நான் அதை மறுத்தேன்.பாரதிராஜா கூட பெரிய வாய்ப்பு ஏன் மறுக்கிறாய் என்றார் 58 படங்கள் இசையமைத்த எம்.எஸ்.வி அண்ணாவையே அவர் தூக்கிப் போட்டு விட்டார் என்று நான் என்று மறுத்தேன்.

அப்படிப்பட்ட எம்.எஸ்.வி. என்னைப் பாதித்த உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினேன். அந்த உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடாது. என்று தான் நான் யாரையும் கூப்பிடவில்லை. அவருக்கு மறைவு என்பதே இல்லை. அவர் என்றும் நம்முடன் இருப்பார். இன்றும் எம்.எஸ்.வி அண்ணா நம்முடன் இருக்கிறார்.'' என்று நெகிழ்ச்சியுடன் கூறி முடித்தார் இளையராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x