Published : 28 Sep 2019 10:47 AM
Last Updated : 28 Sep 2019 10:47 AM

அமெரிக்கா வழியாக ஆஸ்கர் விருதுக்கு முயற்சி: பார்த்திபன் தகவல்

'ஒத்த செருப்பு' படத்தை அமெரிக்கா வழியாக ஆஸ்கர் விருதுக்குக் கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

இந்தப் படத்துக்குப் போதிய வரவேற்பு கிடைத்துள்ளதால், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இணைந்து இயக்குநர்கள் எஸ்.ஏ.சி, ஜெயம் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பார்த்திபன்.

அப்போது அவர் பேசும் போது, "’ஒத்த செருப்பு’ படம் தொடங்கும் போதே, வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் தான் தொடங்கினேன். நமது நம்பிக்கை பலமுறை பொய்த்திருக்கிறது. இம்முறை பொய்க்காமல் இருப்பதற்கு என்ன பண்ணுவது என்று யோசித்தேன். அது மிகவும் சவாலாக இருந்தது. எப்போதுமே சாதாரணமாக ஒரு விஷயத்தைப் பண்ணி ஜெயிப்பதை விட, ரொம்ப சிரமமான விஷயத்தைச் செய்து ஜெயிப்பதைத் தான் பெருமையாக நினைப்பேன்.

'புதிய பாதை' படத்துக்கு முன்பு பாக்யராஜ் சாரிடம் உதவி இயக்குநராக இருந்ததால், எனக்குப் பல வாய்ப்புகள் வந்தது. அப்போது அவர்கள் ஒரு கதை சொல்லி பண்ணச் சொல்வார்கள். நான் பண்ண மாட்டேன் என்று வந்துவிடுவேன். என்னுடைய நண்பர் ஒருவர் தயாரிப்பாளர் சொல்லுவதை எல்லாம் செய்வார். நான் செய்ய மாட்டேன். அப்படித்தான் எனக்கு 'புதிய பாதை' அமைந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்துக் கிடைக்கும் வெற்றி, தூய்மையானதாக இருக்கும் என நம்பினேன்.

தனியொரு மனிதன் நடிக்கும் படத்தை வெள்ளைக்காரன் மட்டும் தான் எடுக்க முடியுமா, ஏன் நம்ம எடுக்க முடியாதா என்று எண்ணினேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆஸ்கர் விருது வாங்கியதற்குப் பிறகு ஏன் நம்ம ஆஸ்கர் விருது வாங்க முடியாதா?. அதற்காக நிறைய உழைக்கணும், கஷ்டப்பட வேண்டும் என்று தெரியும். இந்த முகத்தை எப்படி 2 மணி நேரம் பார்ப்பது என்ற அவநம்பிக்கை. சினிமாவில் பார்ப்பது முகம் கிடையாது. முகத்தை மறந்தால் தான் நல்ல சினிமா வரும்.

மாசிலாமணி என்ற கேரக்டரை நம்மால் பண்ண முடியும் என நம்பினேன். ஆகையால் ராம்ஜி மற்றும் ரசூல்பூக்குட்டி மாதிரியான கலைஞர்களைக் கூட வைத்துக் கொண்டேன். ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்றால் செப்.20-ம் தேதி வெளியிட்டு ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடும் நெருக்கடியில் வெளியிட்டுவிட்டு, வெற்றிக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் இப்படி நெகிழ்ந்து போய் திரையரங்கிலிருந்து வெளியே வந்து பார்த்ததில்லை. இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து பார்வையாளர்களுக்கும் நன்றி.

ஆஸ்கர் விருது பரிந்துரையில் உள்ள 29 படங்களில் நமது படத்தைத் தேர்வு செய்து விடுவார்கள் என நம்பினேன். ஏனென்றால், அதன் தனித்தன்மை என நினைத்தேன். ஆனால், அதைத் தாண்டி ஒரு நல்ல படத்தைத் தான் தேர்வு செய்துள்ளார்கள். அப்படியென்றால் நம்ம ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என வருந்தினேன். ஆனால், விடப்போவதில்லை. அமெரிக்கா வழியாக ஆஸ்கர் விருதுக்குள் இந்தப் படத்தைக் கொண்டு செல்ல முயற்சித்து வருகிறேன்.

ஏன் இந்தப் படத்தைத் தேர்வு செய்யவில்லை என்று திரைப்பட கூட்டமைப்புக்குக் கடிதம் எழுதவுள்ளது இயக்குநர்கள் சங்கம். அங்கிருந்து சரியான பதில் வரவில்லை என்றால் போராட்டம் நடத்துவது என்று தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசிக் கொண்டிருக்கிறார். அனைத்துமே இன்னும் ஓரிரு நாட்கள் தெரிந்துவிடும். தமிழன் பெருமை ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தெரிந்தது. அது திரைப்படத்துக்கும் தேவையானதாக இருக்கிறது.

ஆஸ்கர் விருதுக்கு இணையான கோல்டன் குளோப் விருதுக்கான திரையிடல் அக்டோபர் 20-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது" என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x