Published : 01 Sep 2019 11:08 AM
Last Updated : 01 Sep 2019 11:08 AM

’’மோதிரம் கொடுத்து தேன் மிட்டாய் வாங்கினேன்’’  - கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி

வி.ராம்ஜி


‘’மோதிரம் கொடுத்து தேன் மிட்டாய் வாங்கினேன்’’ என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் முதன்முதலாக இயக்கிய படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படம் 1979ம் ஆண்டு திரைக்கு வந்தது. கிட்டத்தட்ட, இவர் திரையுலகில் இயக்குநராகி, 40 வருடங்களாகின்றன.


இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், கே.பாக்யராஜுக்கு 40 ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் நினைவுப்பரிசு ஒன்று வழங்கப்பட்டது. இதையடுத்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்காக, அவர் பிரத்யேகப் பேட்டி அளித்தார்.


அதில் அவர் தெரிவித்ததாவது:


‘’கோயம்புத்தூர் பக்கம் வெள்ளாங்கோவில்தான் எங்க சொந்த ஊர். அங்கே மூணாவதா வரைக்கு ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன். அப்போ தினமும் ஸ்கூல்லேருந்து மதியம் சாப்பிடுறதுக்கு வீட்டுக்கு வருவேன். சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்குக் கிளம்பும்போது, அம்மா காசு தருவாங்க. அப்பலாம் காசு ஓட்டையா இருக்கும். அதாவது காசுக்கு நடுவே ஓட்டை இருக்கும். பெட்டியில் இருந்து அம்மா கொடுத்த காசை எடுத்துக் கொடுப்பாங்க. ஊர்ல இருக்கற பெட்டிக்கடைல தேன் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவேன்.


அந்தக் கடையை கோனார் கடைன்னு சொல்லுவோம். ஒருநாள், அம்மா இல்ல. வெளியே போயிட்டாங்க. சாப்பிட்டுட்டு, அம்மா காசு வைத்திருக்கிற பெட்டியில் இருந்து ஓட்டைக்காசை எடுத்துக்கொண்டு, கோனார் கடைக்குப் போனேன். காசைக் கொடுத்தேன். தேன் மிட்டாய் கொடுத்தார். சாப்பிட்டுக்கொண்டே ஸ்கூலுக்குப் போனேன்.


சாயந்திரம், ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். எங்க வீடு ஒரு ஸ்டோர் வீடு மாதிரி. நிறைய வீடு உண்டு. எல்லாருமே எங்க வீட்லதான் இருந்தாங்க. அம்மாவும் இருந்தாங்க. அந்தக் கடைக்கார கோனாரும் இருந்தாரு.


‘மத்தியானம் கடைக்குப் போய் தேன் மிட்டாய் வாங்கிச் சாப்பிடியா?’ன்னு அம்மா கேட்டாங்க. ஆமாம் என்று சொன்னேன். ‘ஏதுடா காசு?’ என்று கேட்டார் அம்மா. ‘பொட்டிலேருந்து காசு எடுத்துக் கொடுப்பியேம்மா. அந்தப் பொட்டியேலேருந்து காசு எடுத்துக்கிட்டேன்’ என்று சொன்னேன்.
உடனே அம்மா, ‘இதைத்தானே காசுன்னு கொடுத்தே’ என்று கேட்க, நான் ஆமாம் என்று தலையாட்டினேன். ‘இது காசில்லடா பாக்யம். இது தங்க மோதிரம். இந்த தங்க மோதிரத்தைக் கொண்டு போய் கொடுத்துதான் ,தேன் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டிருக்கே’ என்றார்.


அதுமட்டுமா? ‘கோனார் எவ்ளோ நல்லவர் பாரு. சின்னப்பையன் கொடுத்த மோதிரம்தானே. நாம ஏமாத்திடலாம் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல், அந்தப் பொருளை நம்மிடம் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார், பாரு’ என்று சொல்லி நெகிழ, எனக்கே ஒருமாதிரியாகிவிட்டது.


அப்போது சின்னவயசு. ஆனால் விவரம் தெரியும் போது, தங்கம், தங்கமோதிரம், அதன் மதிப்பு என்பதையெல்லாம் தாண்டி, அந்தக் கடைக்கார கோனார் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது. இப்படி சந்திக்கிற மனிதர்களாலும் வளர்க்கப்படுகிற சூழலாலும்தான் நம் கேரக்டர் உருவாகிறது. அந்த கோனார் மாதிரியான மனிதர்கள், எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள்தான், என்னை இப்படியொரு கேரக்டர்காரனாக மாற்றியிருக்கிறது என்று நினைக்கிறேன். இதெல்லாம் சேர்ந்துதான், அன்பானவனா, நன்றியுள்ளவனா, பாசம் காட்றவனா, உண்மையானவனா மாற்றியிருக்குன்னு தோணுது.


இவ்வாறு கே.பாக்யராஜ், தன் பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார்.


இயக்குநர் கே.பாக்யராஜின் வீடியோ பேட்டி:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x