Published : 28 Aug 2019 09:44 AM
Last Updated : 28 Aug 2019 09:44 AM

நடிப்பு தொழில் அல்ல.. ஜாலி!- ‘இசை காட்டேரி’ பிரேம்ஜி அமரன் நேர்காணல்

மகராசன் மோகன்

கரகாட்டக்காரன் படத்தின் பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு, இப்போதைய சூழலுக்கேற்ப அப்பா கங்கை அமரன் கதை எழுதி, அண்ணன் வெங்கட் பிரபு இயக்கினால் அதில் நடிப்பு, இசையமைப்பு இரண்டிலும் என் பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்கிறார் பிரேம்ஜி அமரன். ‘ஜாம்பி’, ‘கசட தபற’ என அடுத்தடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அவருடன் ஒரு நேர்காணல்..

நடிப்பதைவிட இசையமைப்பதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?

நான் நடிக்கணும்னு நினைத்ததே இல்லை. அண்ணன் வெங்கட்பிரபு ‘சென்னை 28’ படம் எடுத்தப்போ, ‘ஷூட்டிங் வாடா’ன்னு கூப்பிட்டான். அங்கே போனதும் நடிக்கச் சொல்லிட்டான். அதில் இருந்து அப்பப்போ சில படங்களில் நடிக்கிறேன். நடிப்பை நான் ஒரு தொழிலாக செய்யவில்லை. பொழுது போக்கான, ஜாலியான விஷயமாகத்தான் பார்க்கிறேன். சின்ன வயதில் இருந்தே இசை யில்தான் எனக்கு ஆர்வம். யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் படத்தில் இருந்து அவரது உதவியாளராக கூடவே இருக்கேன். லண்டன் போய் இசை பற்றி படிச்சிருக்கேன். இசை மீதான அளவுகடந்த பிரியத் துக்கு இதுதான் காரணம்.

‘ஜாம்பி’ பட இசை வேலைகள் முடிந்து விட்டதா?

இன்னும் 2 நாட்க ளில் பின்னணி இசை முடிந்து விடும். யோகிபாபு, யாஷிகா, யூ-டியூப்பில் ட்ரெண்ட் அடிக்கும் சுதாகர், கோபின்னு நல்ல கூட்டணி. இசையில் காமெடிக்கும், சீரியஸுக்கும் ஸ்கோர் செய்ய நிறைய வேலை இருந்தது. நல்லபடியாக செய்திருக்கேன். மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.

ஒவ்வொரு படத்துக்கு இசையமைக்கும்போதும் ஒரு புதிய பட்டத்தை இணைத்துக் கொள்கிறீர்களே, இதிலும் அது உண்டா?

‘ஆர்.கே நகர்’ படத்துக்கு ‘இசை சுனாமி’, ‘பார்ட்டி’ படத்துக்கு ‘இசை டக்கீலா’ என்று ஏற்கெனவே பட்டம் போட் டாச்சு. அது எல்லோருக்கும் தெரியும். ‘ஜாம்பி’ காமெடி, திகில் என்று கலகலப்பாக நகரும் பேய் படம் என்பதால், இந்தமுறை ‘இசை காட்டேரி பிரேம்ஜி’ என்ற பட்டம்!

‘ஜாம்பி’ பட வேலைகள் முடிந்த பிறகு, அடுத்து என்ன?

சிம்புதேவன் இயக்கிவரும் ‘கசட தபற’ படத்தில் நடிப்பு, இசையமைப்பு என ரெண்டையும் செய்கிறேன். என் பகுதி நடிப்பு முடிந்திருக்கிறது. இசை வேலைகளை தொடங்கணும். படத்தில் 6 இசையமைப்பாளர்கள். கதையும் 6 விதமாக பயணிக்கும். செம ஜாலியான வேலை. ரொம்ப திரில்லான அனுபவமும்கூட.

முன்னணி நடிகர்களின் படங்களில் பிரேம்ஜியின் இசையை பார்க்க முடியுமா?

அது செய்யணும், இது செய்யணும்னு எனக்கு எப்பவுமே லட்சியம், ஆசைகள் இருந்ததே இல்லை. ஆன்மிக வாழ்க்கையில் மட்டும்தான் ஆசை இருக்கு. காசி வரைக்கும் போயிருக்கேன். சீக்கிரமே இமயமலை ஏறணும். அதுதான் அடுத்த திட்டம்.

அப்பா கங்கை அமரன், அண்ணன் வெங்கட் பிரபு இருவரும் உங்களுக்கு பெண் பார்த்து வருகிறார்கள். நீங்களோ கல்யாணமே வேண்டாம் என்கிறீர்களே?

அவங்க பார்க்கத்தான் செய்வாங்க. வேண்டாம் என்பதில் நாம தீர்மானமா இருந்துக்க வேண்டியது தான். கல்யாணம்றது சாதாரண விஷயம் இல்ல. அது பெரிய பொறுப்பான வேலை. பணம் சம்பாதிக்கிறதுல தொடங்கி வாழ்க்கை முழுக்க நிறைய வேலை இருக்கும். அதனால எனக்கு கல்யாணத்தில் உடன்பாடு இல்லை.

‘கரகாட்டக்காரன் - 2’ எடுக்கும் திட்டத்தில் கங்கை அமரன் இருக்கிறார். நீங்களும், அண்ணன் வெங்கட் பிரபுவும் அந்தப் பணிகளில் இருப்பீர்களா?

அப்பா கதை எழுத, அண்ணன் இயக்கலாம். படத்தின் பெயரை மட்டும் எடுத்துக்கிட்டு புதிய களத்தில் செய்தால் நல்லா வரும். அப்படி செய்யும்போது நடிகராக, இசையமைப்பாளராக என் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x