Published : 23 Aug 2019 02:57 PM
Last Updated : 23 Aug 2019 02:57 PM

முதல் பார்வை: கென்னடி கிளப்

ஆண்கள் கபடியை மையப்படுத்தி ’வெண்ணிலா கபடி குழு’ இயக்கிய சுசீந்திரன், பெண்கள் கபடியை மையப்படுத்தி 'கென்னடி கிளப்' படத்தை இயக்கியுள்ளார். 'வெண்ணிலா கபடி குழு' படத்தைப் போல எந்தவொரு சுவாரசியமும் இல்லாமல் ரொம்ப மேம்போக்காக சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

'கென்னடி கிளப்' என்ற பெண்கள் கபடி குழு ஒன்றை நடத்தி வருகிறார் பாரதிராஜா. அதில் அவரது ஊரில் உள்ள ஏழை பெண்கள் எல்லாம் பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரது பழைய மாணவரான சசிகுமார் பயிற்சியளிக்கத் தொடங்குகிறார்.

அப்போது கென்னடி கிளப் வீராங்கனை ஒருவரைத் தேசிய அணியில் இடம்பெற வைக்க லஞ்சம் கேட்கிறார்கள். இதனால், அவரோ தற்கொலைக்கு முயல்கிறார். இதனைத் தொடர்ந்து மற்ற பெண்களையும் அவர்களது பெற்றோர்கள் கபடி விளையாட அனுப்ப மறுக்கிறார்கள். அந்தச் சமயத்தில் வரும் தேசிய போட்டிக்கு ஒன்றுக்காகப் பெண்களின் பெற்றோர்களிடம் பேசி 'கென்னடி கிளப்' அணியை அழைத்துச் செல்கிறார்கள்.

அந்தப் போட்டியில் அணி வென்றதா, பெண்கள் என்னவானார்கள், லஞ்சம் கேட்டவரின் நிலை என்ன என அனைத்துக்கும் விடைச் சொல்கிறது திரைக்கதை.

கபடி எப்படி தமிழ்நாட்டில் தொடங்கி, உலகமெங்கும் பரவியது என்று படம் தொடங்கும் போது, நமக்கும் ஆர்வம் தொடங்குகிறது. ஆனால், அடுத்து அடுத்து வழக்கமான காட்சிகளின் நகர்வால் அந்த ஆர்வம் குறைந்து விடுகிறது. தேர்வுக்குழு தலைவராக இருப்பவர் செய்யும் அரசியல், தமிழர்கள் அணி என்றாலே ஏளனமாக்கப் பார்ப்பது என நாம் வழக்கமாகப் பார்த்த அனைத்து படங்களிலும் நாம் பார்த்துப் பழகிய காட்சிகள் இந்தப் படத்திலும் இருக்கிறது.

கபடி வீராங்கனைகளாக நடித்திருப்பவர்கள் அனைவருமே நிஜமான வீராங்கனைகள் என்பது கபடி விளையாடும் காட்சிகள் தெரிகிறது. ஆனால், அவர்கள் அனைவருமே ஏழைகள் எனக் காட்சிப்படுத்தியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. அவர்களது குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஏனோ அவ்வளவு செயற்கைத்தனம்.

கென்னடி கிளப் படமே பாரதிராஜாவைச் சுற்றித் தான் நகர்கிறது. பெண்களின் குடும்பத்தினரிடம் உருக்கமாகப் பேசுவது என ஆரம்பத்தில் அவரது நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது. கதை நகர அவரது நடிப்பு மிகவும் செயற்கையாக மாறிவிடுகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிகள் அவரது ஓவர் ஆக்டிங் அப்பட்டமாக தெரிகிறது.

பயிற்சியாளராகவும், ரயில்வே கபடி வீரராகவும் சசிகுமார். காதல் காட்சிகள் வைக்காமல் நேரடியாகக் கதைக் களத்துக்குள் அவரை கொண்டு வந்திருப்பது ஒரு பெரிய ஆறுதல். அமைதியாக பேசி இயல்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். அதிலும் அவர் ஒரு நாயகன் என்று வலுக்கட்டாயமாகச் சண்டையைத் திணித்திருப்பது ஏனென்று தெரியவில்லை. அதன் மூலம் கதையில் எந்தவொரு மாற்றமுமில்லை.

வழக்கமான வில்லனாக முகேஷ் ஷர்மா. இந்த இடத்தில் இது தான் வசனம் என்று யூகித்தால், அது சரியாகப் பேசிவிடுகிறார். அந்தளவுக்கு வசனத்தில் கூட இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை. படத்தின் ப்ளஸ் என்றால் இமானின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் குருதேவ்வின் பணியும். கதைக்கு என்ன தேவையோ, அதைச் சிறப்பாகக் கொடுத்துள்ளனர்.

படத்தின் கதைக்களத்தில் ஏன் இந்தளவுக்கு மிகை யதார்த்தம் என்று தெரியவில்லை. கபடி அணிக்குள் வரும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளை, ரொம்பவே நீட்டி முழக்காமல், அதை உடனுக்குடன் அடுத்த காட்சிகளில் தீர்த்து வைத்திருப்பது ஆறுதல். படத்தில் வைக்கப்பட்ட காட்சிகள் அழுத்தமாக இல்லாமல் சட்டென்று நகரும் வகையில் உள்ளது.

அதுவே படத்தின் மைனஸ். ஏனென்றால், எந்தவொரு காட்சியுமே மனதில் நிற்காமல் சட்டென்று கடந்துவிடுகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கபடி மேட்ச் மட்டும் பரபரப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் பேசப்பட்டுள்ள பிரச்சினை, காட்சிகள், சம்பவங்கள் என அனைத்துமே எவ்வித அழுத்தமும் இல்லாமல் வெறும் பதிவாக மட்டுமே நகர்கிறது. கபடி அணிக்குள் வரும் பிரச்சினைகளும், அதைத் தாண்டி அவர்கள் வரும் விதமும் வழக்கமான காட்சிப்பதிவாக உள்ளது. காட்சிகள் மற்றும் வசனங்கள் என எவ்வித சுவாரசியமுமில்லாமல் நகர்வதால் வழக்கமான ஒரு படம் என்று கடந்துவிடுகிறது 'கென்னடி கிளப்'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x